1 சாமு 16:1-7

1 சாமு 16:1-7 IRVTAM

யெகோவா சாமுவேலைப் பார்த்து: இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எதுவரை துக்கப்பட்டுக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்திற்கு உன்னை அனுப்புவேன்; அவனுடைய மகன்களில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது யெகோவா: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், யெகோவாவுக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி, ஈசாயைப் பலிவிருந்திற்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்கிறவனை எனக்காக அபிஷேகம்செய்வாயாக என்றார். யெகோவா சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அந்த ஊரின் மூப்பர்கள் நடுக்கத்தோடு அவனுக்கு எதிராக வந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். அதற்கு அவன்: சமாதானம் தான்; யெகோவாவுக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, என்னோடு பலிவிருந்திற்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தம்செய்து, அவர்களைப் பலிவிருந்திற்கு அழைத்தான். அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: யெகோவாவால் அபிஷேகம் செய்யப்படுபவன் இவன்தானோ என்றான். யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.