1 சாமுவேல் 28:6-14

1 சாமுவேல் 28:6-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சவுல் யெகோவாவிடம் விசாரித்தான். ஆனால் அவர் கனவுகளினாலோ, ஊரீமினாலோ, இறைவாக்கினராலோ அவனுக்குப் பதில் கொடுக்கவில்லை. எனவே சவுல் தன் வேலையாட்களிடம், “நான் போய் விசாரிக்கும்படி, நீங்கள் போய் குறிசொல்லுகிற ஒருத்தியைத் தேடிப் பாருங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “எந்தோரிலே ஒருத்தி இருக்கிறாள்” என்றார்கள். எனவே சவுல் மாறுவேடம் தரித்து, அன்றிரவு அவனும் அவனோடு இரண்டு மனிதரும் அந்தப் பெண்ணிடம் போனார்கள். சவுல் அவளிடம், “நீ எனக்காக ஒரு ஆவியை விசாரி. நான் பெயரிடும் ஆவியை எழுந்துவரச் சொல்” என்றான். அந்தப் பெண்ணோ அவரிடம், “சவுல் செய்தது உமக்குத் தெரியும்தானே. அவன், ஆவியுடன் தொடர்பு கொள்கிறவர்களையும் நாட்டில் இராதபடி செய்திருக்கிறான். அப்படியிருக்க எனக்கு மரணம் ஏற்படும்படி ஏன் என் உயிருக்குக் கண்ணி வைக்கிறீர்” என்று கேட்டாள். அதற்குச் சவுல், “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீ இதற்காகத் தண்டிக்கப்பட மாட்டாய் என்பதும் நிச்சயம்” என யெகோவாவின் பெயரில் ஆணையிட்டான். அப்பொழுது அந்தப் பெண் சவுலிடம், “உமக்காக யாரை அழைக்கவேண்டும்” என்றாள். அதற்குச் சவுல், “சாமுயேலை அழைப்பி” என்றான். அந்தப் பெண் சாமுயேலைக் கண்டவுடன் உரத்த சத்தமாய்ச் சவுலைக் கூப்பிட்டு, “நீர்தானே சவுல்? ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்றாள். அதற்குச் சவுல் அரசன், “பயப்படாதே! உனக்கு என்ன தெரிகிறது?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண், “ஒரு தெய்வ உருவம் நிலத்துக்குள்ளிருந்து எழும்பி வருவது தெரிகிறது” என்றாள். அதற்குச் சவுல், “அதனுடைய தோற்றம் எப்படியிருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு அவள், “மேலங்கி உடுத்திய வயது முதிர்ந்த ஒருவர் எழும்பி வருகிறார்” என்றாள். அவர் சாமுயேல் எனச் சவுல் அறிந்துகொண்டான். உடனே தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கினான்.

1 சாமுவேல் 28:6-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சவுல் யெகோவாவிடத்தில் விசாரிக்கும்போது, யெகோவா அவனுக்குச் சொப்பனங்களினாலும், ஊரீமினாலும், தீர்க்கதரிசிகளினாலும் பதில் சொல்லவில்லை. அப்பொழுது சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண்ணைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்கள்: இதோ, எந்தோரில் இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண் இருக்கிறாள் என்றார்கள். அப்பொழுது சவுல் வேடம் மாறி, வேறு உடை அணிந்துகொண்டு, அவனும் அவனோடு இரண்டுபேரும் இரவிலே அந்த பெண்ணிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் பார்த்து: நீ எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். அதற்கு அந்த பெண்: சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடி, தடை செய்த செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என்னுடைய உயிருக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் தீங்கு வராது என்பதைக் யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் யெகோவாவின்மேல் ஆணையிட்டான். அப்பொழுது அந்த பெண்: உமக்கு நான் யாரை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றான். அந்த பெண் சாமுவேலைப் பார்த்தவுடன் மகா சத்தமாய் அலறி, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தானே சவுல் என்றாள். ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ பார்க்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண்: முதியவர் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனிதன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைவரை முகங்குனிந்து வணங்கினான்.

1 சாமுவேல் 28:6-14 பரிசுத்த பைபிள் (TAERV)

சவுல் கர்த்தரிடம் ஜெபம் செய்தான். ஆனால் கர்த்தர் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. சவுலின் கனவிலும் தேவன் பேசவில்லை. ஊரிம் மூலமாகவோ, தீர்க்கதரிசிகள் மூலமாகவோ தேவன் பதில் சொல்லவில்லை. கடைசியாக சவுல் தனது அதிகாரிகளிடம், “குறி பார்க்கிற ஒரு பெண்ணை அழைத்து வாருங்கள், போரின் முடிவை அவள் மூலம் அறிந்துகொள்வேன்” என்றான். அவனது அதிகாரிகளோ, “எந்தோரிலே குறிபார்பவள் ஒருவள் இருக்கிறாள்” என்றனர். சவுல் தன்னை மறைத்து மாறுவேடத்தில் போனான். அன்று இரவு சவுல் இரண்டு ஆட்களோடு அந்தப் பெண்ணை சந்தித்தான். அவன் அவளிடம், “நீ ஒரு ஆவியைக் கூப்பிடு. நான் விரும்பி பேர் சொல்லுகிறவனின் ஆவியை நீ அழைக்க வேண்டும்” என்றான். ஆனால் அந்தப் பெண்ணோ சவுலிடம், “சவுல் என்ன செய்தான் என்று உனக்குத் தெரியும்! அவன் குறி பார்ப்பவர்கள் எல்லாரையும் இஸ்ரவேல் நாட்டை விட்டுத் துரத்திவிட்டான். நீயும் என்னை சூழ்ச்சியின் மூலம் குற்றத்தில் அகப்படுத்தி என்னைக் கொல்லப் பார்க்கிறாய்” என்றாள். சவுல் கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டான். “இதற்காக நீ தண்டிக்கப்படமாட்டாய். இது கர்த்தருடைய ஜீவன் மீது ஆணை” என்றான். அப்பெண்ணோ சவுலிடம், “உனக்காக யாரை வரவழைக்க நீ விரும்புகிறாய்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “சாமுவேலின் ஆவியை” என்றான். அப்படியே ஆயிற்று! அப்பெண் சாமுவேலின் ஆவியைப் பார்த்து மகா சத்தமாய் கூப்பிட்டு, “நீ சூழ்ச்சி செய்துவிட்டாய்! நீ தானே சவுல்” என்று கேட்டாள். ராஜா அவளிடம், “பயப்படாதே! நீ என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான். “நான் ஆவியொன்று பூமிக்குள்ளிருந்து வெளியே வருவதைப் பார்க்கிறேன்” என்றாள். சவுல் அவளிடம், “அந்த ஆவி யாரைப் போல் இருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு அப்பெண், “அது சிறப்பான சால்வையைப் போர்த்திக் கொண்டு மிக வயதான தோற்றத்தில் தெரிகிறது” என்றாள். அப்போது சவுலுக்கு அது சாமுவேலின் ஆவி என்று புரிந்தது. சவுல் குனிந்து வணங்கினான். அவன் முகம் தரையைத் தொட்டது.

1 சாமுவேல் 28:6-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை. அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நீர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான். அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான். அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள். ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.