1 இராஜாக்கள் 10:1-8
1 இராஜாக்கள் 10:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலோமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங்குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள். அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும், அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவன் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு, ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று. நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது. உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
1 இராஜாக்கள் 10:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சாலொமோனின் புகழைப்பற்றியும் யெகோவாவின் பெயருடன் அவனுக்கிருந்த தொடர்பைப்பற்றியும் சேபாவின் அரசி கேள்விப்பட்டபோது, அவள் கடினமான கேள்விகளால் சாலொமோனை சோதித்துப் பார்ப்பதற்காக அங்கு வந்தாள். அவள் தனது ஒட்டகங்களில் வாசனைப் பொருட்களையும், பெருந்தொகையான தங்கத்தையும், மாணிக்கக் கற்களையும் ஏற்றிக்கொண்டு, தனது பரிவாரங்களுடன் எருசலேமுக்கு வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து, தனது மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் அவனுடன் பேசினாள். சாலொமோன் அவளுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். அரசன் அவளுக்கு விளக்கிச் சொல்ல முடியாத பதில் ஒன்றும் இருக்கவில்லை. சேபாவின் அரசி சாலொமோனுடைய எல்லா ஞானத்தையும், அவன் கட்டியிருந்த அரண்மனையையும், அவனுடைய மேஜையிலிருந்த உணவையும், அவன் அலுவலர்களையும், தங்கள் உடைகளில் காணப்பட்ட பணியாளர்களையும், அவனுக்குத் திராட்சை இரசம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவின் ஆலயத்தில் செலுத்திய தகன காணிக்கைகளையும் கண்டபோது, அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள். அப்பொழுது சேபாவின் அரசி அரசனிடம், “உமது சாதனைகளையும், உமது ஞானத்தையும் பற்றி நான் எனது நாட்டில் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது. ஆனால் நான் வந்து என் சொந்தக் கண்களால் பார்க்கும்வரை இவற்றை நம்பவேயில்லை. உண்மையில் இவற்றில் பாதியேனும் எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும், ஞானமும் செல்வமும் பலமடங்கு உம்மிடம் அதிகமாயிருக்கிறது. உமது மக்கள் எவ்வளவு சந்தோஷமுடையவர்களாய் இருக்கவேண்டும். எப்பொழுதும் உமது முன்நின்று உமது ஞானத்தைக் கேட்கும் உமது அதிகாரிகள் எவ்வளவு மகிழ்ச்சியுடையவர்களாய் இருக்கவேண்டும்.
1 இராஜாக்கள் 10:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுடைய நாமத்தைக்குறித்து சாலொமோனுக்கு உண்டாயிருந்த புகழை சேபாவின் ராணி கேள்விப்பட்டபோது, அவள் விடுகதைகளால் அவனைச் சோதிப்பதற்காக, திரளான கூட்டத்தோடும், நறுமணப்பொருட்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடம் வந்தபோது, தன்னுடைய மனதில் இருந்த எல்லாவற்றையும்குறித்து அவனிடம் உரையாடினாள். அப்பொழுது சாலொமோன் அவள் கேட்ட எல்லாவற்றிக்கும் பதிலளித்தான். அவளுக்கு பதிலளிக்க முடியாதபடி, ஒன்றுகூட ராஜாவிற்கு மறைபொருளாயிருக்கவில்லை. சேபாவின் ராணி சாலொமோனுடைய எல்லா ஞானத்தையும், அவன் கட்டின அரண்மனையையும், அவனுடைய பந்தியின் உணவு வகைகளையும், வேலைக்காரர்களின் வீடுகளையும், வேலைக்காரர்களின் பணியையும், அவனுடைய ஆடைகளையும், அவனுக்கு பானம் பரிமாறுகிறவர்களையும், அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் வியப்படைந்து, ராஜாவை நோக்கி: உம்முடைய வார்த்தைகளையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என்னுடைய தேசத்தில் கேட்ட செய்தி மெய்யானது. நான் வந்து அதை என்னுடைய கண்களால் காணும்வரை அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதிகூட எனக்கு அறிவிக்கப்படவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட, உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாக இருக்கிறது. உம்முடைய மக்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய வேலைக்காரர்களும் பாக்கியவான்கள்.
1 இராஜாக்கள் 10:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)
சேபாவின் இராணி சாலொமோனின் புகழைப்பற்றி கேள்விப்பட்டாள். எனவே கடினமான கேள்விகள் மூலம் அவனைச் சோதிக்கவந்தாள். ஏராளமான வேலைக்காரர்களோடு அவள் எருசலேமுக்குப் பயணம் செய்தாள். ஏராளமான இரத்தினங்களை சுமக்கிற ஒட்டகங்களையும், மணப் பொருட்களையும், நகைகளையும் பொன்னையும் சுமந்து வந்தாள். அவள் சாலொமோனை சந்தித்து தனக்குத் தெரிந்த பல வினாக்களைக் கேட்டாள். சாலொமோன் அனைத்துக்கும் விடை சொன்னான். எந்தக் கேள்வியும் அவனுக்குப் பதிலளிக்க கஷ்டமாக இல்லை. அவள் சாலொமோனிடம் அறிவுத் திறனைக் கண்டுகொண்டாள். அவன் கட்டிய அரண்மனையின் அழகையும் பார்த்தாள். ராஜாவின் மேஜையில் இருந்த உணவுப்பொருட்களையும் பார்த்தாள். அவள் அதிகாரிகளின் கூட்டத்தையும் பார்வையிட்டாள். அரண்மனையில் வேலைக்காரர்களும் நன்றாக உடை அணிந்திருப்பதைக் கவனித்தாள். அவள் ஆலயத்தில் அவன் அளித்த விருந்துகளையும் பலிகளையும் பார்த்தாள். இவையெல்லாம் உண்மையில் அவளுக்கு வியப்பை உண்டாக்கி அவளது பெருமூச்சை வரவழைத்தது. எனவே இராணி சாலொமோனிடம், “நான் எனது நாட்டிலே உங்கள் அறிவைப்பற்றியும் உங்கள் செயல்களைப்பற்றியும் பலவாறு கேள்விப்பட்டேன். அத்தனையும் உண்மை. நான் இங்கே வந்து என் சொந்தக்கண்களால் காணும்வரை இவற்றை நம்பாமல் இருந்தேன். இப்போது கேள்விப்பட்டதை எல்லாம் கண்ணால் பார்த்துவிட்டேன். ஜனங்கள் சொன்னதைவிட உங்கள் அறிவும் செல்வமும் மிகுதியாகும். உங்கள் மனைவிகளும் வேலைக்காரர்களும் கொடுத்து வைத்தவர்கள்! அவர்கள் உங்களுக்கு பணிவிடை செய்து உங்கள் அறிவை ஒவ்வொரு நாளும் கேட்டு வருகிறார்கள்!