ராஜாக்களின் முதலாம் புத்தகம் 10:1-8

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 10:1-8 TAERV

சேபாவின் இராணி சாலொமோனின் புகழைப்பற்றி கேள்விப்பட்டாள். எனவே கடினமான கேள்விகள் மூலம் அவனைச் சோதிக்கவந்தாள். ஏராளமான வேலைக்காரர்களோடு அவள் எருசலேமுக்குப் பயணம் செய்தாள். ஏராளமான இரத்தினங்களை சுமக்கிற ஒட்டகங்களையும், மணப் பொருட்களையும், நகைகளையும் பொன்னையும் சுமந்து வந்தாள். அவள் சாலொமோனை சந்தித்து தனக்குத் தெரிந்த பல வினாக்களைக் கேட்டாள். சாலொமோன் அனைத்துக்கும் விடை சொன்னான். எந்தக் கேள்வியும் அவனுக்குப் பதிலளிக்க கஷ்டமாக இல்லை. அவள் சாலொமோனிடம் அறிவுத் திறனைக் கண்டுகொண்டாள். அவன் கட்டிய அரண்மனையின் அழகையும் பார்த்தாள். ராஜாவின் மேஜையில் இருந்த உணவுப்பொருட்களையும் பார்த்தாள். அவள் அதிகாரிகளின் கூட்டத்தையும் பார்வையிட்டாள். அரண்மனையில் வேலைக்காரர்களும் நன்றாக உடை அணிந்திருப்பதைக் கவனித்தாள். அவள் ஆலயத்தில் அவன் அளித்த விருந்துகளையும் பலிகளையும் பார்த்தாள். இவையெல்லாம் உண்மையில் அவளுக்கு வியப்பை உண்டாக்கி அவளது பெருமூச்சை வரவழைத்தது. எனவே இராணி சாலொமோனிடம், “நான் எனது நாட்டிலே உங்கள் அறிவைப்பற்றியும் உங்கள் செயல்களைப்பற்றியும் பலவாறு கேள்விப்பட்டேன். அத்தனையும் உண்மை. நான் இங்கே வந்து என் சொந்தக்கண்களால் காணும்வரை இவற்றை நம்பாமல் இருந்தேன். இப்போது கேள்விப்பட்டதை எல்லாம் கண்ணால் பார்த்துவிட்டேன். ஜனங்கள் சொன்னதைவிட உங்கள் அறிவும் செல்வமும் மிகுதியாகும். உங்கள் மனைவிகளும் வேலைக்காரர்களும் கொடுத்து வைத்தவர்கள்! அவர்கள் உங்களுக்கு பணிவிடை செய்து உங்கள் அறிவை ஒவ்வொரு நாளும் கேட்டு வருகிறார்கள்!