1 பேதுரு 1:17-25
1 பேதுரு 1:17-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள். ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை. குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள். உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார். அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள். ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன, ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது.
1 பேதுரு 1:17-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அன்றியும், பட்சபாதம் இல்லாமல் அவனவனுடைய செய்கைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொள்ளுகிறதினால், இங்கே அந்நியர்களைப்போல பயத்தோடு வாழுங்கள். உங்களுடைய முன்னோர்களால் பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்துவந்த வீணான செயல்களில் இருந்து, அழிவுள்ள பொருட்களாகிய வெள்ளியினாலும் தங்கத்தினாலும் மீட்கப்படாமல், குற்றம் இல்லாத, மாசு இல்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையுயர்ந்த இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே. அவர் உலகம் உருவாவதற்கு முன்னமே தெரிந்துகொள்ளப்பட்டவராக இருந்து, தமது மூலமாக தேவன்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார். உங்களுடைய விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேல் இருப்பதற்காக, அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்; அழிவுள்ள விதையினாலே இல்லை, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கிறதும், ஜீவன் உள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத விதையினாலே மீண்டும் பிறந்திருக்கிறீர்களே. மனிதர்கள் எல்லோரும் புல்லைப்போலவும், மனிதனுடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவும் இருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்;” உங்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.
1 பேதுரு 1:17-25 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவனிடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவரை பிதா என்று அழையுங்கள். ஒவ்வொரு மனிதனின் வேலையையும் சமமாக நோக்கி தேவன் பாரபட்சம் இன்றி நியாயம் வழங்குகிறார். எனவே நீங்கள் இவ்வுலகில் வாழும்போது தேவனிடம் பயத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டும். நீங்கள் கடந்த காலத்தில் தகுதியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தீர்கள். உங்கள் முன்னோர்கள் மூலமாக அவ்வாழ்க்கை முறையை நீங்கள் அறிந்துகொண்டீர்கள். அப்படிப்பட்ட வாழ்விலிருந்து நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என அறிவீர்கள். இந்த இரட்சிப்பு அழியும் பொருட்களாகிய பொன், வெள்ளி போன்றவற்றால் அல்ல, குற்றம் குறையில்லாத ஆட்டுக் குட்டியான இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தினால் நிகழ்ந்ததாகும். உலகம் உருவாக்கப்படும் முன்னே கிறிஸ்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் உங்கள் பயனுக்காக இந்தக் கடைசி நாட்களில் வெளிப்படுத்தப்பட்டார். நீங்கள் கிறிஸ்துவின் மூலமாக தேவனை விசுவாசிக்கிறீர்கள். தேவன் கிறிஸ்துவை மரணத்தினின்று எழும்பி அவருக்கு மகிமையை அளித்தார். எனவே உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவனில் உள்ளன. உண்மைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உங்களை நீங்களே பரிசுத்தமுடையோராக ஆக்கிக்கொண்டீர்கள். இதன் மூலம் உங்கள் உண்மையான சகோதர அன்பைக் காட்டமுடியும். எனவே இப்பொழுது பரிசுத்தமான இதயத்தோடு ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். நீங்கள் மறுபடியும் பிறந்திருப்பது அழியத்தக்க விதையில் இருந்து அல்ல, அழிவேயற்ற விதையின் மூலம் ஆகும். எப்போதும் தொடரும் தேவனுடைய அழிவில்லாத விதையாகிய வசனங்களினால் மீண்டும் பிறந்துள்ளீர்கள். வேதவாக்கியங்கள், “எல்லா மனிதர்களும் புல்லைப் போன்றவர்கள். புல்லின் மலரைப் போன்றே அவர்களின் மகிமையும் காணப்படும். புல் உலர்ந்து போகிறது. பூக்கள் உதிர்கின்றன. ஆனால் கர்த்தரின் வார்த்தையோ என்றும் நிலைத்திருக்கிறது”
1 பேதுரு 1:17-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார். உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.