கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 4:3-21

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 4:3-21 TAERV

நீங்கள் எனக்கு நீதி வழங்கினால் அதைப் பொருட்படுத்தமாட்டேன். எந்த உலகத்து நீதிமன்றமும் எனக்கு நியாயம் தீர்ப்பதைக் கூடப் பொருட்டாகக்கொள்ளமாட்டேன். நான் எனக்கு நீதி வழங்கமாட்டேன். நான் எந்தத் தவறும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னைக் களங்கம் அற்றவனாக மாற்றாது. என்னை நியாயம் தீர்க்கிறவர் கர்த்தர் ஒருவரே. எனவே தகுந்த நேரம் வரும் முன்பு நீதி வழங்காதீர்கள். கர்த்தர் வரும்வரை காத்திருங்கள் அவர் இருளில் மறைந்திருப்பவற்றின் மீது ஒளியை அனுப்புவார். மக்களின் மனதிலிருக்கும் இரகசியமான விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கீர்த்தியை அவனவனுக்குக் கிடைக்கும்படியாகச் செய்வார். சகோதர சகோதரிகளே! அப்பொல்லோவையும், என்னையும் இவற்றில் உதாரணங்களாக நான் உங்களுக்குக் காட்டினேன். எழுதப்பட்டுள்ள சொற்களின் பொருளை எங்களிடமிருந்து நீங்கள் அறிந்துகொள்ளுமாறு இதைச் செய்தேன். “வேத வாக்கியங்களில் எழுதி இருப்பதைப் பின்பற்றி நடவுங்கள்.” அப்போது நீங்கள் ஒருவனைக் குறித்துப் பெருமை பாராட்டி, இன்னொருவனை வெறுக்கமாட்டீர்கள். நீங்கள் பிற மக்களை விட சிறந்தவர்கள் என்று யார் கூறினார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றையே நீங்கள் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்குத் தரப்பட்டவையே உங்களுக்கு வாய்த்திருக்கையில் அவற்றை உங்கள் வல்லமையால் பெற்றதாக நீங்கள் ஏன் பெருமை அடைய வேண்டும்? உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் செல்வந்தர்களென எண்ணுகிறீர்கள். எங்கள் உதவியின்றி நீங்கள் ஆளுபவர்களாக விளங்குவதாகக் கருதுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மன்னர்களாக விளங்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது, நாங்களும் உங்களோடுகூட ஆளுபவர்களாக இருந்திருப்போம். ஆனால் தேவன் எனக்கும் பிற அப்போஸ்தலர்களுக்கும் கடைசியான இடத்தையே கொடுத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் பார்த்திருக்க மரண தண்டனை அளிக்கப்பட்ட மனிதர்களைப் போன்றவர்கள் நாங்கள். தேவ தூதர்களும் மனிதர்களும் முழு உலகமும் பார்த்திருக்கும் ஒரு காட்சியைப் போன்றவர்கள் நாங்கள். கிறிஸ்துவுக்கு நாங்கள் மூடர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஞானிகளாக நீங்கள் உங்களைக் கருதுகிறீர்கள். நாங்கள் பலவீனர்கள். ஆனால் நீங்கள் பலசாலிகளாக நினைக்கிறீர்கள். மக்கள் உங்களை கௌரவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எங்களை கௌரவப்படுத்துவதில்லை. இப்போதும் குடிப்பதற்கும், உண்பதற்கும் தேவையான பொருள்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களுக்கு வேண்டிய ஆடைகள் இருப்பதில்லை. அவ்வப்போது பிறரால் அடிக்கப்படுகிறோம். எங்களுக்கு வீடுகள் இல்லை. எங்களுக்குத் தேவையான உணவின்பொருட்டு எங்கள் கைகளால் கடினமாக உழைக்கிறோம். மக்கள் எங்களை சபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறபோது பொறுமையுடன் சகித்துக்கொள்கிறோம். மக்கள் குறை கூறுகையில் பொறுத்துக்கொள்கிறோம். மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர். நீங்கள் வெட்கமடையுமாறு செய்ய நான் முயலவில்லை. உங்களை எனது சொந்தக் குழந்தைகளெனக் கருதி இவற்றையெல்லாம் உங்களுக்கு முன் எச்சரிக்கையாய் எழுதுகிறேன். கிறிஸ்துவில் பதினாயிரம் போதகர்களை நீங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் உங்களுக்குப் பல தந்தையர் இல்லை. நற்செய்தியின் மூலமாகக் கிறிஸ்து இயேசுவில் நான் உங்களுக்குத் தந்தையானேன். நீங்களும் என்னைப் போலவே இருக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன். அதனாலேயே நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கர்த்தருக்குள் அவன் என் குமாரன் ஆவான். நான் தீமோத்தேயுவை நேசிக்கிறேன். அவன் உண்மையுள்ளவன். கிறிஸ்து இயேசுவில் என் வாழ்வின் நெறியை நீங்கள் நினைவுகூருவதற்கு அவன் உதவி செய்வான். எல்லா சபைகளிலும் அந்த வாழ்க்கை நெறியையே நான் போதிக்கிறேன். நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என எண்ணி உங்களில் சிலர் தற்பெருமையால் நிரம்பி இருக்கிறீர்கள். ஆனால் மிக விரைவில் உங்களிடம் வருவேன். தேவன் நான் வரவேண்டுமென விரும்பினால் நான் வருவேன். அப்போது தற் பெருமை பாராட்டுவோர் சொல்வதை அல்ல, செயலில் காட்டுவதைக் காண்பேன். தேவனுடைய இராஜ்யம் பேச்சல்ல, பெலத்திலே என்பதால் இதைக் காண விரும்புகிறேன். உங்கள் விருப்பம் என்ன? நான் உங்களிடம் தண்டனை தர வருவதா? அல்லது அன்பு, மென்மை ஆகியவற்றோடு வருவதா?