கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 1
1
1கிறிஸ்து இயேசுவின் ஒரு அப்போஸ்தலனாக இருக்கும்பொருட்டு பவுலாகிய நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் ஒரு அப்போஸ்தலனாக வேண்டுமென தேவன் விரும்பினார். என்னிடமிருந்தும், நம் சகோதரர் சொஸ்தெனேயிடமிருந்தும் இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது.
2கொரிந்து பட்டணத்தின் சபைக்கும் கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்கும் இந்தக் கடிதம் எழுதப்படுகிறது. தேவனுடைய பரிசுத்த மக்களாக நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். அவர்களுக்கும் நமக்கும் கர்த்தராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் பெயரில் நம்பிக்கை வைத்து எங்கெங்கும் இருக்கிற மக்களுடன் இணைந்து நீங்களும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
3நம் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.
பவுல் தேவனுக்கு நன்றி கூறுதல்
4கிறிஸ்து இயேசு மூலமாக தேவன் உங்களுக்கு அளித்த கிருபைக்காக நான் எப்போதும் என் தேவனுக்கு உங்களுக்காக நன்றி சொல்வேன். 5இயேசுவில் எல்லா வகையிலும் நீங்கள் ஆசி பெற்றிருக்கிறீர்கள். உங்கள் எல்லா பேச்சிலும், எல்லாவகை அறிவிலும் நீங்கள் ஆசி பெற்றுள்ளீர்கள். 6கிறிஸ்துவைப் பற்றிய உண்மை உங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 7கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மறு வருகைக்காக நீங்கள் காத்திருக்கையில் தேவனிடமிருந்து பெற வேண்டிய வெகுமதி யாவும் பெற்றுள்ளீர்கள். 8இயேசு இறுதி வரைக்கும் உங்களை பலமுடையவர்களாக ஆக்குவார். அவர் உங்களை பலசாலிகளாக மாற்றுவதால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வருகை தரும் அந்நாளில் உங்களிடம் எந்தத் தவறும் காணப்படாது. 9தேவன் நம்பிக்கைக்குரியவர். தேவனாகிய ஒருவரே உங்களைத் தம் குமாரானாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும்படியாக அழைத்தார்.
கொரிந்து சபையில் பிரச்சனைகள்
10சகோதர சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரினால் உங்களை ஒன்று வேண்டுகிறேன். நீங்கள் ஒருவரோடு ஒருவர் கருத்தொற்றுமையுடன் வாழ வேண்டுகிறேன். அப்போது உங்களுக்குள் பிரிவினைகள் ஏற்படாது. ஒரே விதமான சிந்தனையும், ஒரே நோக்கமும் கொண்டு முழுக்க இணைந்தவர்களாய் நீங்கள் வாழ வேண்டுமென வேண்டுகிறேன்.
11எனது சகோதர சகோதரிகளே! குலோவேயாளின் குடும்பத்தினர் சிலர் உங்களைப்பற்றி என்னிடம் கூறினர். உங்களுக்கிடையில் வாக்குவாதங்கள் இருக்கின்றன என நான் கேள்விப்பட்டேன். 12நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். மற்றொருவர் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னொருவர் “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னும் ஒருவர் “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். 13கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது! சிலுவையில் பவுல் உங்களுக்காக மரித்தானா? இல்லை. பவுலின் பெயரால் நீங்கள் ஞானஸ்நானம் அடைந்தவர்களா? இல்லை. 14கிறிஸ்பு மற்றும் காயு தவிர வேறு எவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை என்பதில் தேவனுக்கு நன்றியுடைவனாயிருக்கிறேன். 15எனது பெயரில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள் என எவரும் இப்போது கூற முடியாது என்பதால் நான் தேவனுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். 16ஸ்தேவான் குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். ஆனால் வேறெவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. 17மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் வேலையைக் கிறிஸ்து எனக்குத் தரவில்லை. நற்செய்தியை மக்களுக்குக் கூறும் வேலையையே கிறிஸ்து எனக்கு அளித்தார். ஆனால் உலகத்து ஞானத்தைக் காட்டும் சொற்களைப் பயன்படுத்தாமல் நற்செய்தியை மட்டும் சொல்லவே இயேசு கிறிஸ்து என்னை அனுப்பினார். நற்செய்தியைக் கூற உலக ஞானத்தை நான் பயன்படுத்தினால், அப்போது கிறிஸ்துவின் சிலுவை அர்த்தமற்றதாகிவிடும்.
கிறிஸ்துவில் காணப்படும் ஞானம்
18கெட்டுப்போகிற மக்களுக்குச் சிலுவை பற்றிய போதனை முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ, அது தேவனுடைய வல்லமையாகும்.
19“நான் ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன்.
நான் மேதைகளின் அறிவைப் பயனற்றதாக்குவேன்.”#ஏசா. 29:14
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டு இருக்கிறது.
20தற்காலத்தின் ஞானி எங்கே? கல்வியில் தேர்ந்தவன் எங்கே? இன்றைய தத்துவஞானி எங்கே? உலகத்து ஞானத்தை தேவனே மடமையாக மாற்றினார். 21தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார்.
22யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 24ஆனால், தேவன் தேர்ந்துள்ள யூதருக்கும், கிரேக்கருக்கும் கிறிஸ்துவே தேவனின் வல்லமையும், தேவஞானமும் ஆவார். 25தேவனுடைய மடமை கூட மனிதரின் ஞானத்திலும் சிறந்தது. தேவனுடைய சோர்வும் கூட மனிதரின் பலத்தைக் காட்டிலும் வலிமை உடையது.
26சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். 27ஞானிகளுக்கு வெட்கத்தைத் தரும்படியாக தேவன் உலகத்தின் முட்டாள்தனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். பலவான்களான மனிதர்களை அவமதிக்க உலகத்தின் பலவீனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். 28உலகம் முக்கியமற்றதென்று நினைப்பதை தேவன் தேர்ந்துகொண்டார். உலகம் வெறுப்பதையும், பயனற்றதெனக் கருதுவதையும் அவர் தேர்ந்தெடுத்தார். முக்கியமென உலகம் பார்க்கிறவற்றை அழிப்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார். 29எந்த மனிதனும் தேவனுக்கு முன்பு தற் பெருமை அடையாதபடிக்கு தேவன் இப்படிச் செய்தார். 30உங்களைக் கிறிஸ்து இயேசுவின் ஒரு பாகமாகும்படி செய்தவர் தேவனே, தேவனிடம் இருந்து கிறிஸ்து நமக்கு ஞானமாக இருக்கிறார். பாவத்தில் இருந்து விடுதலை அடையவும், தேவனோடு இணக்கமாக இருக்கவும் கிறிஸ்துவே காரணமாவார். நாம் பரிசுத்தமாய் இருப்பதற்கும் கிறிஸ்துவே காரணமாவார். 31எனவே எழுதப்பட்டுள்ளபடி “ஒருவர் பெருமைப்படுவதாக இருந்தால், தேவனில் மட்டுமே பெருமைப்பட வேண்டும்.”#எரே. 9:24
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 1: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International