1 கொரிந்தியர் 15:35-54

1 கொரிந்தியர் 15:35-54 TCV

ஆனால், “இறந்தவர்கள் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? அவர்கள் எப்படியான உடலைப் பெற்றுக்கொள்வார்கள்?” என்று சிலர் கேட்கலாம். இது மூடத்தனமான கேள்வியே. நீங்கள் விதைக்கின்ற விதை, முதலில் செத்தால்தானே அது முளைவிட்டு வளரும். நீங்கள் விதைக்கும்போது, முழு வளர்ச்சி பெறப்போகும் செடியை நீங்கள் விதைக்கவில்லையே. நீங்கள் வெறும் விதையையே விதைக்கிறீர்கள். அது கோதுமையாகவோ, அல்லது வேறு தானியமாகவோ இருக்கலாம். இறைவனே தாம் தீர்மானித்தபடி, அதற்கு உடலைக் கொடுக்கிறார். ஒவ்வொருவிதமான விதைக்கும், அதற்குச் சொந்தமான உடலை அவர் கொடுக்கிறார். உயிரினங்களின் சதைகள் எல்லாம் ஒரே விதமானவை அல்ல: மனித உடலின் சதை ஒரு விதமானது, மிருகங்களுக்கு ஒருவிதமும், பறவைகளுக்கு இன்னொரு விதமும், மீன்களுக்கு மற்றொரு விதமாகவும் சதையுள்ளது. வானுலக உருவங்களும் உண்டு, பூவுலக உருவங்களும் உண்டு. வானுலக உருவங்களின் சிறப்பு ஒரு விதமானது, பூவுலக உருவங்களின் சிறப்பு இன்னொரு விதமானது. சூரியனின் சிறப்பு ஒரு விதமானது, சந்திரனின் சிறப்பு மற்றொரு விதமானது, நட்சத்திரங்களின் சிறப்பும் இன்னொரு விதமானது; நட்சத்திரங்களும்கூட சிறப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகிறது. இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படும்போது, இவ்விதமாகவே இருக்கும். புதைக்கப்படும் உடல் அழிவுக்குரியது, அது அழியாமைக்குரியதாய் எழுப்பப்படுகிறது. அது மதிப்பற்றதாய் புதைக்கப்படுகிறது, மகிமையில் எழுப்பப்படுகிறது. அது பலவீனமானதாய் புதைக்கப்படுகிறது, பலமுள்ளதாய் எழுப்பப்படுகிறது. அது இயற்கை உடலாய்ப் புதைக்கப்படுகிறது, ஆவிக்குரிய உடலாய் எழுப்பப்படுகிறது. மனிதனுக்கு இயற்கை உடல் இருப்பதுபோலவே, ஆவிக்குரிய உடலும் இருக்கிறது. ஏனெனில் எழுதப்பட்டிருக்கிறபடி: “முதல் மனிதனாகிய ஆதாம் உயிருள்ளவனானான்”; கடைசி ஆதாமோ, உயிர்கொடுக்கும் ஆவியானார். முதலில் வந்தது ஆவிக்குரிய உடல் அல்ல, மனிதனின் இயற்கை உடலே. பின்பே ஆவிக்குரிய உடல் வந்தது. முதல் மனிதன் பூமியின் புழுதியினால் ஆனவன். இரண்டாவது வந்த மனிதரோ, பரலோகத்திலிருந்து வந்தவர். பூமியின் மனிதன் எப்படியோ, பூமியைச் சேர்ந்தவர்களும் அப்படியே; பரலோகத்திலிருந்து வந்தவரைப் போலவே, பரலோகத்துக்குரியவர்களும் இருக்கிறார்கள். நாம் பூமியிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் தன்மையை உடையவர்களாய் இருக்கிறது போலவே, நாம் பரலோகத்திற்குரிய மனிதரின் தன்மையையும் பெறுவோம். பிரியமானவர்களே, நான் உங்களுக்கு அறிவிக்கிறதாவது, மாம்சமும், இரத்தமும் இறைவனுடைய அரசை உரிமையாகப் பெற்றுக்கொள்வதில்லை. அழிவுக்குரியது அழியாமையை உரிமையாகப் பெற்றுக்கொள்ள முடியாது. கேளுங்கள், நான் உங்களுக்கு ஒரு இரகசியத்தைச் சொல்கிறேன்: நாம் எல்லோரும் மரண நித்திரையடைவதில்லை. நாம் எல்லோரும் மாற்றமடைவோம். கடைசி எக்காளம் தொனிக்கும்போது, கண்ணிமைக்கும் ஒரு நொடிப்பொழுதில் இது நடைபெறும். ஏனெனில், எக்காளம் தொனிக்கும்போது, இறந்து போனவர்கள் அழியாமையுடன் எழுப்பப்படுவார்கள். அப்பொழுது நாமும் மாற்றமடைவோம். ஏனெனில் அழிவுக்குரியது தன்னை அழியாமையினால் உடுத்திக்கொள்ளவேண்டும். சாகும் தன்மையுடையது சாகாநிலையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அழிவுக்குரியது அழியாமையை அணிந்துகொள்ளும்போதும், சாகும் தன்மையுள்ளது சாகாமையைப் பெற்றுக்கொள்ளும்போதும், எழுதப்பட்ட வசனங்கள் இவ்வாறு நிறைவேறும்: “மரணம் வெற்றியினால் விழுங்கப்பட்டது.”

Video for 1 கொரிந்தியர் 15:35-54

1 கொரிந்தியர் 15:35-54 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்