ராஜாக்களின் முதலாம் புத்தகம் 12:1-30

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 12:1-30 TAERV

சாலொமோனிடமிருந்து ஓடிப் போன நேபாத்தின் குமாரனான யெரோபெயாம் எகிப்திலேயே இருந்தான். சாலொமோன் மரித்ததை அறிந்ததும் (சேரதாவுக்குத்) திரும்பினான். இது எப்பிராயிம் மலைப்பகுதியில் இருந்தது. சாலொமோன் ராஜா மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அதன் பிறகு அவனது குமாரனான ரெகொபெயாம் ராஜா ஆனான். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சீகேமுக்குப் போனார்கள். அவர்கள், ரெகொபெயாமை ராஜாவாக்க விரும்பினார்கள். ரெகொபெயாமும் சீகேமுக்குச் சென்றான். ஜனங்கள் அவனிடம், “உங்கள் தந்தை நாங்கள் கடுமையாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தினார். இப்போது, அவற்றை எளிதாக்க வேண்டும். உங்கள் தந்தையைப் போல் கடுமையான வேலைகளைக் கொடுக்கவேண்டாம். அவ்வாறானால் நாங்கள் உங்களுக்கு சேவை செய்வோம்” என்றனர். அதற்கு ரெகொபேயாம், “மூன்று நாட்களில் திரும்பி வாருங்கள், நான் உங்களுக்குப் பதில் சொல்வேன்” என்றான். பிறகு ஜனங்கள் திரும்பிச் சென்றார்கள். சாலொமோன் உயிரோடு இருந்தபோது அவனுக்கு யோசனை சொல்வதற்காகச் சில முதியவர்கள் இருந்தனர். அவர்களிடம் ரெகொபெயாம் என்ன செய்வது என்று கேட்டான். ரெகொபெயாம், “இந்த ஜனங்களுக்கு நான் என்னபதில் சொல்ல வேண்டும்?” என்று கலந்து ஆலோசித்தான். அதற்கு மூப்பர்கள், “இன்று நீ அவர்களுக்குச் சேவகனானால், பிறகு அவர்களும் உண்மையான சேவகர்களாக உனக்கு இருப்பார்கள். அவர்களுடன் இரக்கத்தோடு பேசினால், பின் அவர்கள் உனக்காக எப்பொழுதும் வேலை செய்வார்கள்” என்றனர். ஆனால் அந்தப் புத்திமதியை அவன் கேட்கவில்லை. அவன் தன் இளைய நண்பர்களைக் கேட்டான். அவன் அவர்களிடம், “ஜனங்கள் என்னிடம் வந்து, ‘உங்கள் தந்தையைப்போன்று கடினமான வேலையைக் கொடுக்கவேண்டாம். எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நான் என்ன பதில் சொல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்? நான் என்ன சொல்லவேண்டும்?” என்ற கலந்து ஆலோசித்தான். ராஜாவிடம் இளைய நண்பர்களோ, “சிலர் உன்னிடம் வந்து, ‘உங்கள் தந்தை கடினமான வேலையைக் கொடுத்தார். நீங்கள் எளிதான வேலையைக் கொடுங்கள்’ என்கின்றனர். நீ அவர்களிடம், ‘என் சிறிய விரல் தந்தையின் முழு சரீரத்தைவிட பல மிக்கது என்று சொல்லவேண்டும். என் தந்தை கடினமான வேலையைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிட கடினமான வேலையைத் தருவேன்! அவர் சாட்டை மூலம் கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அடித்து கட்டாயப்படுத்துவேன். எனது அடிகள் தேளின் கொடுக்கைப் போலிருக்கும்’ என்றுசொல்!” என்றனர். ரெகொபெயாம் மூன்று நாட்களில் திரும்பி வரும்படி ஜனங்களிடம் கூறியிருந்தான். எனவே மூன்று நாட்களுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ரெகொபெயாமிடம் வந்தனர். அப்போது அவர்களிடம், ராஜா கடுமையாகப் பேசினான். அவன் மூப்பர்களின் ஆலோசனையைக் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் தன் இளைய நண்பர்கள் சொல்லச் சொன்னதையே சொன்னான். அவன் அவர்களிடம், “என் தந்தை கடின வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிடவும் கடின வேலைகளைத் தருவேன். என் தந்தை உங்களைச் சவுக்கால் அடித்தார். நானோ தேள் கடியைப்போல வேதனையடையுமாறு அடிப்பேன்!” என்றான். எனவே ஜனங்கள் விரும்பியது போன்று ராஜா செய்யவில்லை. கர்த்தர்தாமே இவ்வாறு நிகழும்படி செய்தார். நேபாத்தின் குமாரனான யெரொபெயாமுக்குச் செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கர்த்தர் இவ்வாறு செய்தார். கர்த்தர் அகியாவின் மூலமாக இந்த வாக்குறுதியைச் செய்தார். அகியா சீலோ நாட்டைச் சேர்ந்தவர். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் புதிய ராஜா தங்கள் வேண்டுகோளைக் கேட்டுக் கொள்ளவில்லை என்று எண்ணினார்கள். எனவே அவர்கள் ராஜாவிடம், “நாங்கள் தாவீதின் குடும்பத்தினர்கள்தானா? இல்லை. ஈசாயின் நிலத்தில் எங்களுக்குப் பங்கிருக்கிறதா? இல்லை! எனவே இஸ்ரவேல் ஜனங்கள் தம்தம் சொந்த நிலத்திற்கு திரும்பிப் போகட்டும். தாவீதின் குமாரன் தமது ஜனங்களை மட்டும் ஆளட்டும்!” என்று கூறினர். எனவே அவர்கள் தங்கள் வீட்டிற்குப் போனார்கள். ஆனால் ரெகொ பெயாம் யூதா நகரங்களில் வாழும் இஸ்ரவேலர்கள் முழுவதையும் ஆண்டு வந்தான். அதோனிராம் என்பவன் வேலைக்காரர்களின் பொறுப்பாளனாக இருந்தான். ராஜா அவனை ஜனங்களிடம் பேசிப்பார்க்குமாறு அனுப்பினான். ஆனால் ஜனங்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றனர். பின் ராஜா தனது இரதத்தில் ஏறி எருசலேமிற்குத் தப்பித்து ஓடினான். இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் குடும்பத்திற்கு எதிராகப் போரிட்டனர். அவர்கள் இன்றும் தாவீதின் குடும்பத்திற்கு எதிராக உள்ளனர். யெரொபெயாம் திரும்பி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அறிந்தனர். எனவே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவனை இஸ்ரவேல் முழுமைக்கும் ராஜாவாக்கினார்கள். யூதாவின் கோத்திரத்தினர் மட்டும் தாவீதின் குடும்பத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தனர். ரெகொபெயாம் எருசலேமுக்குப் போய் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தாரை ஒன்று சேர்த்தான். இது 1,80,000 பேர் கொண்ட படையாயிற்று. ராஜா இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகச் சண்டை போட விரும்பினான். தனது ஆட்சி பீடத்தைத் திரும்பப்பெற விரும்பினான். ஆனால் கர்த்தர் சேமாயா என்ற தீர்க்கதரிசியோடு பேசினார். கர்த்தர், “நீ யூதாவின் ராஜாவாகிய, சாலொமோனின் குமாரன், ரெகொ பெயாமிடம் கூறு. அத்துடன் யூதா மற்றும் பென்யமீன் ஜனங்களிடமும் கூறு. நீ அவர்களிடம், ‘உனது சகோதரர்களோடு சண்டை போடவேண்டாம் என்று கர்த்தர் சொல்கிறார். ஒவ்வொருவரும் வீட்டிற்குப் போங்கள், நான் இவ்வாறு நிகழும்படி செய்தேன்!’ என்று சொல்” என்றார். எனவே ராஜாவின் படையிலுள்ள அனைவரும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிப்பணிந்து வீட்டிற்குத் திரும்பினார்கள். சீகேம் என்பது எப்பிராயீம் நாட்டின் மலை நகரம். அதனை ராஜா யெரொபெயாமும் பலம் பொருந்தியதாக ஆக்கி அங்கே வாழ்ந்தான். பின்னர் பெனூவேலைப் பலமாக்கி அங்கே வாழ்ந்தான். யெரொபெயாம் தனக்குள்ளேயே, “ஜனங்கள் எருசலேமில் தொடர்ந்து கர்த்தருடைய ஆலயத்திற்கு காணிக்கைகளை அளிக்கச் செல்வார்களேயானால், பின் அவர்கள் தாவீதின் குடும்பத்தால் ஆளப்படவேண்டும் என விரும்புவார்கள். அவர்கள் ரெகொபெயாமைப் பின்பற்றி, அவனை மீண்டும் ராஜாவாக்குவார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்” என எண்ணினான். எனவே அவன் தன்னைச் சார்ந்தவர்களோடு கலந்து யோசித்தான். அவன் இரண்டு தங்க கன்றுக்குட்டிகளைச் செய்தான். ஜனங்களிடம், “இனிமேல் நீங்கள் எருசலேம் போய் தொழுதுகொள்ள வேண்டாம். உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தெய்வங்கள் இவைகள் தான்” என்றான். பின்னர் பெத்தேலில் ஒரு கன்றுகுட்டியும், தாண் நகரில் ஒரு கன்றுக் குட்டியும் வைத்தான். ஜனங்கள் பெத்லேலுக்கும் தாணுக்கும் போய் கன்றுக்குட்டிகளின் உருவங்களை வழிபட்டனர். இது பெரிய பாவமானது.