1 சாமுவேல் 13:1-7

1 சாமுவேல் 13:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சவுல் அரசனானபோது முப்பது வயதுடையவனாயிருந்தான், அவன் இஸ்ரயேலில் நாற்பத்து இரண்டு வருடங்கள் அரசாண்டான். சவுல் இஸ்ரயேலிலிருந்து மூவாயிரம் பேரைத் தெரிந்துகொண்டான். அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலுடன் மிக்மாசிலும், பெத்தேல் மலைநாட்டிலும் இருந்தார்கள். மற்ற ஆயிரம்பேர் யோனத்தானுடன் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்தார்கள். சவுல் மற்றவர்களை அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவிட்டான். யோனத்தான் கேபாவிலிருந்த பெலிஸ்தியரின் காவல் அரணைத் தாக்கினான். இதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டார்கள். பின்பு சவுல் எக்காளத்தை நாடெங்கிலும் ஊதுவித்து, “இதை எபிரெயர் கேட்கட்டும்” என்று சொன்னான். “சவுல் பெலிஸ்தியரின் காவலரைத் தாக்கினதால் இஸ்ரயேலர் பெலிஸ்தியரின் வெறுப்புக்கு ஆளானார்கள் என்ற செய்தியை இஸ்ரயேலர் கேள்விப்பட்டார்கள்.” அப்பொழுது மக்கள் சவுலுடன் சேரும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். பெலிஸ்தியர் மூவாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரர்களோடும், கடற்கரை மணல்போன்ற எண்ணற்ற படை வீரர்களோடும் இஸ்ரயேலருடன் போரிடும்படி ஒன்றுகூடினார்கள். அவர்கள் போய் பெத் ஆவெனுக்குக் கிழக்கேயுள்ள மிக்மாசிலே முகாமிட்டார்கள். தங்களுடைய சூழ்நிலை ஆபத்தானது என்றும், தங்கள் படையினர் நெருக்கடிக்குள்ளாயிருக்கிறார்கள் என்றும் இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் கலக்கமடைந்து, குகைகளிலும், அடர்ந்த காடுகளிலும், கற்பாறைகள் மத்தியிலும், குழிகளிலும், துரவுகளிலும் ஒளித்துக்கொண்டார்கள். எபிரெயரில் சிலர் யோர்தானைக் கடந்து காத் நாட்டுக்கும், கீலேயாத் நாட்டிற்கும்கூட போனார்கள். சவுலோ கில்காலிலே தங்கியிருந்தான். படையினர் பயத்தால் நடுங்கிக்கொண்டு அவனுடனிருந்தார்கள்.

1 சாமுவேல் 13:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சவுல் அரசாட்சி செய்து, ஒரு வருடமானது; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருடம் அரசாண்டபோது, இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்காகத் தெரிந்துகொண்டான்; அவர்களில் 2,000 பேர் சவுலோடு மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், 1,000 பேர் யோனத்தானோடு பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற மக்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான். யோனத்தான் கேபாவிலே முகாமிட்டிருந்த பெலிஸ்தர்களை முறியடித்தான்; பெலிஸ்தர்கள் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகவே, இதை எபிரெயர்கள் கேட்கட்டும் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதச்செய்தான். முகாமிட்டிருந்த பெலிஸ்தர்களைச் சவுல் முறியடித்தான் என்றும், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, மக்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். பெலிஸ்தர்கள் இஸ்ரவேலோடு யுத்தம்செய்ய 30,000 இரதங்களோடும், 6,000 குதிரைவீரரோடும், கடற்கரை மணலைப்போல எண்ணற்ற மக்களோடும் கூடிவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே முகாமிட்டார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்கள் தங்களுக்கு உண்டான இக்கட்டை பார்த்தபோது, மக்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், கிணறுகளிலும், குகைகளிலும் ஒளிந்துகொண்டார்கள். எபிரெயர்களில் சிலர் யோர்தானையும் கடந்து, காத் நாட்டிற்கும் கீலேயாத் தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; எல்லா மக்களும் பயந்து அவனுக்குப் பின்சென்றார்கள்.

1 சாமுவேல் 13:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

சவுல் ராஜாவாகி ஓராண்டு ஆயிற்று. பின்பு, அவன் இஸ்ரவேலை இரண்டு ஆண்டுகள் ஆண்ட பிறகு அவன் 3,000 பேரை இஸ்ரவேலில் தேர்ந்தெடுத்தான். மலை நாடான பெத்லேலில் உள்ள மிக்மாசில் அவனோடு 2,000 பேர் இருந்தனர். 1,000 பேர் பென்யமீனில் உள்ள கிபியாவில் யோனத்தானோடு இருந்தனர். சவுல் மீதி உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பினான். யோனத்தான் பெலிஸ்தர்களை கேபாவில் தோற்கடித்தான். இதனை பெலிஸ்தர் கேள்விப்பட்டு, “இஸ்ரவேலர் புரட்சி செய்கின்றனர்” என்றார்கள். சவுல், “நடந்த நிகழ்ச்சியை எபிரெயர் கேட்க்கட்டும்” என்று சொன்னான். எனவே இஸ்ரவேல் நாடுகளில் எக்காளம் ஊதும்படி சொன்னான். இஸ்ரவேலர் அனைவரும் செய்தியைக் கேட்டனர். அவர்கள், “சவுல் பெலிஸ்தரின் தலைவனைக் கொன்றான். இப்போது உண்மையில் பெலிஸ்தர் இஸ்ரவேலரை வெறுக்கிறார்கள்!” என்றனர். கில்காலில் கூடும்படி சவுல் இஸ்ரவேலரை அழைத்தான். பெலிஸ்தர்களும் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிட ஒன்று கூடினார்கள். அவர்களிடம் 30,000 ரதங்களும் 6,000 குதிரைவீரரோடும் இருந்தனர். கடற்கரை மணலைப் போல் மிக்மாசிலே (பெத்தாவேனுக்கு கிழக்கே மிக்மாஸ் இருந்தது) கூடினார்கள். இஸ்ரவேலர் தாம் தொல்லையில் சிக்குண்டிருப்பதாக அறிந்தனர். வலைக்குள் சிக்கியதாக அறிந்துக் குகைகளிலும் மலைப் பிளவுகளிலும் ஒளிந்துக்கொள்ள ஓடினார்கள். கிணறுகள், பாறைகள், நிலத்துவாரங்களில் ஒளிந்தனர். சிலர் யோர்தான் நதியைக் கடந்து காத், கீலேயாத் போன்ற நிலங்களுக்கு ஓடினார்கள். சவுல் கில்காலிலேயே இருந்தான். படையில் உள்ளவர்கள் நடுங்கினார்கள்.

1 சாமுவேல் 13:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது, இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான். யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான். தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள். எபிரெயரில் சிலர் யோர்தானையும் கடந்து, காத் நாட்டிற்கும் கீலேயாத் தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; சகல ஜனங்களும் பயந்துகொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள்.