ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:1-24

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 18:1-24 TAERV

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், மழை பெய்யவில்லை. கர்த்தர் எலியாவிடம், “போய் ஆகாப் ராஜாவைப் பார். நான் மழையை அனுப்புவேன்” என்றார். எனவே எலியா ஆகாப்பை சந்திக்கச் சென்றான். அப்போது, சமாரியாவில் உணவே இல்லை. எனவே ராஜா அரண்மனை விசாரிப்புக்காரனான ஒபதியாவைத் தன்னிடம் வரவழைத்தான். (காரணம் ஒபதியா உண்மையான கர்த்தருடைய ஊழியன். ஒருமுறை யேசபேல் கர்த்தருடைய எல்லா தீர்க்கதரிசிகளையும் கொன்றாள். எனவே ஒபதியா 100 தீர்க்கதரிசிகளை 2 குகைகளில் ஒளித்து வைத்தான். ஒவ்வொன்றிலும் 50 பேரை வைத்தான். அவர்களுக்கு உணவும், தண்ணீரும் அளித்தான்.) ராஜா ஒபதியாவிடம், “இந்த நாட்டின் வழியாக என்னைப் போகவிடு. நாம் இங்குள்ள ஒவ்வொரு ஊற்றையும் ஆற்றையும் பார்ப்போம். நமது குதிரைகளுக்கும் கழுதைகளுக்கும் புல் கிடைக்குமா என்று பார்ப்போம். கிடைத்தால் இந்த மிருகங்களைக் கொல்ல வேண்டாம்” என்றான். நாட்டைப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒரு பகுதிக்குத் தேடிப் போனார்கள். இருவரும் நாடு முழுக்கப் போனார்கள். ஆகாப் ஒரு திசையிலும் ஒபதியா இன்னொரு திசையிலும் போனார்கள். ஒபதியா, எலியாவை சந்தித்தான். எலியாவைப் பணிந்து வணங்கினான். அவன், “எலியா? எஜமானரே! உண்மையில் நீங்கள் தானா?” என்று கேட்டான். அதற்கு எலியா, “ஆமாம்! நான்தான். நான் இங்கே இருப்பதாக உன் ராஜாவிடம் கூறு” என்றான். பிறகு ஒபதியா, “நீர் இங்கே இருப்பதைப் பற்றி நான் ராஜாவிடம் சொன்னால், அவர் என்னை கொல்வார்! நான் உங்களுக்கு எந்தத் தவறும் செய்யவில்லையே! ஏன் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்? தேவனாகிய கர்த்தர் மீது ஆணையாகக் கூறுகிறேன். ராஜா உங்களை எல்லா இடங்களிலும் தேடினான்! எல்லா நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினான். ஒவ்வொரு நாட்டு ராஜாவிடம் நீர் அங்கே இல்லையென்று சத்தியம் செய்யும்படி செய்தான்! நான் ராஜாவிடம் போய், நீங்கள் இங்கிருப்பதைச் சொன்னால் பிறகு, கர்த்தருடைய ஆவி உங்களை இங்கிருந்து வேறு இடத்துக்குத் தூக்கிச் செல்லும். பிறகு, ராஜா உங்களைக் காணாமல் என்னைக் கொல்வான்! நான் சிறுவயது முதலே கர்த்தரைப் பின்பற்றி வருகிறேன். நான் செய்ததை நீங்கள் அறிவீர்! யேசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றபோது நான் 100 தீர்க்கதரிசிகளை அழைத்துப் போய் 50 பேர் வீதம் இரண்டு குகைகளில் ஒளித்து வைத்தேன். உணவு கொடுத்து காப்பாற்றினேன். இப்போது நீர் இங்கிருப்பதாக ராஜாவிடம் சொல்ல சொல்கிறீர். அவன் என்னைக் கொன்றுவிடுவான்!” என்றான். எலியாவோ, “சர்வவல்லமையுள்ள கர்த்தர் உறுதியாக வாழ்வதுபோல, நான் ஆணையிட்டுக் கூறுகிறேன். இன்று நான் ராஜா முன்பு நிற்பேன்” என்றான். எனவே ஒபதியா ராஜாவிடம் போய் எலியா இருக்கும் இடம்பற்றி கூறினான். ராஜாவும் எலியாவைப் பார்க்க வந்தான். ராஜா எலியாவைப் பார்த்ததும், “இது நீர்தானா? நீர்தான் இஸ்ரவேலில் எல்லா கஷ்டங்களுக்கும் காரணமானவரா?” என்று கேட்டான். அதற்கு எலியா, “இஸ்ரவேலின் துன்பத்திற்கு நான் காரணம் அல்ல. நீயும் உன் தந்தையின் குடும்பமும்தான் காரணம், நீங்கள் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. பொய்தெய்வங்களை பின்பற்றினீர்கள். இப்போது, அனைத்து இஸ்ரவேலர்களும் என்னை கர்மேல் மலையில் சந்திக்கும்படி கூறுங்கள். பாகாலின் 450 தீர்க்கதரிசிகளும் வரட்டும். ஆஷரா பொய்த்தேவதை இராணியின் ஆதரவு பெற்ற 400 தீர்க்கதரிசிகளும் வரட்டும். இந்த தீர்க்கதரிசிகள் இராணி யேசபேலின் உதவிபெற்றவர்கள்” என்றான். எனவே ஆகாப் அனைத்து இஸ்ரவேலர்களையும் தீர்க்கதரிசிகளையும் கர்மேல் மலைக்கு வரவழைத்தான். எலியா அங்கு வந்து, “யாரை பின்பற்றுவது என்று எப்பொழுது முடிவு செய்வீர்கள்? கர்த்தர் உண்மையான தேவன் என்றால், அவரைப் பின்பற்றவேண்டும். பாகால்தான் உண்மையான தேவன் என்றால், அவனைப் பின்பற்றவேண்டும்!” என்றான். ஜனங்கள் எதுவும் கூறவில்லை. எனவே எலியா, “நான் இங்கு கர்த்தருடைய ஒரே தீர்க்கதரிசி. நான் தனியாக இருக்கிறேன். ஆனால் பாகாலுக்கு 450 தீர்க்கதரிசிகள் உள்ளனர். எனவே இரண்டு காளைகளைக் கொண்டு வாருங்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு காளையை எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் அதை கொன்று துண்டு துண்டாக வெட்டி விறகின்மேல் வைக்கட்டும். ஆனால் அதை எரிக்க வேண்டாம், பிறகு மற்ற காளையை நான் அப்படியே செய்வேன். நான் நெருப்பு எரிக்கத் தொடங்கமாட்டேன். பாகால் தீர்க்கதரிசிகளே, நீங்கள் உங்கள் தெய்வத்தை நோக்கி ஜெபியுங்கள். நான் என் கர்த்தரை நோக்கி ஜெபிப்பேன். அந்த ஜெபத்திற்கு செவிசாய்த்து விறகுகளைத்தானாக எரிய வைக்கிறவரே உண்மையான தேவன்” என்றான். இது நல்ல திட்டம் என அனைவரும் ஒப்புக் கொண்டனர்.