1 இராஜாக்கள் 18:1-24
1 இராஜாக்கள் 18:1-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீண்டகாலத்திற்குபின் மூன்றாம் வருடத்தில் எலியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அவர் அவனிடம், “ஆகாபுக்கு முன் போய் நில்; நான் நாட்டிற்கு மழையை அனுப்பப்போகிறேன்” என்றார். அப்படியே எலியா ஆகாபிடம் போனான். அக்காலத்தில் சமாரியாவில் பஞ்சம் மிகவும் கடுமையாயிருந்தபடியினால், ஆகாப் அரண்மனைக்குப் பொறுப்பாயிருந்த ஒபதியாவை வரும்படி கட்டளை கொடுத்தான். ஒபதியா யெகோவாவிடம் மிகவும் பயபக்தி உள்ளவனாயிருந்தான். யேசபேல் யெகோவாவின் இறைவாக்கினர்களைக் கொலைசெய்தபோது ஒபதியா நூறு இறைவாக்கு உரைப்பவர்களை அழைத்து இரண்டு குகைகளில் ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, உணவும் தண்ணீரும் கொடுத்துப் பாதுகாத்தான். ஆகாப் ஒபதியாவைப் பார்த்து, “நீ நாடு முழுவதும்போய், பள்ளத்தாக்குகளையும், நீரூற்றுகளையும் பார். ஒருவேளை எங்கள் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் உயிரோடு பாதுகாப்பதற்கு தேவையான புல்லை காணலாம். இதனால் நாம் எங்கள் மிருகங்கள் எதையும் கொல்லவேண்டியது ஏற்படாது” என்றான். எனவே அவர்கள் பார்க்கவேண்டிய நாட்டை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, ஒரு பக்கமாக ஆகாபும், மற்றப் பக்கமாக ஒபதியாவும் போனார்கள். ஒபதியா தன் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது எலியா அவனைச் சந்தித்தான். ஒபதியா அவனை இன்னாரென அறிந்து, அவனுக்கு முன்னால் முகங்குப்புற விழுந்து, “உண்மையிலே நீர் என் தலைவனாகிய எலியாதானா” என்றான். அதற்கு எலியா, “ஆம், உன் தலைவனிடம் போய் எலியா இங்கு இருக்கிறான் என்று சொல்” என்றான். அதற்கு ஒபதியா, “உமது அடியானை என்னை ஆகாபிடம் சாவுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு நான் என்ன பிழை செய்திருக்கிறேன்? உம்முடைய இறைவனாகிய யெகோவா இருப்பது நிச்சயமெனில், எனது எஜமான் உம்மைத் தேடும்படி ஆட்களை அனுப்பாத நாடும் இல்லை, அரசாட்சியும் இல்லை. எந்த நாடாவது, எந்த அரசாட்சியாவது வந்து நீர் எங்குமில்லை என்று சொன்னால், உம்மைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்று அவர்களைச் சத்தியம் செய்யும்படிச் செய்வார். ஆனால் நீரோ இப்போது என்னைப் பார்த்து, ‘எலியா இங்கே இருக்கிறான்’ என்று அவனிடம் போய்ச் சொல்லும்படி சொல்கிறீர். நான் இப்போது உம்மை விட்டுப்போனவுடன் யெகோவாவின் ஆவியானவர் எங்கே உம்மைக் கொண்டுபோய் விடுவாரோ என்று எனக்குத் தெரியாது. நான் ஆகாபிடம் போய் உம்மைப்பற்றிக் கூறும்போது ஆகாப் வந்து இந்த இடத்தில் உம்மைக் காணாவிட்டால் என்னைக் கொன்றுபோடுவானே. இருந்தும் என் இளமைப் பருவத்திலிருந்து உமது அடியவனாகிய நான் யெகோவாவையே வழிபட்டிருக்கிறேன். என் தலைவனே! யேசபேல் யெகோவாவின் இறைவாக்கினர்களைக் கொலைசெய்தபோது நான் செய்தவற்றை நீர் கேள்விப்படவில்லையா? நான் யெகோவாவின் இறைவாக்கினர் நூறு பேரை இரண்டு குகைகளில் ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்துச் சாப்பாடும், தண்ணீரும் கொடுத்தேனே. இப்போது என்னை என் எஜமானிடம் போய், ‘எலியா இங்கே இருக்கிறான்’ என்று சொல்லச் சொல்கிறீரே. அவன் என்னைக் கொன்றுபோடுவான்” என்றான். அதற்கு எலியா, “நான் பணிசெய்யும் சேனைகளின் யெகோவா இருப்பது நிச்சயமெனில், ஆகாபின் சமுகத்தில் போய் நிற்பேன் என்பதும் நிச்சயம்” என்றான். அப்பொழுது ஒபதியா ஆகாபுக்குச் செய்தியைச் சொல்வதற்காகப்போனான். ஆகாப் அதைக்கேட்டு எலியாவைச் சந்திக்கப் போனான். அவன் எலியாவைக் கண்டபோது அவனைப் பார்த்து, “இஸ்ரயேலின் கலகக்காரனே, நீயா வந்திருக்கிறாய்” என்று கேட்டான். அதற்கு எலியா, “இஸ்ரயேலுக்குக் கேட்டினைக் கொண்டுவந்தவன் நானல்ல. நீயும் உன் தகப்பன் குடும்பத்தினருமே இஸ்ரயேலுக்குக் கேட்டினைக் கொண்டுவந்தவர்கள். யெகோவாவின் கட்டளைகளைக் கைவிட்டு, பாகால்களை நீங்களே பின்பற்றினீர்கள். இப்பொழுது இஸ்ரயேலின் எல்லா மக்களையும் கர்மேல் மலைக்கு என்னிடம் வரும்படி கட்டளை கொடு. அத்துடன் நானூற்றைம்பது பாகாலின் இறைவாக்கினரையும், யேசபேலினால் பராமரிக்கப்படுகிற நானூறு அசேரா விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகளையும் கூட்டிக்கொண்டு வா” என்று சொன்னான். அப்பொழுது ஆகாப் இஸ்ரயேல் முழுவதற்கும் செய்தி அனுப்பி, எல்லா இறைவாக்கினரையும் கர்மேல் மலைக்குக் கூடிவரும்படி செய்தான். எலியா எல்லா மக்களின் முன்னும் நின்று அவர்களைப் பார்த்து, “நீங்கள் எவ்வளவு காலத்துக்கு இரண்டு அபிப்பிராயங்களுக்கு இடையில் தடுமாறிக் கொண்டிருப்பீர்கள்? யெகோவா இறைவனானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் இறைவனானால் அவனைப் பின்பற்றுங்கள்” என்றான். மக்களோ ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது எலியா அவர்களைப் பார்த்து, “யெகோவாவின் இறைவாக்கினரில் நான் ஒருவன் மட்டுமே மீதியாயிருக்கிறேன். ஆனால் பாகாலுக்கு நானூற்றைம்பது தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். இப்போது இரண்டு காளைகளைக் கொண்டுவாருங்கள். அவர்கள் தங்களுக்கு ஒன்றைத் தெரிந்துகொள்ளட்டும். அதைத் துண்டுகளாக்கி விறகுகளின்மேல் வைக்கட்டும், ஆனால் நெருப்பை மூட்டவேண்டாம். மற்றக் காளையை நான் ஆயத்தப்படுத்தி, விறகுகளில் வைத்து நெருப்பை மூட்டாமல் விடுவேன். அதன்பின் நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச்சொல்லிக் கூப்பிடுங்கள். நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிடுவேன். நெருப்பினால் பதிலளிக்கும் தெய்வமே இறைவன்” என்றான். அப்பொழுது எல்லா மக்களும், “நீர் கூறியது நல்லதுதான்” என்றார்கள்.
1 இராஜாக்கள் 18:1-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அநேகநாட்கள் சென்று, மூன்றாம் வருடமாகும்போது, யெகோவாவுடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார். அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோ சமாரியாவிலே கொடியதாக இருந்தது. ஆனபடியால் ஆகாப் அரண்மனைப் பொருப்பாளனாகிய ஒபதியாவை அழைத்தான்; ஒபதியா யெகோவாவுக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாக இருந்தான். யேசபேல் யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொல்லுகிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக மறைத்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான். ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் எல்லா மிருகஜீவன்களையும் சாகவிடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடு காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் கிடைக்குமா என்று பார் என்றான். அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பிரித்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாகவும், ஒபதியா வேறொரு வழியாகவும் போனார்கள். ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிராக வந்தான்; அவன் எலியாவை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என்னுடைய எஜமானாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு; அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன்னுடைய எஜமானுக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படி, நீர் உமது அடியானை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன். உம்மைத் தேடும்படி என்னுடைய எஜமான் மனிதர்களை அனுப்பாத தேசமும் ராஜ்ஜியமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய யெகோவாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்ஜியத்திலும் அந்த தேசத்திலும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கிக்கொண்டான். இப்போதும் நீ போய், உன்னுடைய எஜமானுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே. நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை யெகோவாவுடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடம் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் பார்க்காவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயது முதல் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன். யேசபேல் யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் யெகோவாவுடைய தீர்க்கதரிசிகளில் நூறுபேரை ஒவ்வொரு குகையிலே ஐம்பது ஐம்பதுபேராக மறைத்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செயல் என்னுடைய எஜமானுக்கு அறிவிக்கப்படவில்லையோ? இப்போதும் என்னுடைய எஜமான் என்னைக் கொன்றுபோட, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான். அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் யெகோவாவுக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான். அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடன், ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான். ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நீயல்லவா என்றான். அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நான் அல்ல; யெகோவாவின் கட்டளைகளைவிட்டு பாகால்களைப் பின்பற்றியதால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவர்கள். இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்புவிக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் 400 பேரையும் என்னிடம் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான். அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் மக்கள் எல்லோரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான். அப்பொழுது எலியா எல்லா மக்களுக்கும் அருகில் வந்து: நீங்கள் எதுவரைக்கும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; யெகோவா தெய்வம் என்றால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வம் என்றால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், மக்கள் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது எலியா மக்களை நோக்கி: யெகோவாவின் தீர்க்கதரிசிகளில் மீதியாக இருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ 450 பேர். அவர்கள் இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதை துண்டுத் துண்டாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கட்டும்; நான் மற்றக் காளையையும் அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன். நீங்கள் உங்களுடைய தெய்வத்தின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியால் பதில் சொல்லும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு மக்களெல்லோரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.
1 இராஜாக்கள் 18:1-24 பரிசுத்த பைபிள் (TAERV)
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், மழை பெய்யவில்லை. கர்த்தர் எலியாவிடம், “போய் ஆகாப் ராஜாவைப் பார். நான் மழையை அனுப்புவேன்” என்றார். எனவே எலியா ஆகாப்பை சந்திக்கச் சென்றான். அப்போது, சமாரியாவில் உணவே இல்லை. எனவே ராஜா அரண்மனை விசாரிப்புக்காரனான ஒபதியாவைத் தன்னிடம் வரவழைத்தான். (காரணம் ஒபதியா உண்மையான கர்த்தருடைய ஊழியன். ஒருமுறை யேசபேல் கர்த்தருடைய எல்லா தீர்க்கதரிசிகளையும் கொன்றாள். எனவே ஒபதியா 100 தீர்க்கதரிசிகளை 2 குகைகளில் ஒளித்து வைத்தான். ஒவ்வொன்றிலும் 50 பேரை வைத்தான். அவர்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்தான்.) ராஜா ஒபதியாவிடம், “இந்த நாட்டின் வழியாக என்னைப் போகவிடு. நாம் இங்குள்ள ஒவ்வொரு ஊற்றையும் ஆற்றையும் பார்ப்போம். நமது குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் புல் கிடைக்குமா என்று பார்ப்போம். கிடைத்தால் இந்த மிருகங்களைக் கொல்ல வேண்டாம்” என்றான். நாட்டைப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பகுதிக்குத் தேடிப் போனார்கள். இருவரும் நாடு முழுக்கப் போனார்கள். ஆகாப் ஒரு திசையிலும் ஒபதியா இன்னொரு திசையிலும் போனார்கள். ஒபதியா, எலியாவை சந்தித்தான். எலியாவைப் பணிந்து வணங்கினான். அவன், “எலியா? எஜமானரே! உண்மையில் நீங்கள் தானா?” என்று கேட்டான். அதற்கு எலியா, “ஆமாம்! நான்தான். நான் இங்கே இருப்பதாக உன் ராஜாவிடம் கூறு” என்றான். பிறகு ஒபதியா, “நீர் இங்கே இருப்பதைப் பற்றி நான் ராஜாவிடம் சொன்னால், அவர் என்னை கொல்வார்! நான் உங்களுக்கு எந்தத் தவறும் செய்யவில்லையே! ஏன் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்? தேவனாகிய கர்த்தர் மீது ஆணையாகக் கூறுகிறேன். ராஜா உங்களை எல்லா இடங்களிலும் தேடினான்! எல்லா நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினான். ஒவ்வொரு நாட்டு ராஜாவிடம் நீர் அங்கே இல்லையென்று சத்தியம் செய்யும்படி செய்தான்! நான் ராஜாவிடம் போய், நீங்கள் இங்கிருப்பதைச் சொன்னால் பிறகு, கர்த்தருடைய ஆவி உங்களை இங்கிருந்து வேறு இடத்துக்குத் தூக்கிச் செல்லும். பிறகு, ராஜா உங்களைக் காணாமல் என்னைக் கொல்வான்! நான் சிறுவயது முதலே கர்த்தரைப் பின்பற்றி வருகிறேன். நான் செய்ததை நீங்கள் அறிவீர்! யேசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றபோது நான் 100 தீர்க்கதரிசிகளை அழைத்துப் போய் 50 பேர் வீதம் இரண்டு குகைகளில் ஒளித்து வைத்தேன். உணவு கொடுத்து காப்பாற்றினேன். இப்போது நீர் இங்கிருப்பதாக ராஜாவிடம் சொல்ல சொல்கிறீர். அவன் என்னைக் கொன்றுவிடுவான்!” என்றான். எலியாவோ, “சர்வவல்லமையுள்ள கர்த்தர் உறுதியாக வாழ்வதுபோல, நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று நான் ராஜா முன்பு நிற்பேன்” என்றான். எனவே ஒபதியா ராஜாவிடம் போய் எலியா இருக்கும் இடம்பற்றி கூறினான். ராஜாவும் எலியாவைப் பார்க்க வந்தான். ராஜா எலியாவைப் பார்த்ததும், “இது நீர்தானா? நீர்தான் இஸ்ரவேலில் எல்லா கஷ்டங்களுக்கும் காரணமானவரா?” என்று கேட்டான். அதற்கு எலியா, “இஸ்ரவேலின் துன்பத்திற்கு நான் காரணம் அல்ல. நீயும் உன் தந்தையின் குடும்பமும்தான் காரணம், நீங்கள் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. பொய்தெய்வங்களை பின்பற்றினீர்கள். இப்போது, அனைத்து இஸ்ரவேலர்களும் என்னை கர்மேல் மலையில் சந்திக்கும்படி கூறுங்கள். பாகாலின் 450 தீர்க்கதரிசிகளும் வரட்டும். ஆஷரா பொய்த்தேவதை இராணியின் ஆதரவு பெற்ற 400 தீர்க்கதரிசிகளும் வரட்டும். இந்த தீர்க்கதரிசிகள் இராணி யேசபேலின் உதவிபெற்றவர்கள்” என்றான். எனவே ஆகாப் அனைத்து இஸ்ரவேலர்களையும் தீர்க்கதரிசிகளையும் கர்மேல் மலைக்கு வரவழைத்தான். எலியா அங்கு வந்து, “யாரை பின்பற்றுவது என்று எப்பொழுது முடிவு செய்வீர்கள்? கர்த்தர் உண்மையான தேவன் என்றால், அவரைப் பின்பற்றவேண்டும். பாகால்தான் உண்மையான தேவன் என்றால், அவனைப் பின்பற்றவேண்டும்!” என்றான். ஜனங்கள் எதுவும் கூறவில்லை. எனவே எலியா, “நான் இங்கு கர்த்தருடைய ஒரே தீர்க்கதரிசி. நான் தனியாக இருக்கிறேன். ஆனால் பாகாலுக்கு 450 தீர்க்கதரிசிகள் உள்ளனர். எனவே இரண்டு காளைகளைக் கொண்டு வாருங்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு காளையை எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் அதை கொன்று துண்டு துண்டாக வெட்டி விறகின்மேல் வைக்கட்டும். ஆனால் அதை எரிக்க வேண்டாம், பிறகு மற்ற காளையை நான் அப்படியே செய்வேன். நான் நெருப்பு எரிக்கத் தொடங்கமாட்டேன். பாகால் தீர்க்கதரிசிகளே, நீங்கள் உங்கள் தெய்வத்தை நோக்கி ஜெபியுங்கள். நான் என் கர்த்தரை நோக்கி ஜெபிப்பேன். அந்த ஜெபத்திற்கு செவிசாய்த்து விறகுகளைத்தானாக எரிய வைக்கிறவரே உண்மையான தேவன்” என்றான். இது நல்ல திட்டம் என அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
1 இராஜாக்கள் 18:1-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார். அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோவெனில் சமாரியாவிலே கொடிதாயிருந்தது. ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான். யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்து வந்தான். ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான். அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள். ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு; அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன். உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கிக்கொண்டான். இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே. நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்று போடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயது முதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன். யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ? இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான். அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான். அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான். ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான். அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள். இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான். அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான். அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர். இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக்கடவர்கள்; நான் மற்ற காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன். நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள்.