1 இராஜாக்கள் 15:7-34
1 இராஜாக்கள் 15:7-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி, நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள். ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் இலச்சையான புணர்ச்சிக்காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி, தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான். மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது. தன் தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான். ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான். அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி: எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான். பெனாதாத், ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரோத் அனைத்தையும் நப்தலியின் முழுதேசத்தோடுங்கூட முறிய அடித்தான். பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவிலிருந்து விட்டான். அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து; அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான். ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது. ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான். அவன் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான். இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான். பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவங்களினிமித்தமும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினிமித்தமும், கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை. நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
1 இராஜாக்கள் 15:7-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அபியாவின் ஆட்சிக் காலத்தின் மற்ற சம்பவங்களும், அவன் செய்த அனைத்தும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் இடையில் யுத்தம் நடந்தது. அபியா இறந்து, தாவீதின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகனான ஆசா அரசனானான். இஸ்ரயேல் அரசனான யெரொபெயாமின் இருபதாம் வருடத்தில் ஆசா யூதாவின் அரசனானான். அவன் எருசலேமில் நாற்பத்தொரு வருடங்கள் அரசாண்டான். அவனின் பாட்டி அப்சலோமின் மகளான மாக்காள் என்பவள். ஆசா தன் முற்பிதாவாகிய தாவீதைப் போல யெகோவாவின் பார்வையில் சரியானவற்றையே செய்தான். அவன், வழிபாட்டிடத்தில் வேசித்தனத்திற்குத் தங்களைக் கொடுத்த ஆண் விபசாரக்காரரை நாட்டிலிருந்து வெளியேற்றி, தன் முற்பிதாக்கள் செய்துவைத்திருந்த எல்லா விக்கிரகங்களையும் அகற்றிவிட்டான். மேலும் அவன் தன் பாட்டி மாக்காளை, அவள் அருவருப்பான அசேரா விக்கிரக தூணைச் செய்ததினால், அரசி என்ற நிலையிலிருந்து நீக்கிவிட்டான். ஆசா அந்தத் தூணை வெட்டி கீதரோன் பள்ளத்தாக்கில் எரித்துவிட்டான். அவன் வழிபாட்டு மேடைகளை அகற்றாமலிருந்த போதிலும்கூட ஆசா தன் வாழ்நாள் எல்லாம் தன் இருதயத்தை யெகோவாவுக்கே ஒப்புவித்திருந்தான். அவன் தானும் தன் தகப்பனும் அர்ப்பணித்திருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்ற பொருட்களையும் யெகோவாவின் ஆலயத்திற்குள் கொண்டுவந்தான். ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்தது. இஸ்ரயேலின் அரசனான பாஷா, யூதாவுக்கு விரோதமாகப் போய், யூதா அரசனான ஆசாவின் எல்லையிலிருந்து யாரும் வெளியே வரவோ, உள்ளே போகவோ முடியாதபடி தடுப்பதற்காக ராமாவைச் சுற்றி அரண் அமைத்தான். பின்பு ஆசா யெகோவாவின் ஆலயத்தின் திரவியக் களஞ்சியத்திலும், தன் சொந்த அரண்மனையிலும் எஞ்சியிருந்த எல்லா வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றைத் தன் அலுவலர்களிடம் ஒப்படைத்தான். பின்பு அவற்றை தமஸ்குவில் ஆட்சி செய்த எசியோனின் மகன் தப்ரிமோனின் மகனான சீரிய அரசன் பெனாதாத்திற்கு அனுப்பினான். மேலும் அவன் அவர்களிடம், “உம்முடைய தகப்பனுக்கும், என்னுடைய தகப்பனுக்குமிடையில் இருந்ததுபோல, உமக்கும் எனக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் இருக்கட்டும். இதோ பாரும், நான் வெள்ளியையும், தங்கத்தையும் உமக்கு பரிசாக அனுப்புகிறேன். நீர் இஸ்ரயேலின் அரசனான பாஷாவுடன் வைத்துள்ள ஒப்பந்தத்தை முறித்துவிடும். அப்போது அவன் என்னிடமிருந்து பின்வாங்கி விடுவான்” என்று சொல்லி அனுப்பினான். பெனாதாத் அரசனாகிய ஆசாவுடன் உடன்பட்டு தனது இராணுவத் தளபதிகளை இஸ்ரயேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பினான். அவன் ஈயோன், தாண், ஆபேல் பெத்மாக்கா மற்றும் கின்னரோத்தின் எல்லாப் பகுதிகளையும், அத்துடன் நப்தலி நாட்டையும் பிடித்தான். பாஷா இதைக் கேள்விப்பட்டபோது ராமாவைக் கட்டுவதை நிறுத்தி, பின்வாங்கி திர்சாவுக்குப் போனான். அப்பொழுது அரசன் ஆசா ஒருவனையும்விடாமல் யூதா நாடு முழுவதற்கும் ஒரு கட்டளை கொடுத்தான். அவர்கள் பாஷா அரசன் பயன்படுத்திய கற்களையும், மரங்களையும் ராமாவிலிருந்து கொண்டுபோனார்கள். ஆசா அரசன் அவற்றைப் பயன்படுத்தி பென்யமீன் நாட்டில் கேபாவையும், மிஸ்பாவையும் கட்டினான். ஆசாவின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய சாதனைகளும், அவன் செய்தவைகள் அனைத்தும், அத்துடன் அவன் கட்டிய பட்டணங்கள் பற்றியும், யூதா அரசர்களது வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. ஆயினும், அவனுடைய வயது முதிர்ந்த காலத்தில் அவன் கால்களில் வியாதி ஏற்பட்டது. பின்பு ஆசா தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் முற்பிதாவாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகனான யோசபாத், அவனுடைய இடத்தில் அவனுக்குப்பின் அரசனானான். யூதா அரசன் ஆசாவின் இரண்டாம் வருடத்தில் யெரொபெயாமின் மகனான நாதாப் இஸ்ரயேலுக்கு அரசனாகி, இஸ்ரயேலின்மேல் இரண்டு வருடம் ஆட்சிசெய்தான். அவன் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணிய தன் தகப்பனுடைய வழிகளிலும், அவனுடைய பாவத்திலும் நடந்தான். இதனால் அவன் யெகோவாவினுடைய பார்வையில் தீமைசெய்தான். நாதாபும், இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்திய பட்டணமான கிபெத்தோனை முற்றுகையிடுகையில், இசக்கார் குடும்பத்தைச் சேர்ந்த அகியாவின் மகனான பாஷா, நாதாபிற்கு எதிராகச் சதிசெய்து, அங்கு அவனை வெட்டிக்கொன்றான். யூதாவின் அரசனான ஆசாவின் மூன்றாம் வருடத்தில் பாஷா நாதாபைக் கொன்று, தானே அவனுக்குப்பின் அவன் இடத்தில் அரசனானான். அவன் அரசாளத் தொடங்கியதும் யெரொபெயாமின் முழுக் குடும்பத்தையும் கொன்றான். யெகோவா தன் பணியாளனாகிய சீலோனியனான அகியாவின் மூலமாய்க் கொடுத்த வாக்கின்படியே, யெரொபெயாமுக்குச் சொந்தமான சுவாசமுள்ள எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் கொன்றான். யெரொபெயாம் செய்த பாவங்களின் காரணமாகவும், அவன் இஸ்ரயேல் மக்களைப் பாவஞ்செய்யப்பண்ணியதாலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குக் கோபம்மூட்டினதாலுமே இவ்வாறு நடந்தது. நாதாபின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவை யாவும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. ஆசாவுக்கும் இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கும் இடையில் அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தம் நடந்துகொண்டே இருந்தது. யூதா அரசனான ஆசா அரசாண்ட மூன்றாம் வருடத்தில், அகியாவின் மகன் பாஷா இஸ்ரயேல் முழுவதற்கும் திர்சாவில் அரசனானான். அவன் இருபத்தி நான்கு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவன் இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின யெரொபெயாமின் வழிகளிலும், அவனுடைய பாவங்களிலும் நடந்து, யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான்.
1 இராஜாக்கள் 15:7-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அபியாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளெல்லாம் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அபியாம் இறந்தபின்பு அவனுடைய முன்னோர்களோடு, அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய மகனாகிய ஆசா அவனுடைய இடத்தில் ராஜாவானான். இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 20 ஆம் வருடத்திலே ஆசா யூதா தேசத்திற்கு ராஜாவாகி, 41 வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள். ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் ஆண் விபசாரக்காரர்களை தேசத்திலிருந்து அகற்றி, தன்னுடைய முன்னோர்கள் ஏற்படுத்தின அருவருப்பான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி, தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை ஏற்படுத்தின தன்னுடைய தாயாகிய மாகாளையும் ராணியாக இல்லாதபடி விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா அழித்து, கீதரோன் ஆற்றின் அருகில் சுட்டெரித்துப்போட்டான். மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவனுடைய இருதயம் யெகோவாவோடு இணைந்திருந்தது. தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான். ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடம் போக்குவரத்தாக இல்லாதபடி, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான். அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன்னுடைய வேலைக்காரர்கள் மூலம் தமஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் மகன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவிற்குக் கொடுத்தனுப்பி: எனக்கும் உமக்கும் என்னுடைய தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாக வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான். பெனாதாத், ராஜாவாகிய ஆசாவின் சொல்லைக்கேட்டு, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரேத் அனைத்தையும் நப்தலியின் முழு தேசத்தையும் தோற்கடித்தான். பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவில் இருந்துவிட்டான். அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லோரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர அறிவிப்புகொடுத்து; அவைகளால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான். ஆசாவின் மற்ற எல்லா செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி வந்திருந்தது. ஆசா இறந்தபின்பு தன்னுடைய முன்னோர்களோடு, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோசபாத் அவனுடைய இடத்திலே ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருடத்திலே யெரொபெயாமின் மகனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருடம் இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்தான். அவன் யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பனுடைய வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான். இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் மகனான பாஷா, அவனுக்கு எதிராகக் சதிசெய்து, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தர்களுக்கு இருந்த கிபெத்தோனை முற்றுகை இட்டிருக்கும்போது, பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான். பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் அரசாட்சியின் வருடத்திலே அவனைக் கொன்றுபோட்டபின்பு, அவனுடைய இடத்தில் ராஜாவானான். அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவங்களினாலும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கின கோபத்தினாலும், யெகோவா சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ராஜாவானபின்பு அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை. நாதாபின் மற்ற செயல்பாடுகளும் அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருட அரசாட்சியிலே அகியாவின் மகனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி 24 வருடங்கள் ஆண்டு, யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
1 இராஜாக்கள் 15:7-34 பரிசுத்த பைபிள் (TAERV)
அபியா செய்த பிற செயல்களெல்லாம் யூதாவின் ராஜாக்கள் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அபியா ராஜாவாக இருந்த காலம்வரை அவன் யெரொபெயாமோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரதத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். அபியாவிற்குப் பின் அவனது குமாரனான ஆசா ராஜாவானான். யெரொபெயாமின் 20வது ஆட்சி ஆண்டின் போது, ஆசா யூதாவின் ராஜாவானான். ஆசா 41 ஆண்டுகள் யூதாவை எருசலேமிலிருந்து ஆண்டு வந்தான். அவனது பாட்டியின் பெயர் மாகாள். இவள் அப்சலோமின் குமாரத்தி. ஆசா அவனது முற்பிதாவான தாவீதைப் போன்றே கர்த்தருக்குச் சரியான செயல்களை மட்டுமே செய்துவந்தான். அப்போது ஆண்கள் பாலின உறவுக்காக தம் உடலைவிற்று அந்நியதெய்வங்களுக்குச் சேவைசெய்து வந்தனர். இத்தகையவர்களை ஆசா நாட்டை விட்டுத் துரத்தினான். அவன் முற்பிதாக்களால் செய்யப்பட்ட பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களையும் எடுத்தெறிந்தான். அவன் தனது பாட்டியான மாகாவையும், இராணி என்ற பதவியிலிருந்து விலக்கினான். ஏனென்றால் அவள் அஷரா பொய்த் தெய்வத்தின் உருவத்தை செய்தாள். ஆசா இந்தப் பயங்கரமான உருவத்தை உடைத்துப்போட்டான். கீதரோன் பள்ளத்தாக்கில் அதனை எரித்துவிட்டான். அவன் பொய்த் தெய்வங்களை தொழுவதற்கான மேடைப் பகுதிகளை அழிக்கவில்லை. ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு நம்பிக்கையாளனாக இருந்தான். ஆசாவும் அவனது தந்தையும் தேவனுக்கு பொன், வெள்ளி போன்ற பொருட்களை அன்பளிப்பாக ஆலயத்தில் கொடுத்திருந்தனர். அப்போது, இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த பாஷாவோடு, ஆசா அடிக்கடி சண்டையிட்டான். பாஷா யூதாவிற்கு எதிராக, இஸ்ரவேல் ஜனங்களை அங்கே போகவோ வரவோ அனுமதிக்காமல் சண்டையிட்டான். அவன் ராமா நகரத்தைப் பலம் பொருந்தியதாக ஆக்கினான். எனவே ஆசா, கர்த்தருடைய ஆலயம் மற்றும் அரண்மனை பொக்கிஷங்களிலிருந்து பொன்னையும், வெள்ளியையும் எடுத்து வேலைக்காரர்களுக்குக் கொடுத்து பெனாதாத்திடம் அனுப்பினான். அவன் ஆராமின் ராஜா பெனாதாத் தப்ரிமோனின் குமாரன். தப்ரிமோன் எசியோனின் குமாரன். தமஸ்கு பெனாதாத்தின் தலைநகரம். ஆசா அவனுக்கு, “என் தந்தையும் உங்கள் தந்தையும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். நான் இப்போது உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொள்ள விரும்புகிறேன். இப்பொன்னையும் வெள்ளியையும் உமக்கு அன்பளிப்பாக அனுப்புகிறேன். நீங்கள் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவிடம் கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்போதுதான் அவன் எங்கள் நாட்டை விட்டு விலகுவான்” என்று தூது அனுப்பினான். ராஜாவாகிய பெனாதாத் ஒப்பந்தத்தின்படி ஆசாவோடு ஒரு படையை அனுப்பி இஸ்ரவேல் நகரங்களான ஈயோன், தாண், பெத்மாக்கா எனும் ஆபேல், கின்னரோத், நப்தலி ஆகியவற்றில் போர் செய்து வென்றான். பாஷா இத்தாக்குதலை அறிந்தான். எனவே ராமாவைப் பலப்படுத்துவதைவிட்டு, திர்சாவை நோக்கிச்சென்றான். பிறகு ஆசா தம் ஜனங்கள் அனைவருக்கும் ஒரு கட்டளையிட்டான். அதன்படி ஒவ்வொருவரும் உதவவேண்டும் என்றும் அவர்கள் ராமாவிற்குப் போய் கல்லையும் மரத்தையும் எடுத்து வரவேண்டும் என்றும் ஆணையிட்டான். அதனால் கேபாவில் உள்ள பென்யமீன் மற்றும் மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினான். ஆசாவைப் பற்றிய, அவன் செய்த மற்ற பெரும் செயல்களையெல்லாம் யூதா ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் நகரங்கள் கட்டப்பட்டதும் உள்ளன. அவன் முதுமையடைந்ததும் பாதத்தில் ஒரு நோய் வந்தது. அவன் மரித்ததும் தனது முற்பிதாவான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். பின் இவனது குமாரனான யோசபாத் ராஜாவானான். ஆசாவின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யெரொபெயாமின் குமாரனான நாதாப் இஸ்ரவேலின் ராஜாவானான். அவன் 2 ஆண்டுகள் ஆண்டான். இவன் கர்த்தருக்கு எதிராகக் கெட்ட காரியங்களை தந்தையைப்போலவே செய்தான். ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான். அகியா என்பவனின் குமாரன் பாஷா ஆவான். இவன் இசக்கார் கோத்திரத்தில் உள்ளவன். இவன் நாதாப்பைக் கொல்லதிட்டமிட்டான். இது நாதாப்பும் இஸ்ரவேலர்களும் கிப்பெத்தோனுக்கு எதிராகச் சண்டையிடும்போது நிகழ்ந்தது. இது பெலிஸ்தியரின் நகரம். இங்கே பாஷா நாதாப்பைக் கொன்றான். இது யூதாவின் ராஜாவாகிய ஆசா ஆண்ட மூன்றாவது ஆண்டில் நடந்தது. பின் பாஷா இஸ்ரவேலின் ராஜா ஆனான். இவன் ராஜா ஆனதும், யெரொபெயாமின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. கர்த்தர் சொன்னபடியே நடந்தது. இதனைக் கர்த்தர் சீலோவில் அகியா மூலம் சொன்னார். இவ்வாறு நிகழ யெரொ பெயாம் செய்த பாவங்களும் ஜனங்களைப் பாவம் செய்ய வைத்ததும் காரணமாயிற்று, இவையே இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு கோபத்தைத் தந்தது. நாதாப் செய்த மற்ற செயல்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. பாஷாவின் ஆட்சிகாலம் முழுவதும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவோடு போரிட்டான். ஆசாவின் மூன்றாவது ஆட்சி ஆண்டில்தான் இஸ்ரவேலின் ராஜாவாக அகியாவின் குமாரனான பாஷா ராஜா ஆனான். திர்சாவில் அவன் 24 ஆண்டுகள் ஆட்சிசெய்தான். பாஷா கர்த்தருக்கு விரோதமான செயல்களைச் செய்தான். யெரொபெயாமைப்போல் தானும் பாவம்செய்து ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டினான்.