1 கொரிந்தியர் 4:3-21

1 கொரிந்தியர் 4:3-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே . ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனினிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன். அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்? இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே. எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம். நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர். இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம். எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம். தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம். உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன். ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன். தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?

1 கொரிந்தியர் 4:3-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்களாலேயாவது அல்லது எந்த மனிதருடைய நீதிமன்றத்தினாலேயாவது, நான் நியாயந்தீர்க்கப்படுவதை அற்பமாகவே எண்ணுகிறேன்; நானும் என்னைக்குறித்து நியாயத்தீர்ப்புச் செய்யவில்லை. என் மனசாட்சி சுத்தமாயிருக்கிறது, அதனால் நான் குற்றமற்றவன் என்றில்லை. கர்த்தரே என்னை நியாயந்தீர்க்கிறவர். எனவே, குறிக்கப்பட்ட காலம் வருமுன்னே, நீங்கள் யாரையும் நியாயந்தீர்க்கவேண்டாம்; கர்த்தர் வரும்வரை காத்திருங்கள். அவர் இருளில் மறைந்திருப்பவைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார். மனிதருடைய உள்ளங்களின் நோக்கங்களையும் வெளியரங்கப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவனும் தனக்குரிய புகழ்ச்சியை இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்வான். இப்பொழுதும் பிரியமானவர்களே, நான் உங்கள் நன்மையைக் கருத்தில்கொண்டே, என்னையும் அப்பொல்லோவையும் ஒரு எடுத்துக்காட்டாய் குறிப்பிட்டு, இவற்றை எழுதியிருக்கிறேன். இதனால், “எழுதியிருக்கிறதற்குமேல் போகவேண்டாம்” என்பதன் கருத்தை, நீங்கள் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்களில் ஒருவனைப்பற்றி இன்னொருவர் இகழமாட்டீர்கள். ஏனெனில், மற்ற எவரையும்விட உங்களை வித்தியாசப்படுத்துபவர் யார்? நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளாத எது உங்களிடம் இருக்கிறது? நீங்கள் எல்லாவற்றையும் பெற்றிருந்தால், அவற்றை ஒரு வரமாகப் பெற்றீர்கள் என்று எண்ணாமல், எப்படி பெருமைபாராட்டுகிறீர்கள்? உங்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் ஏற்கெனவே நீங்கள் பெற்றுக்கொண்டீர்களோ! நீங்கள் செல்வந்தர்களாகிவிட்டீர்களோ! நீங்கள் எங்களை விட்டுவிட்டு அரசர்களாகிவிட்டீர்களோ! ஆனால் நாங்களோ அப்படியல்ல. நீங்கள் உண்மையாகவே அரசர்களாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அப்பொழுது நாங்களும் உங்களுடன் சேர்ந்து அரசாளலாமே. ஆனால் எனக்கோ, கொலைக்களத்திற்கு சாகும்படி கொண்டுசெல்லப்படுகிறவர்களின் வரிசையின் இறுதியில், அப்போஸ்தலர்களாகிய எங்களையும் இறைவன் நிறுத்தி, ஒரு காட்சிப் பொருளானோம் என காணப்படப்பண்ணினர். நாங்கள் முழு உலகத்திற்கும், இறைத்தூதர்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு வேடிக்கையானோம். கிறிஸ்துவுக்காகவே நாங்கள் மூடர்களாயிருக்கிறோம். ஆனால், நீங்களோ கிறிஸ்துவில் எவ்வளவு ஞானமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்! நாங்கள் பெலவீனர், நீங்களோ பெலசாலிகள்! நீங்கள் மதிக்கப்படுகிறீர்கள், நாங்களோ அவமதிக்கப்படுகிறோம்! இந்த நேரத்திலும், நாங்கள் பசியும் தாகமும் உள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் பழைய உடைகளையே உடுத்திக்கொண்டும், கொடுமைப்படுத்தப்பட்டவர்களும், வீடற்றவர்களுமாய் இருக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்தக் கைகளினால் கடுமையாக உழைக்கிறோம். மற்றவர்கள் எங்களை சபிக்கும்போது, நாங்களோ ஆசீர்வதிக்கிறோம்; நாங்கள் துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம்; மற்றவர்கள் எங்களை அவதூறாய்ப் பேசுகிறபொழுது, நாங்கள் தயவுடன் பதிலளிக்கிறோம். நாங்கள் இதுவரை உலகத்தின் கழிவுப் பொருட்களாகவும், பூமியின் குப்பையாகவும் எண்ணப்படுகிறோம். உங்களை வெட்கப்படுத்தும்படியாக நான் இவற்றை உங்களுக்கு எழுதவில்லை. ஆனால் என் அன்பான பிள்ளைகளென எண்ணி, உங்களை எச்சரிப்பதற்காகவே இதை எழுதுகிறேன். கிறிஸ்துவில் உங்களுக்குப் பத்தாயிரம் வேதாகம ஆசிரியர்கள் இருக்கிறபோதிலும், உங்களுக்கு ஒரு தகப்பனே இருக்கிறார். நற்செய்தியின் மூலமாக நானே உங்களுக்குக் கிறிஸ்து இயேசுவுக்குள் தகப்பனானேன். ஆகவே நீங்களும் என்னைப்போலவே நடந்துகொள்ள வேண்டுமென நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன். இதற்காகவே, என் மகன் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பியுள்ளேன். அவன் எனக்கு அன்பானவன், அவன் கர்த்தரில் உண்மையுள்ளவன். அவன் கிறிஸ்து இயேசுவில், என் வாழ்க்கை முறையை உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். என் வாழ்க்கைமுறை எல்லா இடங்களிலும், எல்லாத் திருச்சபைகளிலும் நான் போதித்து வருவதன்படி அமைந்திருக்கிறது. நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என்று எண்ணி, உங்களில் சிலர் அகந்தைகொண்டிருக்கிறீர்கள். ஆனால் கர்த்தருக்கு விருப்பமானால், நான் மிகவிரைவில் உங்களிடம் வருவேன். அப்பொழுது, இந்த அகந்தைகொண்டவர்கள் பேசுவதை மட்டுமல்ல, அவர்களுடைய பெலத்தையும் அறிந்துகொள்வேன். ஏனெனில், இறைவனின் அரசு பேச்சிலே அல்ல, பெலத்திலே இருக்கிறது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? நான் உங்களிடம் பிரம்புடன் வரவேண்டுமா? அல்லது அன்புடனும், சாந்தமுள்ள ஆவியுடனும் வரவேண்டுமா?

1 கொரிந்தியர் 4:3-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆனாலும் நான் உங்களாலேயாவது மனிதர்களுடைய நியாயநாளின் விசாரணையினாலோ தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் சாதாரண காரியமாக இருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. என்னிடத்தில் நான் எந்தவொரு குற்றத்தையும் அறியேன்; ஆனாலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. ஆதலால், கர்த்தர் வரும்வரைக்கும் நீங்கள் காலத்திற்குமுன்னே எதைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளிப்படையாக்கி, இருதயங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். சகோதரர்களே, எழுதப்பட்டதற்கு அதிகமாக நினைக்கவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாக கர்வமடையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் ஆதாரமாக வைத்து, இவைகளை எழுதினேன். அன்றியும் உன்னை சிறப்பானவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது எது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல ஏன் மேன்மைபாராட்டுகிறாய்? இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாக இருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாக இருக்கும்; அப்பொழுது உங்களோடுகூட நாங்களும் ஆளுவோமே. தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாகக் காணப்படப்பண்ணினார் என்று தோன்றுகிறது; நாங்கள் உலகத்திற்கும் தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் வேடிக்கையானோம். நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்கள், ஆனால் நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனமானவர்கள், ஆனால் நீங்கள் பலவான்கள்; நீங்கள் மேன்மையானவர்கள், ஆனால் நாங்கள் மேன்மையற்றவர்கள். இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், கொடூரமாக தாக்கப்பட்டவர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாக இருக்கிறோம். எங்களுடைய கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், சபிக்கப்படும்போது ஆசீர்வதிக்கிறோம், துன்பப்படும்போது சகிக்கிறோம். நிந்திக்கப்படும்போது வேண்டிக்கொள்ளுகிறோம், இந்தநாள்வரை உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லோரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவும் ஆனோம். உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். கிறிஸ்துவிற்குள் பத்தாயிரம் ஆசிரியர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார்கள் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவிற்குள் நற்செய்தியினால் நான் உங்களைப்பெற்றேன். ஆகவே, என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிற பிரகாரம் கிறிஸ்துவிற்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். ஆனாலும் கர்த்தருக்கு விருப்பமானால் நான் சீக்கிரமாக உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சை அல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன். தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே இல்லை, பெலத்திலே உண்டாயிருக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டும்? நான் பிரம்போடு உங்களிடம் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?

1 கொரிந்தியர் 4:3-21 பரிசுத்த பைபிள் (TAERV)

நீங்கள் எனக்கு நீதி வழங்கினால் அதைப் பொருட்படுத்தமாட்டேன். எந்த உலகத்து நீதிமன்றமும் எனக்கு நியாயம் தீர்ப்பதைக் கூடப் பொருட்டாகக்கொள்ளமாட்டேன். நான் எனக்கு நீதி வழங்கமாட்டேன். நான் எந்தத் தவறும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னைக் களங்கம் அற்றவனாக மாற்றாது. என்னை நியாயம் தீர்க்கிறவர் கர்த்தர் ஒருவரே. எனவே தகுந்த நேரம் வரும் முன்பு நீதி வழங்காதீர்கள். கர்த்தர் வரும்வரை காத்திருங்கள் அவர் இருளில் மறைந்திருப்பவற்றின் மீது ஒளியை அனுப்புவார். மக்களின் மனதிலிருக்கும் இரகசியமான விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கீர்த்தியை அவனவனுக்குக் கிடைக்கும்படியாகச் செய்வார். சகோதர சகோதரிகளே! அப்பொல்லோவையும், என்னையும் இவற்றில் உதாரணங்களாக நான் உங்களுக்குக் காட்டினேன். எழுதப்பட்டுள்ள சொற்களின் பொருளை எங்களிடமிருந்து நீங்கள் அறிந்துகொள்ளுமாறு இதைச் செய்தேன். “வேத வாக்கியங்களில் எழுதி இருப்பதைப் பின்பற்றி நடவுங்கள்.” அப்போது நீங்கள் ஒருவனைக் குறித்துப் பெருமை பாராட்டி, இன்னொருவனை வெறுக்கமாட்டீர்கள். நீங்கள் பிற மக்களை விட சிறந்தவர்கள் என்று யார் கூறினார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றையே நீங்கள் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்குத் தரப்பட்டவையே உங்களுக்கு வாய்த்திருக்கையில் அவற்றை உங்கள் வல்லமையால் பெற்றதாக நீங்கள் ஏன் பெருமை அடைய வேண்டும்? உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் செல்வந்தர்களென எண்ணுகிறீர்கள். எங்கள் உதவியின்றி நீங்கள் ஆளுபவர்களாக விளங்குவதாகக் கருதுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மன்னர்களாக விளங்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது, நாங்களும் உங்களோடுகூட ஆளுபவர்களாக இருந்திருப்போம். ஆனால் தேவன் எனக்கும் பிற அப்போஸ்தலர்களுக்கும் கடைசியான இடத்தையே கொடுத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் பார்த்திருக்க மரண தண்டனை அளிக்கப்பட்ட மனிதர்களைப் போன்றவர்கள் நாங்கள். தேவ தூதர்களும் மனிதர்களும் முழு உலகமும் பார்த்திருக்கும் ஒரு காட்சியைப் போன்றவர்கள் நாங்கள். கிறிஸ்துவுக்கு நாங்கள் மூடர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஞானிகளாக நீங்கள் உங்களைக் கருதுகிறீர்கள். நாங்கள் பலவீனர்கள். ஆனால் நீங்கள் பலசாலிகளாக நினைக்கிறீர்கள். மக்கள் உங்களை கௌரவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எங்களை கௌரவப்படுத்துவதில்லை. இப்போதும் குடிப்பதற்கும், உண்பதற்கும் தேவையான பொருள்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களுக்கு வேண்டிய ஆடைகள் இருப்பதில்லை. அவ்வப்போது பிறரால் அடிக்கப்படுகிறோம். எங்களுக்கு வீடுகள் இல்லை. எங்களுக்குத் தேவையான உணவின்பொருட்டு எங்கள் கைகளால் கடினமாக உழைக்கிறோம். மக்கள் எங்களை சபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறபோது பொறுமையுடன் சகித்துக்கொள்கிறோம். மக்கள் குறை கூறுகையில் பொறுத்துக்கொள்கிறோம். மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர். நீங்கள் வெட்கமடையுமாறு செய்ய நான் முயலவில்லை. உங்களை எனது சொந்தக் குழந்தைகளெனக் கருதி இவற்றையெல்லாம் உங்களுக்கு முன் எச்சரிக்கையாய் எழுதுகிறேன். கிறிஸ்துவில் பதினாயிரம் போதகர்களை நீங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் உங்களுக்குப் பல தந்தையர் இல்லை. நற்செய்தியின் மூலமாகக் கிறிஸ்து இயேசுவில் நான் உங்களுக்குத் தந்தையானேன். நீங்களும் என்னைப் போலவே இருக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன். அதனாலேயே நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கர்த்தருக்குள் அவன் என் குமாரன் ஆவான். நான் தீமோத்தேயுவை நேசிக்கிறேன். அவன் உண்மையுள்ளவன். கிறிஸ்து இயேசுவில் என் வாழ்வின் நெறியை நீங்கள் நினைவுகூருவதற்கு அவன் உதவி செய்வான். எல்லா சபைகளிலும் அந்த வாழ்க்கை நெறியையே நான் போதிக்கிறேன். நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என எண்ணி உங்களில் சிலர் தற்பெருமையால் நிரம்பி இருக்கிறீர்கள். ஆனால் மிக விரைவில் உங்களிடம் வருவேன். தேவன் நான் வரவேண்டுமென விரும்பினால் நான் வருவேன். அப்போது தற் பெருமை பாராட்டுவோர் சொல்வதை அல்ல, செயலில் காட்டுவதைக் காண்பேன். தேவனுடைய இராஜ்யம் பேச்சல்ல, பெலத்திலே என்பதால் இதைக் காண விரும்புகிறேன். உங்கள் விருப்பம் என்ன? நான் உங்களிடம் தண்டனை தர வருவதா? அல்லது அன்பு, மென்மை ஆகியவற்றோடு வருவதா?