1 சாமுவேல் 21:10-15

1 சாமுவேல் 21:10-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அன்றே தாவீது சவுலின் பிடியிலிருந்து தப்பி காத்தின் அரசனான ஆகீஸிடம் ஓடினான். அப்பொழுது ஆகீஸின் பணியாட்கள், “இவன் நாட்டின் அரசனான தாவீது அல்லவா? மக்கள் இவனைக் குறித்தல்லவா இப்படியாக ஆடிப்பாடினார்கள்: “சவுல் கொன்றது ஆயிரங்கள், தாவீது கொன்றது பத்தாயிரங்கள்.” இந்த வார்த்தைகளைத் தாவீது மனதில் வைத்துக்கொண்டு காத்தின் அரசன் ஆகீஸிற்கு மிகவும் பயமடைந்தான். இதனால் தாவீது அவர்கள் முன்பாக ஒரு மனநோயாளிபோல் பாசாங்கு செய்தான். அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டிருக்கையில் அவன் வாயிற்கதவுகளில் கீறிக்கொண்டு, வாயிலிருந்து உமிழ்நீரைத் தாடியில் வடியவிட்டு பைத்தியக்காரன் போல் நடித்தான். அப்பொழுது ஆகீஸ் தன் பணியாட்களிடம், “இந்த மனிதனைப் பாருங்கள். இவன் ஒரு மனநோயாளி. இவனை என்னிடம் ஏன் கொண்டுவர வேண்டும்? இவ்விதமாய் இவன் என்முன் செயல்படுவதற்கு இங்கு பைத்தியக்காரர் போதாதென்றா இவனைக் கொண்டுவந்தீர்கள்? இவன் என் வீட்டுக்குள் வரத்தான் வேண்டுமா?” என்று கேட்டான்.

1 சாமுவேல் 21:10-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான். ஆகீசின் ஊழியக்காரர்கள் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? “சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு, அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் செய்கையை வேறுபடுத்தி, அவர்களிடம் பைத்தியக்காரனைப் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழசெய்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரர்களை நோக்கி: இதோ, இந்த மனிதன் பைத்தியக்காரன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன? எனக்கு முன்பாகப் பைத்திய சேட்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டு வருவதற்கு, பைத்தியக்காரர்கள் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிற்கு வரலாமா என்றான்.

1 சாமுவேல் 21:10-15 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்று தாவீது சவுலிடமிருந்து ஓடினான். அவன் காத்தின் ராஜாவாகிய ஆகீஸிடம் சென்றான். ஆகீஸின் வேலைக்காரர் அவனிடம் சொன்னார்கள், “இவன் இஸ்ரவேல் நாட்டின் ராஜாவாகிய தாவீது, இஸ்ரவேலரால் போற்றப்படுபவன். அவர்கள் ஆடிக்கொண்டே, ‘சவுல் ஆயிரம் வீரர்களைக் கொன்றிருக்கிறான். ஆனால் தாவீதோ பதினாயிரம் வீரர்களைக் கொன்றிருக்கிறான்!’” என்று பாடுகின்றனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தாவீது உற்று கவனித்தான். அவன் காத்தின் ராஜாவாகிய ஆகீஸுக்கு மிகவும் பயந்தான். எனவே, அவன் ஆகீஸ் அதிகாரிகளுக்கு முன்பு பைத்தியக்காரனைப் போல் நடித்தான். வாசற்படிகளில் கீறிக் கொண்டான். வாயில் நுரைதள்ளி தாடியில் ஒழுகவிட்டான். ஆகீஸ் தனது அதிகாரிகளிடம், “இவனைப் பாருங்கள்! இவன் பைத்தியமடைந்தவன்! என்னிடம் ஏன் அழைத்து வந்தீர்கள்? என்னிடம் இப்படிபட்டவர்கள் போதுமானப் பேர் உள்ளனர். இவனை மீண்டும் என் வீட்டுக்குள் வர அனுமதிக்காதீர்கள்!” என்றான்.

1 சாமுவேல் 21:10-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான். ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு, அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன? எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டு வருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்