ராஜாக்களின் முதலாம் புத்தகம் 15:7-34

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 15:7-34 TAERV

அபியா செய்த பிற செயல்களெல்லாம் யூதாவின் ராஜாக்கள் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அபியா ராஜாவாக இருந்த காலம்வரை அவன் யெரொபெயாமோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரதத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். அபியாவிற்குப் பின் அவனது குமாரனான ஆசா ராஜாவானான். யெரொபெயாமின் 20வது ஆட்சி ஆண்டின் போது, ஆசா யூதாவின் ராஜாவானான். ஆசா 41 ஆண்டுகள் யூதாவை எருசலேமிலிருந்து ஆண்டு வந்தான். அவனது பாட்டியின் பெயர் மாகாள். இவள் அப்சலோமின் குமாரத்தி. ஆசா அவனது முற்பிதாவான தாவீதைப் போன்றே கர்த்தருக்குச் சரியான செயல்களை மட்டுமே செய்துவந்தான். அப்போது ஆண்கள் பாலின உறவுக்காக தம் உடலைவிற்று அந்நியதெய்வங்களுக்குச் சேவைசெய்து வந்தனர். இத்தகையவர்களை ஆசா நாட்டை விட்டுத் துரத்தினான். அவன் முற்பிதாக்களால் செய்யப்பட்ட பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களையும் எடுத்தெறிந்தான். அவன் தனது பாட்டியான மாகாவையும், இராணி என்ற பதவியிலிருந்து விலக்கினான். ஏனென்றால் அவள் அஷரா பொய்த் தெய்வத்தின் உருவத்தை செய்தாள். ஆசா இந்தப் பயங்கரமான உருவத்தை உடைத்துப்போட்டான். கீதரோன் பள்ளத்தாக்கில் அதனை எரித்துவிட்டான். அவன் பொய்த் தெய்வங்களை தொழுவதற்கான மேடைப் பகுதிகளை அழிக்கவில்லை. ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு நம்பிக்கையாளனாக இருந்தான். ஆசாவும் அவனது தந்தையும் தேவனுக்கு பொன், வெள்ளி போன்ற பொருட்களை அன்பளிப்பாக ஆலயத்தில் கொடுத்திருந்தனர். அப்போது, இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த பாஷாவோடு, ஆசா அடிக்கடி சண்டையிட்டான். பாஷா யூதாவிற்கு எதிராக, இஸ்ரவேல் ஜனங்களை அங்கே போகவோ வரவோ அனுமதிக்காமல் சண்டையிட்டான். அவன் ராமா நகரத்தைப் பலம் பொருந்தியதாக ஆக்கினான். எனவே ஆசா, கர்த்தருடைய ஆலயம் மற்றும் அரண்மனை பொக்கிஷங்களிலிருந்து பொன்னையும், வெள்ளியையும் எடுத்து வேலைக்காரர்களுக்குக் கொடுத்து பெனாதாத்திடம் அனுப்பினான். அவன் ஆராமின் ராஜா பெனாதாத் தப்ரிமோனின் குமாரன். தப்ரிமோன் எசியோனின் குமாரன். தமஸ்கு பெனாதாத்தின் தலைநகரம். ஆசா அவனுக்கு, “என் தந்தையும் உங்கள் தந்தையும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். நான் இப்போது உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொள்ள விரும்புகிறேன். இப்பொன்னையும் வெள்ளியையும் உமக்கு அன்பளிப்பாக அனுப்புகிறேன். நீங்கள் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவிடம் கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்போதுதான் அவன் எங்கள் நாட்டை விட்டு விலகுவான்” என்று தூது அனுப்பினான். ராஜாவாகிய பெனாதாத் ஒப்பந்தத்தின்படி ஆசாவோடு ஒரு படையை அனுப்பி இஸ்ரவேல் நகரங்களான ஈயோன், தாண், பெத்மாக்கா எனும் ஆபேல், கின்னரோத், நப்தலி ஆகியவற்றில் போர் செய்து வென்றான். பாஷா இத்தாக்குதலை அறிந்தான். எனவே ராமாவைப் பலப்படுத்துவதைவிட்டு, திர்சாவை நோக்கிச்சென்றான். பிறகு ஆசா தம் ஜனங்கள் அனைவருக்கும் ஒரு கட்டளையிட்டான். அதன்படி ஒவ்வொருவரும் உதவவேண்டும் என்றும் அவர்கள் ராமாவிற்குப் போய் கல்லையும் மரத்தையும் எடுத்து வரவேண்டும் என்றும் ஆணையிட்டான். அதனால் கேபாவில் உள்ள பென்யமீன் மற்றும் மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினான். ஆசாவைப் பற்றிய, அவன் செய்த மற்ற பெரும் செயல்களையெல்லாம் யூதா ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் நகரங்கள் கட்டப்பட்டதும் உள்ளன. அவன் முதுமையடைந்ததும் பாதத்தில் ஒரு நோய் வந்தது. அவன் மரித்ததும் தனது முற்பிதாவான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். பின் இவனது குமாரனான யோசபாத் ராஜாவானான். ஆசாவின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யெரொபெயாமின் குமாரனான நாதாப் இஸ்ரவேலின் ராஜாவானான். அவன் 2 ஆண்டுகள் ஆண்டான். இவன் கர்த்தருக்கு எதிராகக் கெட்ட காரியங்களை தந்தையைப்போலவே செய்தான். ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான். அகியா என்பவனின் குமாரன் பாஷா ஆவான். இவன் இசக்கார் கோத்திரத்தில் உள்ளவன். இவன் நாதாப்பைக் கொல்லதிட்டமிட்டான். இது நாதாப்பும் இஸ்ரவேலர்களும் கிப்பெத்தோனுக்கு எதிராகச் சண்டையிடும்போது நிகழ்ந்தது. இது பெலிஸ்தியரின் நகரம். இங்கே பாஷா நாதாப்பைக் கொன்றான். இது யூதாவின் ராஜாவாகிய ஆசா ஆண்ட மூன்றாவது ஆண்டில் நடந்தது. பின் பாஷா இஸ்ரவேலின் ராஜா ஆனான். இவன் ராஜா ஆனதும், யெரொபெயாமின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. கர்த்தர் சொன்னபடியே நடந்தது. இதனைக் கர்த்தர் சீலோவில் அகியா மூலம் சொன்னார். இவ்வாறு நிகழ யெரொ பெயாம் செய்த பாவங்களும் ஜனங்களைப் பாவம் செய்ய வைத்ததும் காரணமாயிற்று, இவையே இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு கோபத்தைத் தந்தது. நாதாப் செய்த மற்ற செயல்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. பாஷாவின் ஆட்சிகாலம் முழுவதும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவோடு போரிட்டான். ஆசாவின் மூன்றாவது ஆட்சி ஆண்டில்தான் இஸ்ரவேலின் ராஜாவாக அகியாவின் குமாரனான பாஷா ராஜா ஆனான். திர்சாவில் அவன் 24 ஆண்டுகள் ஆட்சிசெய்தான். பாஷா கர்த்தருக்கு விரோதமான செயல்களைச் செய்தான். யெரொபெயாமைப்போல் தானும் பாவம்செய்து ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டினான்.