சாமுவேலின் முதலாம் புத்தகம் 13:1-7

சாமுவேலின் முதலாம் புத்தகம் 13:1-7 TAERV

சவுல் ராஜாவாகி ஓராண்டு ஆயிற்று. பின்பு, அவன் இஸ்ரவேலை இரண்டு ஆண்டுகள் ஆண்ட பிறகு அவன் 3,000 பேரை இஸ்ரவேலில் தேர்ந்தெடுத்தான். மலை நாடான பெத்லேலில் உள்ள மிக்மாசில் அவனோடு 2,000 பேர் இருந்தனர். 1,000 பேர் பென்யமீனில் உள்ள கிபியாவில் யோனத்தானோடு இருந்தனர். சவுல் மீதி உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பினான். யோனத்தான் பெலிஸ்தர்களை கேபாவில் தோற்கடித்தான். இதனை பெலிஸ்தர் கேள்விப்பட்டு, “இஸ்ரவேலர் புரட்சி செய்கின்றனர்” என்றார்கள். சவுல், “நடந்த நிகழ்ச்சியை எபிரெயர் கேட்க்கட்டும்” என்று சொன்னான். எனவே இஸ்ரவேல் நாடுகளில் எக்காளம் ஊதும்படி சொன்னான். இஸ்ரவேலர் அனைவரும் செய்தியைக் கேட்டனர். அவர்கள், “சவுல் பெலிஸ்தரின் தலைவனைக் கொன்றான். இப்போது உண்மையில் பெலிஸ்தர் இஸ்ரவேலரை வெறுக்கிறார்கள்!” என்றனர். கில்காலில் கூடும்படி சவுல் இஸ்ரவேலரை அழைத்தான். பெலிஸ்தர்களும் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிட ஒன்று கூடினார்கள். அவர்களிடம் 30,000 ரதங்களும் 6,000 குதிரைவீரரோடும் இருந்தனர். கடற்கரை மணலைப் போல் மிக்மாசிலே (பெத்தாவேனுக்கு கிழக்கே மிக்மாஸ் இருந்தது) கூடினார்கள். இஸ்ரவேலர் தாம் தொல்லையில் சிக்குண்டிருப்பதாக அறிந்தனர். வலைக்குள் சிக்கியதாக அறிந்துக் குகைகளிலும் மலைப் பிளவுகளிலும் ஒளிந்துக்கொள்ள ஓடினார்கள். கிணறுகள், பாறைகள், நிலத்துவாரங்களில் ஒளிந்தனர். சிலர் யோர்தான் நதியைக் கடந்து காத், கீலேயாத் போன்ற நிலங்களுக்கு ஓடினார்கள். சவுல் கில்காலிலேயே இருந்தான். படையில் உள்ளவர்கள் நடுங்கினார்கள்.