1 இராஜாக்கள் 12:1-30

1 இராஜாக்கள் 12:1-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான். ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதைக் கேள்விப்பட்டான். அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்; அப்பொழுது உம்மை சேவிப்போம் என்றார்கள். அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள். முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி, அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுமொழி கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். அப்பொழுது அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள். மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள். ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி: என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான். ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது. ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான். பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான். அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டு கலகம்பண்ணிப் பிரிந்து போயிருக்கிறார்கள். யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரம் மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை. ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம் பேரைக் கூட்டினான். தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது: நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும் யூதா வம்சத்தார் அனைவரையும், பென்யமீனரையும், மற்ற ஜனங்களையும் நோக்கி: நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள். யெரொபெயாம் எப்பிராயீம் மலைதேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான். யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும். இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்.

1 இராஜாக்கள் 12:1-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ரெகொபெயாம் சீகேமுக்குப் போனான், ஏனெனில் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை அரசனாக்குவதற்காக அங்கே போயிருந்தார்கள். அரசனாகிய சாலொமோனுக்குப் பயந்து எகிப்தில் அடைக்கலம் புகுந்து அங்கேயே இருந்த நேபாத்தின் மகன் யெரொபெயாம் இதைக் கேள்விப்பட்டான். அப்பொழுது அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான். எனவே ஆள் அனுப்பி அவர்கள் யெரொபெயாமை வரவழைத்து, பின் அவனும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் ரெகொபெயாமிடம் வந்து, “உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான சுமையை வைத்தார். ஆனால் இப்பொழுது நீர் அவர் எங்கள்மேல் வைத்த கடினமான உழைப்பையும், பாரமான சுமையையும் இலகுவாக்கும். அப்பொழுது நாங்கள் உமக்குப் பணிந்திருப்போம்” என்றனர். அதற்கு ரெகொபெயாம், “நீங்கள் போய் மூன்று நாட்களுக்குப்பின்பு திரும்பி என்னிடம் வாருங்கள்” என்றான். எனவே மக்கள் போய்விட்டார்கள். அதன்பின்பு, அரசன் ரெகொபெயாம் தன் தகப்பன் சாலொமோனின் காலத்தில் அவரிடம் பணிசெய்த முதியோருடன் கலந்து ஆலோசனை செய்தான். அவன் அவர்களிடம், “இந்த மக்களுக்கு நான் பதில்சொல்வதற்கு நீங்கள் என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள், “இன்று நீ அவர்களுக்கு பணியாளனாயிருந்து, அவர்களுக்குப் பணிசெய்து, அவர்களுக்கு சாதகமான பதிலைக் கொடுப்பீரானால் அவர்கள் எப்பொழுதும் உமது பணியாட்களாயிருப்பார்கள்” என்றார்கள். ஆனால் ரெகொபெயாம் முதியோர் தனக்குக் கூறிய புத்திமதியை உதாசீனம் செய்துவிட்டு, தன்னுடன் வளர்ந்து தனக்குப் பணிசெய்த வாலிபரிடம் ஆலோசனை கேட்டான். அவன் அவர்களிடம், “ ‘உமது தகப்பன் எங்கள்மேல் வைத்த பாரத்தை எளிதாக்கும்’ என்று கேட்கிற இந்த மக்களுக்கு நான் பதில் கொடுப்பதற்கு நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை தருவீர்கள்?” என்று கேட்டான். அவனுடன் வளர்ந்த வாலிபர்கள், “உமது தகப்பன் எங்கள்மேல் பாரமான நுகத்தை வைத்தார், நீர் எங்கள் நுகத்தை இலகுவாக்கும் என உம்மிடம் சொல்கிற இந்த மக்களிடம், எனது சிறிய விரல் என் தகப்பனின் இடுப்பைவிடத் தடிமனானது என்று சொல்லும். அத்துடன் என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன் என்று சொல்லும்” என்றார்கள். “மூன்று நாட்களுக்குப்பின் என்னிடம் திரும்பிவாருங்கள்” என்று அரசன் கூறியபடியே நாட்களுக்குப்பின் யெரொபெயாமும் எல்லா மக்களும் ரெகொபெயாமிடம் திரும்பி வந்தார்கள். அப்போது அரசன், மக்களுக்குக் கடுமையாகப் பதிலளித்தான். முதியோர் அவனுக்குக் கொடுத்த புத்திமதியைத் தள்ளிவிட்டு, வாலிபரின் ஆலோசனையைப் பின்பற்றி மக்களிடம், “என் தகப்பன் உங்கள்மேல் பாரமான சுமையைச் சுமத்தினார். நான் இதை இன்னும் பாரமாக்குவேன். என் தகப்பன் உங்களைச் சவுக்கினால் அடித்தார். நான் உங்களைத் தேள்களின் வேதனையைப்போன்ற சாட்டையினால் அடிப்பேன்” என்றான். இப்படியாக அரசன் மக்களின் வேண்டுகோளைக் கவனிக்கவில்லை. நேபாத்தின் மகனான யெரொபெயாமுக்கு சீலோவைச் சேர்ந்த அகியா என்ற இறைவாக்கினன் மூலம் கூறிய யெகோவாவின் வார்த்தையை நிறைவேற்றும்படி, இந்த மாறுதலான நிகழ்வுகள் யெகோவாவிடமிருந்தே வந்தன. அரசன் தங்களுக்கு செவிகொடுக்க மறுத்ததைக் கண்ட எல்லா இஸ்ரயேலரும் அரசனிடம் சொன்னதாவது: “தாவீதிடம் எங்களுக்கு என்ன பங்குண்டு? ஈசாயின் மகனிடம் எங்களுக்கு என்ன பாகமுண்டு? இஸ்ரயேலரே உங்கள் கூடாரங்களுக்குப் போங்கள்! தாவீதே, உன் சொந்த வீட்டைக் கவனித்துக்கொள்!” எனவே இஸ்ரயேலர்கள் தங்கள் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். ஆனால் யூதாவில் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரயேலரைப் பொறுத்தமட்டில் அவர்கள் எல்லோர்மேலும் இன்னும் ரெகொபெயாம் ஆட்சிசெய்தான். அரசன் ரெகொபெயாம் கட்டாய வேலைக்குப் பொறுப்பாயிருந்த அதோராமை மக்களிடம் அனுப்பினான். ஆனால் எல்லா இஸ்ரயேலரும் அவனைக் கல்லெறிந்து கொன்றுவிட்டார்கள். அரசன் ரெகொபெயாம் எப்படியோ ஒருவழியாகத் தனது தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பி ஓடினான். இவ்வாறு இஸ்ரயேலர் தாவீதின் வீட்டாருக்கெதிராக இந்நாள்வரைக்கும் கலகம் செய்துகொண்டிருக்கிறார்கள். யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரயேலர் எல்லோரும் கேள்விப்பட்டபோது, தங்கள் சபைக்கு அவனை வரும்படி அழைத்து எல்லா இஸ்ரயேலருக்கும் அவனை அரசனாக்கினார்கள். யூதா கோத்திரம் மட்டுமே தாவீதின் குடும்பத்துக்கு உண்மையாயிருந்தது. ரெகொபெயாம் எருசலேமை வந்தடைந்தபோது, யூதா முழுவதிலும் பென்யமீன் கோத்திரத்திலும் 1,80,000 போர்வீரரை ஒன்றுகூட்டினான். இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டு முழு அரசையும் சாலொமோனின் மகன் ரெகொபெயாமின் ஆட்சிக்குட்படுத்தவே அவர்கள் திரட்டப்பட்டனர். ஆனால் இறைவனின் மனிதன் செமாயாவுக்கு இந்த யெகோவாவின் வார்த்தை வந்தது: ஆனால் இறைவனுடைய மனிதனான செமாயாவுக்கு இறைவனின் வார்த்தை வந்தது. “நீ யூதாவின் அரசனான சாலொமோனின் மகன் ரெகொபெயாமையும், யூதாவின், பென்யமீன் முழு குடும்பத்தையும், மீதியான மக்களையும் நோக்கி, ‘உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரயேலருக்கு எதிராக யுத்தம்செய்யப் போகவேண்டாம். இது எனது செயல்; நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்கிறார்’ ” என்றான். எனவே அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் கட்டளையிட்டபடியே மீண்டும் வீட்டிற்கு போனார்கள். பின்பு யெரொபெயாம் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள சீகேமை அரண் செய்து, அங்கே வாழ்ந்தான். அங்கிருந்துபோய் பெனியேலைக் கட்டி எழுப்பினான். யெரொபெயாம் தனக்குள், “அரசாட்சி ஒருவேளை தாவீதின் சந்ததிக்கே திரும்பவும் போகக்கூடும். இந்த மக்கள் எருசலேமில் உள்ள யெகோவாவின் ஆலயத்துக்குப் பலி செலுத்துவதற்குப் போனால், அவர்கள் தங்கள் தலைவனான யூதாவின் அரசன் ரெகொபெயாமின் பக்கம் சாயக்கூடும். அவர்கள் என்னைக் கொலைசெய்து அவனிடமே திரும்புவார்கள்” என்று நினைத்தான். அரசன் இதைக்குறித்து ஆலோசனை பெற்றபின்பு இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தான். அவன் மக்களைப் பார்த்து, “நீங்கள் எருசலேமுக்கு வழிபடப்போவது உங்களுக்கு மிகவும் கஷ்டம். இஸ்ரயேலின் எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டுவந்த தெய்வங்கள் இங்கே இருக்கின்றன” என்று சொன்னான். அவன் ஒன்றைப் பெத்தேலிலும், மற்றதைத் தாணிலும் வைத்தான். இது பாவமாகியது. மக்கள் அதில் ஒன்றை வழிபடுவதற்குத் தாண்வரைக்கும் போனார்கள்.

1 இராஜாக்கள் 12:1-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ரெகொபெயாமை ராஜாவாக்க, இஸ்ரவேலர்கள் எல்லோரும் சீகேமுக்கு வந்ததால், அவனும் சீகேமுக்குப் போனான். ராஜாவாகிய சாலொமோனைவிட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கும்போது இதைக் கேள்விப்பட்டான். அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைத்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபையார்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: உம்முடைய தகப்பன் பாரமான சுமையை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்திய கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான சுமையையும் இலகுவாக்கும்; அப்பொழுது உமக்கு வேலை செய்வோம் என்றார்கள். அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாட்களுக்குப் பின்பு என்னிடம் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே மக்கள் போனார்கள். அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன்னுடைய தகப்பனாகிய சாலொமோன் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு முன்பாக நின்ற முதியவர்களோடு ஆலோசனைசெய்து, இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த மக்களுக்கு வேலைக்காரனாகி, அவர்களைப் பணிந்து, அவர்களுடைய சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எப்போதும் அவர்கள் உமக்கு வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்றார்கள். முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்து தனக்கு முன்னால் நிற்கிற வாலிபர்களோடு ஆலோசனைசெய்து, அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு பதில் சொல்ல, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். அப்பொழுது அவனோடு வளர்ந்த வாலிபர்கள் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடம் சொன்ன இந்த மக்களுக்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என்னுடைய சுண்டுவிரல் என்னுடைய தகப்பனுடைய இடுப்பைவிட பருமனாக இருக்கும். இப்போதும் என்னுடைய தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடு சொல்லவேண்டும் என்றார்கள். மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் எல்லா மக்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடம் வந்தார்கள். ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபர்களுடைய ஆலோசனையின்படி அவர்களோடு பேசி: என்னுடைய தகப்பன் உங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று மக்களுக்குக் கடினமான உத்திரவு கொடுத்தான். ராஜா, மக்கள் சொன்னதைக் கேட்காமற்போனான்; யெகோவா சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது. ராஜா தாங்கள் சொன்னவைகளைக் கேட்காததை இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது, மக்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: “தாவீதோடு எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை; இஸ்ரவேலே, உன்னுடைய கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன்னுடைய சொந்த வீட்டைப் பார்த்துக்கொள்” என்று சொல்லி, இஸ்ரவேலர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் மக்களுக்கு ரெகொபெயாம் ராஜாவாக இருந்தான். பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் பொறுப்பாளனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் வேகமாக இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான். அப்படியே இந்தநாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர்கள் தாவீதின் சந்ததிக்கு எதிராக கலகம்செய்து பிரிந்து போயிருக்கிறார்கள். யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவனை சபையினிடம் அழைத்தனுப்பி, அவனை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரத்தைத் தவிர வேறொருவரும் தாவீதின் சந்ததியைப் பின்பற்றவில்லை. ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் சந்ததியோடு யுத்தம்செய்யவும், ராஜ்ஜியத்தை சாலொமோனின் மகனாகிய தன்னிடம் திருப்பிக்கொள்ளவும், யூதா வீட்டார்கள் பென்யமீன் கோத்திரத்தார்கள் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர்கள் ஒருலட்சத்து எண்பதாயிரம் பேரைக் கூட்டினான். தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது: நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும் யூதாவின் வீட்டார்கள் அனைவரையும், பென்யமீனர்களையும், மற்ற மக்களையும் நோக்கி: நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் மக்களான உங்கள் சகோதரர்களோடு யுத்தம்செய்யாமலும், அவரவர் தங்களுடைய வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: யெகோவாவுடைய சொல்லைக் கேட்டு, யெகோவாவுடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள். யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே குடியிருந்து, அங்கிருந்து போய் பெனூவேலைக் கட்டினான். யெரொபெயாம்: இப்போது அரசாட்சி தாவீது குடும்பத்தாரின் பக்கமாகத் திரும்பும். இந்த மக்கள் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த மக்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்களுடைய எஜமானின் பக்கமாகத் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பக்கமாகப் போய்விடுவார்கள் என்று தன்னுடைய மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். ஆகையால் ராஜா யோசனைசெய்து, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, மக்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போவது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலர்களே, இதோ, இவைகளே உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த உங்கள் தெய்வங்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் வைத்தான். இந்தக் காரியம் பாவமாக மாறினது; மக்கள் இந்த கன்றுக்குட்டிக்காகத் தாண்வரை போவார்கள்.

1 இராஜாக்கள் 12:1-30 பரிசுத்த பைபிள் (TAERV)

சாலொமோனிடமிருந்து ஓடிப் போன நேபாத்தின் குமாரனான யெரோபெயாம் எகிப்திலேயே இருந்தான். சாலொமோன் மரித்ததை அறிந்ததும் (சேரதாவுக்குத்) திரும்பினான். இது எப்பிராயிம் மலைப்பகுதியில் இருந்தது. சாலொமோன் ராஜா மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அதன் பிறகு அவனது குமாரனான ரெகொபெயாம் ராஜா ஆனான். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சீகேமுக்குப் போனார்கள். அவர்கள், ரெகொபெயாமை ராஜாவாக்க விரும்பினார்கள். ரெகொபெயாமும் சீகேமுக்குச் சென்றான். ஜனங்கள் அவனிடம், “உங்கள் தந்தை நாங்கள் கடுமையாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தினார். இப்போது, அவற்றை எளிதாக்க வேண்டும். உங்கள் தந்தையைப் போல் கடுமையான வேலைகளைக் கொடுக்கவேண்டாம். அவ்வாறானால் நாங்கள் உங்களுக்கு சேவை செய்வோம்” என்றனர். அதற்கு ரெகொபேயாம், “மூன்று நாட்களில் திரும்பி வாருங்கள், நான் உங்களுக்குப் பதில் சொல்வேன்” என்றான். பிறகு ஜனங்கள் திரும்பிச் சென்றார்கள். சாலொமோன் உயிரோடு இருந்தபோது அவனுக்கு யோசனை சொல்வதற்காகச் சில முதியவர்கள் இருந்தனர். அவர்களிடம் ரெகொபெயாம் என்ன செய்வது என்று கேட்டான். ரெகொபெயாம், “இந்த ஜனங்களுக்கு நான் என்னபதில் சொல்ல வேண்டும்?” என்று கலந்து ஆலோசித்தான். அதற்கு மூப்பர்கள், “இன்று நீ அவர்களுக்குச் சேவகனானால், பிறகு அவர்களும் உண்மையான சேவகர்களாக உனக்கு இருப்பார்கள். அவர்களுடன் இரக்கத்தோடு பேசினால், பின் அவர்கள் உனக்காக எப்பொழுதும் வேலை செய்வார்கள்” என்றனர். ஆனால் அந்தப் புத்திமதியை அவன் கேட்கவில்லை. அவன் தன் இளைய நண்பர்களைக் கேட்டான். அவன் அவர்களிடம், “ஜனங்கள் என்னிடம் வந்து, ‘உங்கள் தந்தையைப்போன்று கடினமான வேலையைக் கொடுக்கவேண்டாம். எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நான் என்ன பதில் சொல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்? நான் என்ன சொல்லவேண்டும்?” என்ற கலந்து ஆலோசித்தான். ராஜாவிடம் இளைய நண்பர்களோ, “சிலர் உன்னிடம் வந்து, ‘உங்கள் தந்தை கடினமான வேலையைக் கொடுத்தார். நீங்கள் எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நீ அவர்களிடம், ‘என் சிறிய விரல் தந்தையின் முழு சரீரத்தைவிட பல மிக்கது என்று சொல்லவேண்டும். என் தந்தை கடினமான வேலையைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிட கடினமான வேலையைத் தருவேன்! அவர் சாட்டை மூலம் கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அடித்து கட்டாயப்படுத்துவேன். எனது அடிகள் தேளின் கொடுக்கைப் போலிருக்கும்’ என்றுசொல்!” என்றனர். ரெகொபெயாம் மூன்று நாட்களில் திரும்பி வரும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான். எனவே மூன்று நாட்களுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமிடம் வந்தனர். அப்போது அவர்களிடம், ராஜா கடுமையாகப் பேசினான். அவன் மூப்பர்களின் ஆலோசனையைக் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் தன் இளைய நண்பர்கள் சொல்லச் சொன்னதையே சொன்னான். அவன் அவர்களிடம், “என் தந்தை கடின வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிடவும் கடின வேலைகளைத் தருவேன். என் தந்தை உங்களைச் சவுக்கால் அடித்தார். நானோ தேள் கடியைப்போல வேதனையடையுமாறு அடிப்பேன்!” என்றான். எனவே ஜனங்கள் விரும்பியது போன்று ராஜா செய்யவில்லை. கர்த்தர்தாமே இவ்வாறு நிகழும்படி செய்தார். நேபாத்தின் குமாரனான யெரொபெயாமுக்குச் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கர்த்தர் இவ்வாறு செய்தார். கர்த்தர் அகியாவின் மூலமாக இந்த வாக்குறுதியைச் செய்தார். அகியா சீலோ நாட்டைச் சேர்ந்தவர். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் புதிய ராஜா தங்கள் வேண்டுகோளைக் கேட்டுக் கொள்ளவில்லை என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் ராஜாவிடம், “நாங்கள் தாவீதின் குடும்பத்தினர்கள்தானா? இல்லை. ஈசாயின் நிலத்தில் எங்களுக்குப் பங்கிருக்கிறதா? இல்லை! எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தம்தம் சொந்த நிலத்திற்கு திரும்பிப் போகட்டும். தாவீதின் குமாரன் தமது ஜனங்களை மட்டும் ஆளட்டும்!” என்று கூறினர். எனவே அவர்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள். ஆனால் ரெகொ பெயாம் யூதா நகரங்களில் வாழும் இஸ்ரவேலர்கள் முழுவதையும் ஆண்டு வந்தான். அதோனிராம் என்பவன் வேலைக்காரர்களின் பொறுப்பாளனாக இருந்தான். ராஜா அவனை ஜனங்களிடம் பேசிப்பார்க்குமாறு அனுப்பினான். ஆனால் ஜனங்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றனர். பின் ராஜா தனது இரதத்தில் ஏறி எருசலேமிற்குத் தப்பித்து ஓடினான். இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் குடும்பத்திற்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் இன்றும் தாவீதின் குடும்பத்திற்கு எதிராக உள்ளனர். யெரொபெயாம் திரும்பி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அறிந்தனர். எனவே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவனை இஸ்ரவேல் முழுமைக்கும் ராஜாவாக்கினார்கள். யூதாவின் கோத்திரத்தினர் மட்டும் தாவீதின் குடும்பத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தனர். ரெகொபெயாம் எருசலேமுக்குப் போய் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தாரை ஒன்று சேர்த்தான். இது 1,80,000 பேர் கொண்ட படையாயிற்று. ராஜா இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகச் சண்டை போட விரும்பினான். தனது ஆட்சி பீடத்தைத் திரும்பப்பெற விரும்பினான். ஆனால் கர்த்தர் சேமாயா என்ற தீர்க்கதரிசியோடு பேசினார். கர்த்தர், “நீ யூதாவின் ராஜாவாகிய, சாலொமோனின் குமாரன், ரெகொ பெயாமிடம் கூறு. அத்துடன் யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களிடமும் கூறு. நீ அவர்களிடம், ‘உனது சகோதரர்களோடு சண்டை போடவேண்டாம் என்று கர்த்தர் சொல்கிறார். ஒவ்வொருவரும் வீட்டிற்குப் போங்கள், நான் இவ்வாறு நிகழும்படி செய்தேன்!’ என்று சொல்” என்றார். எனவே ராஜாவின் படையிலுள்ள அனைவரும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிப்பணிந்து வீட்டிற்குத் திரும்பினார்கள். சீகேம் என்பது எப்பிராயீம் நாட்டின் மலை நகரம். அதனை ராஜா யெரொபெயாமும் பலம் பொருந்தியதாக ஆக்கி அங்கே வாழ்ந்தான். பின்னர் பெனூவேலைப் பலமாக்கி அங்கே வாழ்ந்தான். யெரொபெயாம் தனக்குள்ளேயே, “ஜனங்கள் எருசலேமில் தொடர்ந்து கர்த்தருடைய ஆலயத்திற்கு காணிக்கைகளை அளிக்கச் செல்வார்களேயானால், பின் அவர்கள் தாவீதின் குடும்பத்தால் ஆளப்படவேண்டும் என விரும்புவார்கள். அவர்கள் ரெகொபெயாமைப் பின்பற்றி, அவனை மீண்டும் ராஜாவாக்குவார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்” என எண்ணினான். எனவே அவன் தன்னைச் சார்ந்தவர்களோடு கலந்து யோசித்தான். அவன் இரண்டு தங்க கன்றுக்குட்டிகளைச் செய்தான். ஜனங்களிடம், “இனிமேல் நீங்கள் எருசலேம் போய் தொழுதுகொள்ள வேண்டாம். உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தெய்வங்கள் இவைகள் தான்” என்றான். பின்னர் பெத்தேலில் ஒரு கன்றுகுட்டியும், தாண் நகரில் ஒரு கன்றுக் குட்டியும் வைத்தான். ஜனங்கள் பெத்லேலுக்கும் தாணுக்கும் போய் கன்றுக்குட்டிகளின் உருவங்களை வழிபட்டனர். இது பெரிய பாவமானது.