1 சாமுவேல் 18:1-4

1 சாமுவேல் 18:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான். சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள். யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.

1 சாமுவேல் 18:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சவுல் தாவீதுடன் பேசி முடித்தபின், யோனத்தான் தாவீதுடன் ஆவியில் ஒன்றிணைந்தான். யோனத்தான் தாவீதைத் தன்னைப்போல் நேசித்தான். அன்றிலிருந்து சவுல் தாவீதை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப் போகவிடாமல் தன்னுடனேயே வைத்துக்கொண்டான். யோனத்தான் தன்னைப்போல் தாவீதில் அன்பு செலுத்தியபடியால், அவன் தாவீதுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். யோனத்தான் தான் உடுத்தியிருந்த மேலங்கியைக் கழற்றி, அதனுடன் தனது உடைகளையும் தாவீதுக்குக் கொடுத்தான். அத்துடன் தனது வாள், வில், இடைக்கச்சை முதலியவற்றையும் அவனுக்குக் கொடுத்தான்.

1 சாமுவேல் 18:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றாக இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போல நேசித்தான். சவுல் அவனை அவனுடைய தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக விடாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். யோனத்தான் தாவீதைத் தன்னுடைய ஆத்துமாவைப்போல நேசித்ததால், அவனும் இவனும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் உடைகளையும், தன் பட்டயத்தையும், தன்னுடைய வில்லையும், தன்னுடைய கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.

1 சாமுவேல் 18:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

சவுல் தாவீதோடு பேசி முடிந்ததும், யோனத்தானும் தாவீதும் நெருங்கிய நண்பர்களானார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான். சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக்கொண்டான். அவனைத் தன் தந்தையிடம் திரும்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து அவனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். யோனத்தான் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். அவன் தன் சீருடையையும் கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். மேலும் தனது வில், பட்டயம் மற்றும் கச்சையையும் கூட தாவீதுக்கே கொடுத்தான்.