1 கொரிந்தியர் 15:35-54

1 கொரிந்தியர் 15:35-54 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால், “இறந்தவர்கள் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? அவர்கள் எப்படியான உடலைப் பெற்றுக்கொள்வார்கள்?” என்று சிலர் கேட்கலாம். இது மூடத்தனமான கேள்வியே. நீங்கள் விதைக்கின்ற விதை, முதலில் செத்தால்தானே அது முளைவிட்டு வளரும். நீங்கள் விதைக்கும்போது, முழு வளர்ச்சி பெறப்போகும் செடியை நீங்கள் விதைக்கவில்லையே. நீங்கள் வெறும் விதையையே விதைக்கிறீர்கள். அது கோதுமையாகவோ, அல்லது வேறு தானியமாகவோ இருக்கலாம். இறைவனே தாம் தீர்மானித்தபடி, அதற்கு உடலைக் கொடுக்கிறார். ஒவ்வொருவிதமான விதைக்கும், அதற்குச் சொந்தமான உடலை அவர் கொடுக்கிறார். உயிரினங்களின் சதைகள் எல்லாம் ஒரே விதமானவை அல்ல: மனித உடலின் சதை ஒரு விதமானது, மிருகங்களுக்கு ஒருவிதமும், பறவைகளுக்கு இன்னொரு விதமும், மீன்களுக்கு மற்றொரு விதமாகவும் சதையுள்ளது. வானுலக உருவங்களும் உண்டு, பூவுலக உருவங்களும் உண்டு. வானுலக உருவங்களின் சிறப்பு ஒரு விதமானது, பூவுலக உருவங்களின் சிறப்பு இன்னொரு விதமானது. சூரியனின் சிறப்பு ஒரு விதமானது, சந்திரனின் சிறப்பு மற்றொரு விதமானது, நட்சத்திரங்களின் சிறப்பும் இன்னொரு விதமானது; நட்சத்திரங்களும்கூட சிறப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகிறது. இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படும்போது, இவ்விதமாகவே இருக்கும். புதைக்கப்படும் உடல் அழிவுக்குரியது, அது அழியாமைக்குரியதாய் எழுப்பப்படுகிறது. அது மதிப்பற்றதாய் புதைக்கப்படுகிறது, மகிமையில் எழுப்பப்படுகிறது. அது பலவீனமானதாய் புதைக்கப்படுகிறது, பலமுள்ளதாய் எழுப்பப்படுகிறது. அது இயற்கை உடலாய்ப் புதைக்கப்படுகிறது, ஆவிக்குரிய உடலாய் எழுப்பப்படுகிறது. மனிதனுக்கு இயற்கை உடல் இருப்பதுபோலவே, ஆவிக்குரிய உடலும் இருக்கிறது. ஏனெனில் எழுதப்பட்டிருக்கிறபடி: “முதல் மனிதனாகிய ஆதாம் உயிருள்ளவனானான்”; கடைசி ஆதாமோ, உயிர்கொடுக்கும் ஆவியானார். முதலில் வந்தது ஆவிக்குரிய உடல் அல்ல, மனிதனின் இயற்கை உடலே. பின்பே ஆவிக்குரிய உடல் வந்தது. முதல் மனிதன் பூமியின் புழுதியினால் ஆனவன். இரண்டாவது வந்த மனிதரோ, பரலோகத்திலிருந்து வந்தவர். பூமியின் மனிதன் எப்படியோ, பூமியைச் சேர்ந்தவர்களும் அப்படியே; பரலோகத்திலிருந்து வந்தவரைப் போலவே, பரலோகத்துக்குரியவர்களும் இருக்கிறார்கள். நாம் பூமியிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் தன்மையை உடையவர்களாய் இருக்கிறது போலவே, நாம் பரலோகத்திற்குரிய மனிதரின் தன்மையையும் பெறுவோம். பிரியமானவர்களே, நான் உங்களுக்கு அறிவிக்கிறதாவது, மாம்சமும், இரத்தமும் இறைவனுடைய அரசை உரிமையாகப் பெற்றுக்கொள்வதில்லை. அழிவுக்குரியது அழியாமையை உரிமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது. கேளுங்கள், நான் உங்களுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன்: நாம் எல்லோரும் மரண நித்திரையடைவதில்லை. நாம் எல்லோரும் மாற்றமடைவோம். கடைசி எக்காளம் தொனிக்கும்போது, கண்ணிமைக்கும் ஒரு நொடிப்பொழுதில் இது நடைபெறும். ஏனெனில், எக்காளம் தொனிக்கும்போது, இறந்து போனவர்கள் அழியாமையுடன் எழுப்பப்படுவார்கள். அப்பொழுது நாமும் மாற்றமடைவோம். ஏனெனில் அழிவுக்குரியது தன்னை அழியாமையினால் உடுத்திக்கொள்ளவேண்டும். சாகும் தன்மையுடையது சாகாநிலையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அழிவுக்குரியது அழியாமையை அணிந்துகொள்ளும்போதும், சாகும் தன்மையுள்ளது சாகாமையைப் பெற்றுக்கொள்ளும்போதும், எழுதப்பட்ட வசனங்கள் இவ்வாறு நிறைவேறும்: “மரணம் வெற்றியினால் விழுங்கப்பட்டது.”

1 கொரிந்தியர் 15:35-54 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆனாலும், மரித்தோர் எப்படி உயிரோடு எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் கேட்பானானால், புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிரடையாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதைக்காமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்கு தேவன் தமது விருப்பத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனிதர்களுடைய மாம்சம் வேறு, மிருகங்களுடைய மாம்சம் வேறு, மீன்களுடைய மாம்சம் வேறு, பறவைகளுடைய மாம்சம் வேறு. வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு; சூரியனுடைய மகிமையும் வேறு, சந்திரனுடைய மகிமையும் வேறு, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறு, மகிமையிலே நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாக விதைக்கப்படும், அழிவில்லாததாக எழுந்திருக்கும்; மதிப்பில்லாததாக விதைக்கப்படும், மகிமையுள்ளதாக எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாக விதைக்கப்படும், பலமுள்ளதாக எழுந்திருக்கும். சாதாரண சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; சாதாரண சரீரமும் உண்டு, ஆவிக்குரிய சரீரமும் உண்டு. அந்தப்படியே முந்தின மனிதனாகிய ஆதாம் ஜீவ ஆத்துமாவானான் என்று எழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானவர். ஆனாலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, சாதாரண சரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனிதன் பூமியிலிருந்து உண்டான மண்ணானவன்; இரண்டாம் மனிதன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்திற்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்திற்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம். சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லோரும் மரணமடைவதில்லை; ஆனாலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிடத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லோரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் அணிந்துகொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.

1 கொரிந்தியர் 15:35-54 பரிசுத்த பைபிள் (TAERV)

“எப்படி இறந்தோர் எழுப்பப்படுவர்? அவர்களுக்கு எத்தகைய சரீரம் அமையும்?” என்று சிலர் கேட்கக்கூடும். என்ன ஒரு தேவையற்ற கேள்வி! எதையேனும் விதைத்தால் அது மீண்டும் உயிர்பெற்று வளருவதற்கு முன் பூமியில் விழுந்து மடியும். அது பூமியில் இருந்து வளரும்போது பெறுகின்ற “தோற்றத்தை” அதை பூமியில் விதைக்கும்போது பெற்றிருப்பதில்லை. நீங்கள் விதைப்பது கோதுமை அல்லது வேறு ஏதாவது ஒரு தானிய விதை மட்டுமே. ஆனால் தேவன் அதற்கு என வகுக்கப்பட்டுள்ள ஓர் உருவைக் கொடுக்கிறார். ஒவ்வொரு வகையான விதைக்கும் அதற்குரிய உருவத்தை அளிக்கிறார். மாம்சத்திலான உயிர்கள் அனைத்தும் ஒரே வகையான உருவைப் பெற்றிருக்கவில்லை. மனிதர் ஒருவகை உருவையும், விலங்குகள் மற்றொரு வகை உருவத்தையும், பறவைகள் இன்னொரு வகை தோற்றத்தையும் மீன்கள் பிறிதொரு அமைப்பையும் பெற்றிருக்கின்றன. வானத்துக்குரிய சரீரங்களும் உண்டு. மண்ணுக்குரிய சரீரங்களும் உண்டு. வானத்துக்குரிய சரீரங்களின் அழகு ஒருவகையானது. மண்ணுக்குரிய சரீரங்களின் அழகு மற்றொரு வகையானது. சூரியனுக்கு ஒருவகை அழகும், சந்திரனுக்கு மற்றொரு வகை அழகும், நட்சத்திரங்களுக்கு வேறு வகையான அழகும் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரமும் அழகில் வேறுபட்டது. மரணமடைந்த மக்கள் எழுப்பப்படும்போதும் இவ்வாறே நிகழும். மரணத்தின் பின் “புதைக்கப்பட்ட” சரீரம் கெட்டு அழியும். ஆனால் எழுப்பப்பட்ட சரீரம் அழிவற்ற வாழ்வைக் கொண்டிருக்கும். சரீரம் “புதைக்கப்படுகிறபோது” மரணத்திற்கு எந்த கௌரமும் இல்லை. ஆனால் அது மீண்டும் எழுப்பப்படும்போது அது மகிமையில் எழுப்பப்படுகிறது. புதைக்கப்படுகிறபோது பலவீனமாக இருக்கிறது. ஆனால் அது ஆற்றலில் எழுப்பப்படுகிறது. “அடக்கம் செய்யப்பட்ட” சரீரம் பூத சரீரம். எழுப்பப்படும்போது அது ஆவிக்குரிய சரீரமாகும். பூத சரீரம் ஒன்று உண்டு. எனவே ஆவிக்குரிய சரீரமும் உண்டு. இதே பொருளில் “முதல் மனிதன் (ஆதாம்) உயிருள்ளவனானான்.” இறுதி ஆதாமாகிய கிறிஸ்துவோ உயிரளிக்கும் ஆவியானவரானார் என்று வேதவாக்கியம் கூறுகிறது. ஆவிக்குரிய சரீரம் முதலில் தோன்றவில்லை. இயற்கையான சரீரத்துக்குரிய மனிதனே முதலில் தோன்றினான். பின்னரே ஆவிக்குரிய மனிதனின் தோற்றம் அமைந்தது. முதல் மனிதன் பூமியின் மண்ணிலிருந்து வந்தவன். இரண்டாம் மனிதன் (கிறிஸ்து) பரலோகத்திலிருந்து வந்தவர். மக்கள் பூமிக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் பூமியில் இருந்து வந்த முதல் மனிதனைப் போன்றவர்கள். ஆனால் பரலோகத்துக்குரிய மனிதர்கள் பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றவர்கள். நாம் பூமியிலிருந்து வந்த மனிதனைப் போன்று அமைக்கப்பட்டோம். எனவே பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றும் அமைக்கப்படுவோம். சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்குக் கூறுகிறேன். மாம்சமும், இரத்தமும் (பூத சரீரம்) தேவனுடைய இராஜ்யத்தில் இருக்கமுடியாது! அழியத்தக்க பொருள் அழிவற்ற பொருளின் பாகமாக மாற முடியாது! ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம். அழியக் கூடிய இந்த சரீரம் என்றும் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். மரணமுறும் இந்த உடம்பு மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். எனவே அழியக்கூடிய இந்த சரீரம் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும். மரணத்திற்குள்ளாகும் இச்சரீரம் மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும். இது நடந்தேறும்போது வேத வாக்கியத்தின் வாசகம் உண்மையாகும்.

1 கொரிந்தியர் 15:35-54 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ளுவோம். சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.