1 கொரிந்தியர் 10:1-11

1 கொரிந்தியர் 10:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, நமது முற்பிதாக்கள் அனைவரையும் இறைவன் வனாந்திரத்தில் தம் மேகத்தின்கீழ் வழிநடத்தினார். அவர்கள் அனைவருமே செங்கடலைக் கடந்து சென்றார்கள். இந்த உண்மையை நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் மேகத்திலும், கடலிலும், மோசேக்குள் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே உணவைச் சாப்பிட்டார்கள். இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே பானத்தைக் குடித்தார்கள்; அவர்களுடன்கூடச் சென்ற அந்த ஆவிக்குரிய கற்பாறை கொடுத்த தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கற்பாறை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், இறைவன் அவர்களில் அதிகமானவர்கள்மேல் பிரியமாயிருக்கவில்லை; இதனால், அவர்களுடைய உடல்கள் வனாந்திரத்தில் சிதறடிக்கப்பட்டன. அவர்கள் தீமையான காரியங்களின்மேல் தங்கள் இருதயங்களில் நாட்டம் கொண்டதுபோல நாமும் இராதபடி, இவை நமக்கு ஒரு எச்சரிக்கையின் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. அவர்களில் சிலர் விக்கிரக வழிபாட்டுக்காரர்களாக இருந்ததுபோல, நீங்களும் இருக்கவேண்டாம்; “மக்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் உட்கார்ந்தார்கள். பின்பு களியாட்டங்களில் நாட்டங்கொண்டு எழுந்திருந்தார்கள்” என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் செய்ததைப்போல, நீங்களும் முறைகேடான பாலுறவில் ஈடுபடக்கூடாது. இதனால் அவர்களில் இருபத்து மூவாயிரம்பேர் ஒரே நாளில் செத்தார்களே. அவர்களில் சிலர் செய்ததுபோல நாம் கிறிஸ்துவைச் சோதிக்கக்கூடாது. இதனால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்களே. அவர்களில் சிலர் செய்ததைப்போல நாம் முறுமுறுக்கக் கூடாது. இதனால் அவர்கள் அழிக்கும் தூதனால் கொல்லப்பட்டார்களே. மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர்.

1 கொரிந்தியர் 10:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்திற்குக் கீழே இருந்தார்கள், எல்லோரும், கடலின்வழியாக நடந்துவந்தார்கள். எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் கடலினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள். எல்லோரும் ஒரே ஆவிக்குரிய ஆகாரத்தைச் சாப்பிட்டார்கள். எல்லோரும் ஒரே ஆவிக்குரிய தண்ணீரைக் குடித்தார்கள். எப்படியென்றால், அவர்களோடுகூடச்சென்ற ஆவிக்குரிய கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானவர்களிடத்தில் தேவன் பிரியமாக இருக்கவில்லை; ஆகவே வனாந்திரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் இச்சித்ததுபோல நாமும் தீங்கானவைகளை இச்சிக்காதபடிக்கு, இவைகள் நமக்கு அடையாளமாக இருக்கிறது. மக்கள் உட்கார்ந்து உண்ணவும், குடிக்கவும், வேசித்தன எண்ணத்தோடு விளையாடவும் எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரக ஆராதனைக்காரர்களானதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். அவர்களில் சிலர் வேசித்தனம்செய்து, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம்பேர் இறந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்செய்யாதிருப்போமாக. அவர்களில் சிலர் கர்த்த்தரைச் சோதித்துப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைச் சோதித்துப்பார்க்காமலிருப்போமாக. அவர்களில் சிலர் முறுமுறுத்து, மரண தூதனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காமலிருங்கள். இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

1 கொரிந்தியர் 10:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே, மோசேயைப் பின்பற்றிய நமது முன்னோர்களுக்கு நேர்ந்தது என்னவென்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்: அவர்கள் எல்லாரும் மேகத்தின் கீழ் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கடல்வழியே கடந்து சென்றார்கள். அந்த மக்கள் எல்லாரும் மேகத்திலும் கடலிலும் மோசேயோடு உள்ள நல்லுறவில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்கள். ஒரே வகையான ஆன்மீக உணவை அவர்கள் அனைவரும் உட்கொண்டார்கள். ஒரே வகையான ஆன்மீக பானத்தை அவர்கள் பருகினார்கள். அவர்களோடிருந்த ஆன்மீகப் பாறையில் இருந்து அவர்கள் பருகினர். அந்தப் பாறை கிறிஸ்து. ஆனால் அம்மக்கள் பலர் தேவனுக்கு உகந்தவர்களாய் இருக்கவில்லை. வானந்தரத்தில் அவர்கள் கொல்லப்பட்டார்கள். நடந்தேறிய இக்காரியங்கள் நமக்கு உதாரணங்களாக அமையும். அந்த மக்கள் செய்த தீய காரியத்தைச் செய்ய விரும்புவதினின்று இவை நம்மைத் தடுத்து நிறுத்தும். அந்த மக்களில் சிலர் செய்தது போல் விக்கிரகங்களை வணங்காதீர்கள். “மக்கள் உண்பதற்காகவும் பருகுவதற்காகவும் அமர்ந்தனர். மக்கள் நடனமாடுவதற்காக எழுந்து நின்றனர்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த மக்களுள் சிலர் செய்ததைப்போல் பாலுறவுப் பாவங்களை நாம் செய்யக் கூடாது. ஒரே நாளில் தம் பாவத்தினால், 23,000 பேர் இறந்தனர். அம்மக்களில் சிலர் செய்தது போல் நாம் கர்த்தரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது. கர்த்தரைச் சோதித்ததால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்கள். அம்மக்களுள் சிலர் செய்ததுபோல் முறுமுறுக்காதீர்கள். அழிவுக்கான தேவ தூதனால் அம்மக்கள் கொல்லப்பட்டார்கள். அம்மக்களுக்கு நடந்தவை நமக்கு உதாரணங்கள் ஆகும். நமக்கு எச்சரிக்கையாக அவை எழுதப்பட்டுள்ளன. அப்பழைய வரலாறுகள் முடிவடையும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

1 கொரிந்தியர் 10:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.