1 சாமுயேல் 17:17-26

1 சாமுயேல் 17:17-26 TCV

ஒரு நாள் ஈசாய் தன் மகன் தாவீதிடம், “இந்த எப்பா அளவு வறுத்த தானியத்தையும், இந்த பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கும் உன் சகோதரரிடம் விரைவாகப் போ. அத்துடன் இந்தப் பத்துப் பால்கட்டிகளையும் அவர்களுடைய படைத் தலைவனிடம் கொடுத்து, உன் சகோதரர் நலமாய் இருக்கிறார்களா என விசாரித்து வா. அவர்கள் சவுலுடனும், இஸ்ரயேல் மனிதர்களுடனும் சேர்ந்து ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தியரோடு யுத்தம்செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றான். தாவீது அதிகாலையில் எழுந்து மந்தையை ஒரு மேய்ப்பனின் பாதுகாப்பில் விட்டு, ஈசாய் தனக்கு அறிவுறுத்தியபடியே, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனான். படைகள் போர் ஒலி எழுப்பிக்கொண்டு யுத்த நிலைகளுக்கு அணிவகுத்துப் போகையில் அவன் முகாமுக்கு வந்துசேர்ந்தான். இஸ்ரயேலரும், பெலிஸ்தியரும் போருக்கு ஆயத்தமாக நேருக்குநேர் நின்றார்கள். தாவீது தான் கொண்டுவந்த பொருட்களை உணவுவிநியோக பொறுப்பாளனிடம் கொடுத்துவிட்டு, படை அணிவகுத்து நின்ற இடத்திற்கு ஓடித் தன் சகோதரரை வாழ்த்தினான். அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் அந்த பெலிஸ்திய மாவீரன் தன் அணியிலிருந்து வெளியே வந்து வலிமையான அறைகூவலைச் சொன்னான். தாவீது அதைக் கேட்டான். இஸ்ரயேலர் அனைவரும் அந்த மனிதனைக் கண்டவுடன் மிகவும் பயந்து ஓடினார்கள். அவ்வேளையில் இஸ்ரயேலர், “இந்த மனிதன் தொடர்ந்து எப்படி வெளியே வருகிறான் என்று பார்த்தீர்களா? அவன் இஸ்ரயேலருக்கு அறைகூவல் விடுக்கவே வருகிறான். இவனைக் கொல்பவனுக்கு அரசன் பெரும் செல்வத்தைக் கொடுப்பான். தன் மகளையும் திருமணம் செய்துகொடுத்து இஸ்ரயேலில் அவனுடைய தகப்பனின் குடும்பத்திற்கு வரிவிலக்கையும் கொடுப்பான்” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அதைக்கேட்ட தாவீது அருகில் நின்ற வீரரிடம், “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலருக்கு நேரிட்ட அவமானத்தை நீக்குபவனுக்கு என்ன செய்யப்படும்? வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தியன் யார்?” என்று கேட்டான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 சாமுயேல் 17:17-26