1 சாமு 28:6-14

1 சாமு 28:6-14 IRVTAM

சவுல் யெகோவாவிடத்தில் விசாரிக்கும்போது, யெகோவா அவனுக்குச் சொப்பனங்களினாலும், ஊரீமினாலும், தீர்க்கதரிசிகளினாலும் பதில் சொல்லவில்லை. அப்பொழுது சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண்ணைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்கள்: இதோ, எந்தோரில் இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண் இருக்கிறாள் என்றார்கள். அப்பொழுது சவுல் வேடம் மாறி, வேறு உடை அணிந்துகொண்டு, அவனும் அவனோடு இரண்டுபேரும் இரவிலே அந்த பெண்ணிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் பார்த்து: நீ எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். அதற்கு அந்த பெண்: சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடி, தடை செய்த செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என்னுடைய உயிருக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் தீங்கு வராது என்பதைக் யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் யெகோவாவின்மேல் ஆணையிட்டான். அப்பொழுது அந்த பெண்: உமக்கு நான் யாரை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றான். அந்த பெண் சாமுவேலைப் பார்த்தவுடன் மகா சத்தமாய் அலறி, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தானே சவுல் என்றாள். ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ பார்க்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண்: முதியவர் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனிதன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைவரை முகங்குனிந்து வணங்கினான்.

1 சாமு 28:6-14 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்