1 கொரிந்தியர் 1:1-17

1 கொரிந்தியர் 1:1-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவனின் சித்தத்தின்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாயிருக்கும்படி அழைக்கப்பட்ட பவுலும், நமது சகோதரனாகிய சொஸ்தெனேயும் எழுதுகிறதாவது, கொரிந்துவில் இருக்கும் இறைவனுடைய திருச்சபைக்கு, கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்டும் பரிசுத்தமாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரைச் சொல்லி ஒன்றிணைந்து எல்லா இடங்களிலும் ஆராதிக்கிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. கிறிஸ்து இயேசுவில் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சுத்திறனிலும், எல்லா அறிவிலும், எல்லாவகையிலும் செல்வச் சிறப்புடையவர்களாய் விளங்குகிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவைப்பற்றிய எங்களுடைய சாட்சி உங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நீங்கள், ஆவிக்குரிய வரம் யாதொன்றிலும் குறைவுபடாதிருக்கிறீர்கள். இறைவன் கடைசிமட்டும் உங்களைப் பலமுள்ளவர்களாய்க் காத்துக்கொள்வார். அதனால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து திரும்பவரும் நாளில், நீங்கள் எந்தவித குற்றமும் சாட்டப்படாதவர்களாய் இருப்பீர்கள். தமது மகனும், நமது கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு, உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர். பிரியமானவர்களே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துப்போகிறவர்களாய் இருந்தால், உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்காது. அத்துடன் நீங்களும், உங்கள் மனதிலும் சிந்தனையிலும் முழுமையாக ஒருமைப்பட்டும் இருப்பீர்கள். பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள். உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். இவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். கிறிஸ்து பிளவுப்பட்டுள்ளாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா திருமுழுக்கைப் பெற்றீர்கள்? கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் யாருக்காகிலும் நான் திருமுழுக்கு கொடுக்கவில்லையே. அதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆகவே, என் பெயரால் திருமுழுக்கு பெற்றதாக உங்களில் ஒருவனாகிலும் சொல்லமுடியாது. ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் திருமுழுக்கு கொடுத்தேன். அதற்கு மேலாக, வேறுயாருக்கும் நான் திருமுழுக்கு கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. கிறிஸ்து என்னைத் திருமுழுக்கு கொடுக்க அனுப்பவில்லை, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். கிறிஸ்துவின் சிலுவை அதன் வல்லமையை இழந்து போகாதிருக்கும்படி, மனித ஞானத்தின் அடிப்படையிலான வார்த்தைகளை உபயோகிக்காமல் பிரசங்கிக்கவே அவர் என்னை அனுப்பினார்.

1 கொரிந்தியர் 1:1-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனுடைய விருப்பத்தினாலே கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவிற்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாகவும் இருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் அவர்களுக்கும் ஆண்டவராக இருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே உறுதிப்படுத்தப்பட்டபடியே, நீங்கள் இயேசுகிறிஸ்துவிற்குள்ளாக எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், முழு நிறைவுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், அவர் மூலமாக உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அப்படியே நீங்கள் எந்த ஒரு வரத்திலும் குறைவில்லாதவர்களாக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இறுதிவரைக்கும் அவர் உங்களை உறுதிப்படுத்துவார். தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். சகோதரர்களே, நீங்களெல்லோரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதும் ஒரே யோசனையும் உள்ளவர்களாகச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன் என்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, நான் கிறிஸ்புவிற்கும் காயுவிற்கும்தவிர, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஸ்தேவானுடைய குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் வேறு யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாகப் போகாதபடிக்கு, மனித ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

1 கொரிந்தியர் 1:1-17 பரிசுத்த பைபிள் (TAERV)

கிறிஸ்து இயேசுவின் ஒரு அப்போஸ்தலனாக இருக்கும்பொருட்டு பவுலாகிய நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் ஒரு அப்போஸ்தலனாக வேண்டுமென தேவன் விரும்பினார். என்னிடமிருந்தும், நம் சகோதரர் சொஸ்தெனேயிடமிருந்தும் இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது. கொரிந்து பட்டணத்தின் சபைக்கும் கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்கும் இந்தக் கடிதம் எழுதப்படுகிறது. தேவனுடைய பரிசுத்த மக்களாக நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். அவர்களுக்கும் நமக்கும் கர்த்தராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் பெயரில் நம்பிக்கை வைத்து எங்கெங்கும் இருக்கிற மக்களுடன் இணைந்து நீங்களும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நம் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக. கிறிஸ்து இயேசு மூலமாக தேவன் உங்களுக்கு அளித்த கிருபைக்காக நான் எப்போதும் என் தேவனுக்கு உங்களுக்காக நன்றி சொல்வேன். இயேசுவில் எல்லா வகையிலும் நீங்கள் ஆசி பெற்றிருக்கிறீர்கள். உங்கள் எல்லா பேச்சிலும், எல்லாவகை அறிவிலும் நீங்கள் ஆசி பெற்றுள்ளீர்கள். கிறிஸ்துவைப் பற்றிய உண்மை உங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மறு வருகைக்காக நீங்கள் காத்திருக்கையில் தேவனிடமிருந்து பெற வேண்டிய வெகுமதி யாவும் பெற்றுள்ளீர்கள். இயேசு இறுதி வரைக்கும் உங்களை பலமுடையவர்களாக ஆக்குவார். அவர் உங்களை பலசாலிகளாக மாற்றுவதால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வருகை தரும் அந்நாளில் உங்களிடம் எந்தத் தவறும் காணப்படாது. தேவன் நம்பிக்கைக்குரியவர். தேவனாகிய ஒருவரே உங்களைத் தம் குமாரானாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும்படியாக அழைத்தார். சகோதர சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரினால் உங்களை ஒன்று வேண்டுகிறேன். நீங்கள் ஒருவரோடு ஒருவர் கருத்தொற்றுமையுடன் வாழ வேண்டுகிறேன். அப்போது உங்களுக்குள் பிரிவினைகள் ஏற்படாது. ஒரே விதமான சிந்தனையும், ஒரே நோக்கமும் கொண்டு முழுக்க இணைந்தவர்களாய் நீங்கள் வாழ வேண்டுமென வேண்டுகிறேன். எனது சகோதர சகோதரிகளே! குலோவேயாளின் குடும்பத்தினர் சிலர் உங்களைப்பற்றி என்னிடம் கூறினர். உங்களுக்கிடையில் வாக்குவாதங்கள் இருக்கின்றன என நான் கேள்விப்பட்டேன். நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். மற்றொருவர் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னொருவர் “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னும் ஒருவர் “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது! சிலுவையில் பவுல் உங்களுக்காக மரித்தானா? இல்லை. பவுலின் பெயரால் நீங்கள் ஞானஸ்நானம் அடைந்தவர்களா? இல்லை. கிறிஸ்பு மற்றும் காயு தவிர வேறு எவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை என்பதில் தேவனுக்கு நன்றியுடைவனாயிருக்கிறேன். எனது பெயரில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள் என எவரும் இப்போது கூற முடியாது என்பதால் நான் தேவனுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். ஸ்தேவான் குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். ஆனால் வேறெவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் வேலையைக் கிறிஸ்து எனக்குத் தரவில்லை. நற்செய்தியை மக்களுக்குக் கூறும் வேலையையே கிறிஸ்து எனக்கு அளித்தார். ஆனால் உலகத்து ஞானத்தைக் காட்டும் சொற்களைப் பயன்படுத்தாமல் நற்செய்தியை மட்டும் சொல்லவே இயேசு கிறிஸ்து என்னை அனுப்பினார். நற்செய்தியைக் கூற உலக ஞானத்தை நான் பயன்படுத்தினால், அப்போது கிறிஸ்துவின் சிலுவை அர்த்தமற்றதாகிவிடும்.

1 கொரிந்தியர் 1:1-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே, நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர், சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? என் நாமத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங்கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங்கொடுத்தேனோ இல்லையோ அறியேன். ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப் போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்