1 சாமுவேல் 16:1-7

1 சாமுவேல் 16:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா சாமுயேலிடம், “இஸ்ரயேலர்மேல் அரசனாயிராதபடி நான் புறக்கணித்த சவுலுக்காக நீ எவ்வளவு காலம் துக்கப்படுவாய். கொம்பில் எண்ணெய் நிரப்பிக்கொண்டு புறப்பட்டு வா. நான் உன்னைப் பெத்லெகேமியனான ஈசாயிடம் அனுப்பப்போகிறேன். அவனுடைய மகன்களில் ஒருவனை அரசனாக நான் தெரிவுசெய்திருக்கிறேன்” என்றார். அதற்கு சாமுயேல், “நான் எப்படிப்போவேன்? சவுல் இதைக் கேள்விப்பட்டால் என்னைக் கொன்றுவிடுவானே?” என்றான். அதற்கு யெகோவா, “நான் யெகோவாவுக்குப் பலியிட வந்தேன் என்று சொல்லி இளம்பசுவை ஒன்றை உன்னுடன் கொண்டுபோ. அவ்வாறு பலி செலுத்தும்போது நீ ஈசாவுக்கு அழைப்பு கொடு. அப்பொழுது நீ செய்யவேண்டியதை உனக்கு நான் காண்பிப்பேன். நான் குறிப்பிடுபவனை நீ அபிஷேகம் செய்யவேண்டும்” என்றார். யெகோவா சொன்னபடியே சாமுயேல் செய்தான். பின்பு சாமுயேல் பெத்லெகேமுக்கு வந்தபோது அப்பட்டணத்தின் முதியவர்கள் நடுக்கத்துடன் அவனைச் சந்திக்க வந்தார்கள். “நீர் சமாதானத்துடன் தான் வருகிறீரா?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்குச் சாமுயேல், “ஆம் சமாதானத்துடன் தான் வந்திருக்கிறேன். நான் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்திருக்கிறேன். நீங்களும் உங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு என்னுடன் பலிசெலுத்த வாருங்கள்” என்றான். பின்பு ஈசாயையும் அவன் மகன்களையும் பரிசுத்தப்படுத்தி அவர்களையும் பலிக்கு அழைத்தான். அவர்கள் அங்கே வந்தபோது, சாமுயேல் எலியாபைக் கண்டவுடன், “உண்மையாகவே யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவன் என்முன் நிற்கிறான்” என நினைத்தான். ஆனால் யெகோவா சாமுயேலிடம், “இவனுடைய தோற்றத்தையும், உயரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டாம். நான் இவனைப் புறக்கணித்து விட்டேன். ஏனெனில் மனிதர் பார்ப்பதைப் போல் யெகோவா பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்ப்பான். யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்று சொன்னார்.

1 சாமுவேல் 16:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா சாமுவேலைப் பார்த்து: இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எதுவரை துக்கப்பட்டுக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்திற்கு உன்னை அனுப்புவேன்; அவனுடைய மகன்களில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது யெகோவா: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், யெகோவாவுக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி, ஈசாயைப் பலிவிருந்திற்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்கிறவனை எனக்காக அபிஷேகம்செய்வாயாக என்றார். யெகோவா சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அந்த ஊரின் மூப்பர்கள் நடுக்கத்தோடு அவனுக்கு எதிராக வந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். அதற்கு அவன்: சமாதானம் தான்; யெகோவாவுக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, என்னோடு பலிவிருந்திற்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தம்செய்து, அவர்களைப் பலிவிருந்திற்கு அழைத்தான். அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: யெகோவாவால் அபிஷேகம் செய்யப்படுபவன் இவன்தானோ என்றான். யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

1 சாமுவேல் 16:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் சாமுவேலிடம், “நீ எவ்வளவு காலம் சவுலுக்காக வருந்துவாய்? நான் ராஜ பதவியிலிருந்து புறக்கணித்த பின்னும் வருந்துகிறாயே. உனது கொம்பை எண்ணெயால் நிரப்பு. பெத்லேகேமிற்குச் செல். உன்னை ஈசாயினிடம் அனுப்புகிறேன். அவன் அங்கே இருக்கிறான். அவனது குமாரர்களில் ஒருவனையே புதிய ராஜாவாக நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்” என்றார். சாமுவேலோ, “நான் போனால், அதனை சவுல் அறிவான். என்னைக் கொல்ல முயல்வான்” என்றான். கர்த்தர், “பெத்லேகேமிற்கு ஒரு இளம் கன்றுக்குட்டியை எடுத்துக்கொண்டு போ, ‘கர்த்தருக்கு பலி கொடுக்க வந்திருக்கிறேன்’ என்று சொல். ஈசாயையும் பலிக்கு அழைத்தனுப்பு. பிறகு செய்ய வேண்டியது என்ன என்பதைக் காட்டுவேன். நான் காட்டுகிறவனை ராஜாவாக அபிஷேகம் செய்” என்றார். சாமுவேல் கர்த்தர் சொன்னபடி செய்தான். சாமுவேல் பெத்லேகேம் சென்றதும் அங்குள்ள மூப்பர்கள் நடுங்கினார்கள். அவர்கள் சாமுவேலை சந்தித்து, “சமாதானத்தோடு வந்துள்ளீரா?” என்று கேட்டனர். அதற்கு சாமுவேல், “ஆமாம், நான் சமாதானத்தோடு வருகிறேன். நான் கர்த்தருக்கு பலிகொடுக்க வந்துள்ளேன். உங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு என்னோடு பலி செலுத்த வாருங்கள்” என்றான். சாமுவேல் ஈசாயையும் அவனது குமாரர்களையும் ஆயத்தம் செய்துப் பலியில் பங்குகொள்ள அழைத்தான். அவர்கள் சாமுவேலிடம் வந்து சேர்ந்ததும் எலியாபைப் பார்த்தான். சாமுவேல் “நிச்சயமாக இவன்தான் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்!” என எண்ணினான். ஆனால் கர்த்தர் சாமுவேலிடம், “எலியாப் உயரமானவன், அழகானவன். ஆனால் அப்படி சிந்திக்க வேண்டாம். ஜனங்கள் பார்க்கிறபடி தேவன் கவனிக்கிறதில்லை. ஜனங்கள் ஒருவனின் வெளித் தோற்றத்தைப் பார்க்கிறார்கள். கர்த்தரோ அவன் இருதயத்தைப் பார்க்கிறார். எலியாப் சரியானவன் அல்ல” என்றார்.

1 சாமுவேல் 16:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை, தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி, ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார். கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான். அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான். கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.