1 சாமுயேல் 21:10-15

1 சாமுயேல் 21:10-15 TCV

அன்றே தாவீது சவுலின் பிடியிலிருந்து தப்பி காத்தின் அரசனான ஆகீஸிடம் ஓடினான். அப்பொழுது ஆகீஸின் பணியாட்கள், “இவன் நாட்டின் அரசனான தாவீது அல்லவா? மக்கள் இவனைக் குறித்தல்லவா இப்படியாக ஆடிப்பாடினார்கள்: “சவுல் கொன்றது ஆயிரங்கள், தாவீது கொன்றது பத்தாயிரங்கள்.” இந்த வார்த்தைகளைத் தாவீது மனதில் வைத்துக்கொண்டு காத்தின் அரசன் ஆகீஸிற்கு மிகவும் பயமடைந்தான். இதனால் தாவீது அவர்கள் முன்பாக ஒரு மனநோயாளிபோல் பாசாங்கு செய்தான். அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டிருக்கையில் அவன் வாயிற்கதவுகளில் கீறிக்கொண்டு, வாயிலிருந்து உமிழ்நீரைத் தாடியில் வடியவிட்டு பைத்தியக்காரன் போல் நடித்தான். அப்பொழுது ஆகீஸ் தன் பணியாட்களிடம், “இந்த மனிதனைப் பாருங்கள். இவன் ஒரு மனநோயாளி. இவனை என்னிடம் ஏன் கொண்டுவர வேண்டும்? இவ்விதமாய் இவன் என்முன் செயல்படுவதற்கு இங்கு பைத்தியக்காரர் போதாதென்றா இவனைக் கொண்டுவந்தீர்கள்? இவன் என் வீட்டுக்குள் வரத்தான் வேண்டுமா?” என்று கேட்டான்.