1 கொரிந்தியர் 10:1-11

1 கொரிந்தியர் 10:1-11 TCV

பிரியமானவர்களே, நமது முற்பிதாக்கள் அனைவரையும் இறைவன் வனாந்திரத்தில் தம் மேகத்தின்கீழ் வழிநடத்தினார். அவர்கள் அனைவருமே செங்கடலைக் கடந்து சென்றார்கள். இந்த உண்மையை நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் மேகத்திலும், கடலிலும், மோசேக்குள் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே உணவைச் சாப்பிட்டார்கள். இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே பானத்தைக் குடித்தார்கள்; அவர்களுடன்கூடச் சென்ற அந்த ஆவிக்குரிய கற்பாறை கொடுத்த தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கற்பாறை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், இறைவன் அவர்களில் அதிகமானவர்கள்மேல் பிரியமாயிருக்கவில்லை; இதனால், அவர்களுடைய உடல்கள் வனாந்திரத்தில் சிதறடிக்கப்பட்டன. அவர்கள் தீமையான காரியங்களின்மேல் தங்கள் இருதயங்களில் நாட்டம் கொண்டதுபோல நாமும் இராதபடி, இவை நமக்கு ஒரு எச்சரிக்கையின் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. அவர்களில் சிலர் விக்கிரக வழிபாட்டுக்காரர்களாக இருந்ததுபோல, நீங்களும் இருக்கவேண்டாம்; “மக்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் உட்கார்ந்தார்கள். பின்பு களியாட்டங்களில் நாட்டங்கொண்டு எழுந்திருந்தார்கள்” என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் செய்ததைப்போல, நீங்களும் முறைகேடான பாலுறவில் ஈடுபடக்கூடாது. இதனால் அவர்களில் இருபத்து மூவாயிரம்பேர் ஒரே நாளில் செத்தார்களே. அவர்களில் சிலர் செய்ததுபோல நாம் கிறிஸ்துவைச் சோதிக்கக்கூடாது. இதனால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்களே. அவர்களில் சிலர் செய்ததைப்போல நாம் முறுமுறுக்கக் கூடாது. இதனால் அவர்கள் அழிக்கும் தூதனால் கொல்லப்பட்டார்களே. மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர்.