1 பேதுரு 1:17-25

1 பேதுரு 1:17-25 TCV

ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள். ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை. குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள். உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார். அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள். ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன, ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது.