1 சாமுவேல் 17:17-26
1 சாமுவேல் 17:17-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒரு நாள் ஈசாய் தன் மகன் தாவீதிடம், “இந்த எப்பா அளவு வறுத்த தானியத்தையும், இந்த பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கும் உன் சகோதரரிடம் விரைவாகப் போ. அத்துடன் இந்தப் பத்துப் பால்கட்டிகளையும் அவர்களுடைய படைத் தலைவனிடம் கொடுத்து, உன் சகோதரர் நலமாய் இருக்கிறார்களா என விசாரித்து வா. அவர்கள் சவுலுடனும், இஸ்ரயேல் மனிதர்களுடனும் சேர்ந்து ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தியரோடு யுத்தம்செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றான். தாவீது அதிகாலையில் எழுந்து மந்தையை ஒரு மேய்ப்பனின் பாதுகாப்பில் விட்டு, ஈசாய் தனக்கு அறிவுறுத்தியபடியே, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனான். படைகள் போர் ஒலி எழுப்பிக்கொண்டு யுத்த நிலைகளுக்கு அணிவகுத்துப் போகையில் அவன் முகாமுக்கு வந்துசேர்ந்தான். இஸ்ரயேலரும், பெலிஸ்தியரும் போருக்கு ஆயத்தமாக நேருக்குநேர் நின்றார்கள். தாவீது தான் கொண்டுவந்த பொருட்களை உணவுவிநியோக பொறுப்பாளனிடம் கொடுத்துவிட்டு, படை அணிவகுத்து நின்ற இடத்திற்கு ஓடித் தன் சகோதரரை வாழ்த்தினான். அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் அந்த பெலிஸ்திய மாவீரன் தன் அணியிலிருந்து வெளியே வந்து வலிமையான அறைகூவலைச் சொன்னான். தாவீது அதைக் கேட்டான். இஸ்ரயேலர் அனைவரும் அந்த மனிதனைக் கண்டவுடன் மிகவும் பயந்து ஓடினார்கள். அவ்வேளையில் இஸ்ரயேலர், “இந்த மனிதன் தொடர்ந்து எப்படி வெளியே வருகிறான் என்று பார்த்தீர்களா? அவன் இஸ்ரயேலருக்கு அறைகூவல் விடுக்கவே வருகிறான். இவனைக் கொல்பவனுக்கு அரசன் பெரும் செல்வத்தைக் கொடுப்பான். தன் மகளையும் திருமணம் செய்துகொடுத்து இஸ்ரயேலில் அவனுடைய தகப்பனின் குடும்பத்திற்கு வரிவிலக்கையும் கொடுப்பான்” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அதைக்கேட்ட தாவீது அருகில் நின்ற வீரரிடம், “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலருக்கு நேரிட்ட அவமானத்தை நீக்குபவனுக்கு என்ன செய்யப்படும்? வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தியன் யார்?” என்று கேட்டான்.
1 சாமுவேல் 17:17-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஈசாய் தன்னுடைய மகனான தாவீதை பார்த்து: உன்னுடைய சகோதரர்களுக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கிற உன்னுடைய சகோதரர்களிடத்தில் ஓட்டமாகப் போய், இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர்கள் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான். அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர்கள் எல்லோரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்துக்கொண்டிருந்தார்கள். தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; இராணுவங்கள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள். இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்களும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, பொருட்களை காக்கிறவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, இராணுவங்களுக்குள் ஓடி, தன் சகோதரர்களைப்பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான். அவன் இவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்திய வீரன் பெலிஸ்தர்களின் இராணுவங்களிலிருந்து எழும்பிவந்து நின்று, முன்பு சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான். இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்த மனிதனைப் பார்க்கும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்திற்கு விலகி ஓடிப்போவார்கள். அந்தநேரத்தில் இஸ்ரவேலர்கள்: வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா?, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்கிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய மகளைத் தந்து, அவனுடைய தகப்பன் வீட்டாரை இஸ்ரவேலிலே வரியில்லாமல் வாழச் செய்வார் என்றார்கள். அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான்.
1 சாமுவேல் 17:17-26 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒருநாள் ஈசாய் தாவீதிடம், “கூடையில் வறுத்த பயிரையும், 10 அப்பங்களையும் கொண்டு போய் முகாமில் உள்ள உன் சகோதரர்களுக்கு கொடு. இந்த 10 பாலாடைக் கட்டிகளையும் உன் சகோதரர் குழுவின் 1,000 வீரருக்கு அதிபதியினிடம் கொடு. உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் பார். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ஏதேனும் வாங்கி வா! ஏலா பள்ளத்தாக்கில் உன் சகோதரர்கள் சவுலின் சேனையில் பெலிஸ்தருக்கு எதிராகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்” என்றான். அதிகாலையில் தாவீது வேறு ஒரு மேய்ப்பவனிடம் ஆடுகளை ஒப்படைத்தான். தாவீது உணவை எடுத்துக்கொண்டு ஈசாய் சொன்னபடி புறப்பட்டான். தாவீது தனது வண்டியை முகாமுக்குச் செலுத்தினான். தாவீது வந்து சேர்ந்தபோது வீரர்கள் தங்கள் போர்புரியும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தனர். வீரர்கள் தங்கள் போர் முழக்கங்களை எழுப்ப துவங்கினார்கள். இஸ்ரவேலரும் பெலிஸ்தியரும் அணிவகுத்து போருக்குத் தயாரானார்கள். தாவீது தான் கொண்டு போனதை, பொருட்களின் காப்பாளனிடம் கொடுத்தான். பின் இஸ்ரவேல் வீரர்களின் அணிக்கு ஓடி, தன் சகோதரர்களைக் குறித்து விசாரித்தான். தன் சகோதரர்களோடு பேச ஆரம்பித்தான். அப்போது, கோலியாத் பெலிஸ்தர் முகாமிலிருந்து வெளியே வந்து, வழக்கம்போல கேலிச் செய்தான். அவன் சொன்னதையெல்லாம் தாவீது கேட்டான். அவனைக் கண்டு இஸ்ரவேலர் பயந்து ஓடிப்போனார்கள். அவர்களுக்கு அவன் மீது பெரிய பயமிருந்தது. இஸ்ரவேலர், “கோலியாத் வெளியில் வந்து இஸ்ரவேலரை மீண்டும், மீண்டும் கேலிக்குள்ளாக்கினதைப் பார்த்தீர்களா! அவனை யார் கொன்றாலும் சவுல் ராஜா அவனுக்கு நிறையப் பணம் கொடுத்து, தனது குமாரத்தியை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான். சவுல் அவனது குடும்பத்திற்கு இஸ்ரவேலின் மத்தியில் சுதந்திரம் அளிப்பான்” என்றார்கள். தாவீதோ அவர்களிடம், “அவன் என்ன சொல்லுவது? அவனைக் கொன்று இஸ்ரவேலில் இருந்து அவமானத்தை களைபவனுக்கு விருது என்ன வேண்டிக்கிடக்கிறது? இஸ்ரவேலர் இந்த நிந்தையைச் சுமக்க வேண்டுமா? இத்தனைக்கும் யார் இந்த கோலியாத்? இவன் யாரோ அந்நியன் சாதாரண பெலிஸ்தியன். ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு எதிராகப் பேச அவன் எப்படி நினைக்கலாம்?” என்று கேட்டான்.
1 சாமுவேல் 17:17-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய், இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான். அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள். இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான். அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்த பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான். இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள். அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள். அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்.