1 நாளாகமம் 23:1-28
1 நாளாகமம் 23:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான். அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம். அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியக்காரருமாயிருக்கவேண்டும் என்றும், நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதி செய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி, அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான். கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள். லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான். சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள். யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள். யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள். கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர். அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள். தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள். மோசேயின் குமாரர், கெர்சோம் எலியேசர் என்பவர்கள். கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான். எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள். இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான். எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம். ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா. மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள். எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள். மூசியின் குமாரர், மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர். தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை இளைப்பாறியிருக்கப்பண்ணினார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் வாசம்பண்ணுவாரென்றும், இனி லேவியர் வாசஸ்தலத்தையாகிலும் அதின் ஊழியத்திற்கடுத்த அதின் பணிமுட்டுகளில் எதையாகிலும் சுமக்கத் தேவையில்லை என்றும், தாவீது அவர்களைக் குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஆரோனுடைய குமாரரின் கீழ் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும்
1 நாளாகமம் 23:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தாவீது வயதுசென்று முதியவனானபோது, தனது மகன் சாலொமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினான். அதோடு இஸ்ரயேலரின் எல்லாத் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றுகூட்டினான். லேவியர்களுள் முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டபோது, அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரமாயிருந்தது. அப்பொழுது தாவீது, “இவர்களில் இருபத்து நாலாயிரம்பேர் யெகோவாவினுடைய ஆலயத்தின் வேலைகளை மேற்பார்வை செய்பவர்களாகவும், ஆறாயிரம்பேர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கட்டும். அதோடு நாலாயிரம்பேர் வாசல் காவலர்களாகவும், மற்ற நாலாயிரம்பேர் நான் யெகோவாவைத் துதிப்பதற்கென செய்துவைத்திருந்த இசைக்கருவிகளுடன் யெகோவாவைத் துதிக்கவும் வேண்டும்” என்றான். பின்பு தாவீது லேவியர்களின் மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி அவர்களைக் குழுக்களாகப் பிரித்தான். கெர்சோனியரில் லாதானும் சீமேயியும் இருந்தார்கள். லாதானின் மகன்கள்: மூத்தவனான யெகியேல், சேத்தாம், யோயேல் ஆகிய மூன்றுபேர். சீமேயியின் மகன்கள்: செலோமோத், ஆசியேல், ஆரான் ஆகிய மூன்றுபேர்; இவர்கள் லாதானின் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தார்கள். சீமேயியின் மற்ற மகன்கள்: யாகாத், சீனா, எயூஷ், பெரீயா ஆகிய இவர்களும் சீமேயியின் நான்கு மகன்கள். இவர்களில் யாகாத் மூத்தவன்; சீசா இரண்டாம் மகன். ஆனால் எயூஷூக்கும், பெரீயாவுக்கும் அதிக மகன்கள் இல்லாதபடியினால் அவர்கள் ஒரே முற்பிதாவின் குடும்பமாகக் கணக்கிடப்பட்டு, ஒரே பொறுப்புகளும் வழங்கப்பட்டன. கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர். அம்ராமின் மகன்கள்: ஆரோன், மோசே. ஆரோனும், அவனுடைய வழித்தோன்றல்களும் என்றென்றைக்கும் மகா பரிசுத்த இடத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கும், யெகோவாவுக்கு பலியிடுவதற்கும், அவருக்குப் பணிசெய்வதற்கும், அவருடைய பெயரில் ஆசீர்வதிப்பதற்குமென வேறுபிரிக்கப்பட்டனர். இறைவனின் மனிதனாகிய மோசேயின் மகன்கள் லேவி கோத்திரத்தோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர். மோசேயின் மகன்கள்: கெர்சோம், எலியேசர். கெர்சோனின் சந்ததிகள்: செபுயேல் மூத்தவனாயிருந்தான். எலியேசரின் சந்ததிகள்: ரெகேபியா மூத்தவன். எலியேசருக்கு வேறு மகன்கள் இருக்கவில்லை. ஆனால் ரெகபியாவுக்கு அநேகம் மகன்கள் இருந்தனர். இத்சாரின் மகன்கள்: செலோமித் மூத்தவனாயிருந்தான். எப்ரோனின் மகன்கள்: யெரியா மூத்தவன், இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம். ஊசியேலின் மகன்கள்: மூத்த மகன் மீகா, இரண்டாவது மகன் இஷியா. மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. மகேலியின் மகன்கள்: எலெயாசார், கீஸ். எலெயாசாருக்கு மகன்கள் இல்லாமலே அவன் இறந்துபோனான். அவனுக்கு மகள்கள் மாத்திரமே இருந்தார்கள். அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களான கீஸின் மகன்கள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். மூஷியின் மகன்கள்: மகேலி, ஏதேர், எரேமோத். இவர்கள் குடும்பங்களின்படி பிரிக்கப்பட்ட லேவியின் சந்ததிகள். குடும்பத் தலைவர்கள் தனித்தனியே கணக்கிடப்பட்டு, குடும்பப் பட்டியலின்கீழ் பதிவு செய்யப்பட்டார்கள். இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான இவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் பணிசெய்தனர். அப்பொழுது தாவீது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தனது மக்களுக்கு அமைதியைக் கொடுத்து எருசலேமில் என்றென்றைக்கும் வசிக்க வந்திருக்கிறார். ஆதலால் லேவியர்கள் இனிமேல் பரிசுத்த வழிபாட்டுக் கூடாரங்களையோ, அதன் பணிக்குப் பயன்படுத்தத் தேவையான பொருட்களையோ தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை” எனச் சொன்னான். தாவீதின் இறுதி அறிவுறுத்தலின்படி கணக்கிடப்பட்ட லேவியர் இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமே. யெகோவாவின் பரிசுத்த ஆலயத்தில் பணிசெய்யும் ஆரோனின் சந்ததிகளுக்கு உதவி செய்வதே, லேவியர்களாகிய இவர்களின் கடமையாயிருந்தது. அவையாவன: வெளிமுற்றத்திற்கும், அருகிலுள்ள அறைகளுக்கும் பொறுப்பாயிருத்தல், இறைவனுடைய ஆலயத்தில் பரிசுத்த பொருட்களை சுத்திகரிப்பதற்கும், மற்றும் அங்கு செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் செய்வதற்கும் பொறுப்பாயிருத்தல்
1 நாளாகமம் 23:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தாவீது வயது சென்றவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன்னுடைய மகனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் கூடிவரும்படிச் செய்தான். அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர்கள் பெயர்பெயராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரம். அவர்களில் இருபத்துநான்காயிரம்பேர் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவர்களும் அலுவலர்களும் என்றும், நான்காயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும், துதி செய்வற்கு தான் செய்துவைத்த கீதவாத்தியங்களால் நான்காயிரம்பேர் யெகோவாவை துதிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி, அவர்களை லேவியின் மகன்களாகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய குழுக்களின்படி பிரித்தான். கெர்சோனியர்களில், லாதானும், சீமேயும் இருந்தார்கள். லாதானின் மகன்கள் யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைவனாக இருந்தான். சீமேயின் மகன்கள் செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்று பேர்; இவர்கள் லாதான் வம்சத்தார்களின் தலைவர்களாக இறந்தார்கள். யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நான்குபேர்களும் சீமேயின் மகன்களாக இருந்தார்கள். யாகாத் தலைவனாக இருந்தான்; சீனா இரண்டாம் மகனாக இருந்தான்; எயூஷூக்கும் பெரீயாவுக்கும் அநேகம் மகன்கள் இல்லாததால், அவர்கள் தகப்பன்மார்களின் குடும்பத்தார்களில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள். கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர். அம்ராமின் மகன்கள் ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான இடத்தை என்றென்றைக்கும் பரிசுத்தமாகக் காக்கவும், என்றைக்கும் யெகோவாவுக்கு முன்பாக தூபங்காட்டவும், அவருக்கு ஆராதனை செய்யவும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கவும் பிரித்துவைக்கப்பட்டார்கள். தேவனுடைய மனிதனாகிய மோசேயின் மகன்களோ, லேவிகோத்திரத்தார்களுக்குள் எண்ணப்பட்டார்கள். மோசேயின் மகன்கள் கெர்சோம் எலியேசர் என்பவர்கள். கெர்சோமின் மகன்களில் செபுவேல் தலைவனாக இருந்தான். எலியேசருடைய மகன்களில் ரெகபியா என்னும் அவனுடைய மகன் தலைவனாக இருந்தான்; எலியேசருக்கு வேறே மகன்கள் இல்லை; ரெகபியாவின் மகன்கள் அநேகராக இருந்தார்கள். இத்சேயாரின் மகன்களில் செலோமித் தலைவனாக இருந்தான். எப்ரோனின் மகன்களில் எரியா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம். ஊசியேலின் மகன்களில் மீகா என்பவன் தலைவனாக இருந்தான்; இரண்டாவது இஷியா. மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் மகன்கள் எலெயாசார், கீஸ் என்பவர்கள். எலெயாசார் மரணமடைகிறபோது, அவனுக்கு மகள்களே அன்றி மகன்கள் இல்லை; கீசின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இவர்களைத் திருமணம் செய்தார்கள். மூசியின் மகன்கள் மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர். தங்கள் பிதாகளுடைய குடும்பங்களின்படி, தகப்பன்மார்களில் தலைவனாக இருந்த லேவி சந்ததிகளின்படி பெயர்பெயராக குறிக்கப்பட்டபடி, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார்கள் யெகோவாவுடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள். இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தமது மக்களை இளைப்பாறியிருக்கச்செய்தார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் தங்குவார் என்றும், இனி லேவியர்கள் தங்குமிடத்தையாவது அதின் ஊழியத்தில் அதின் பணிபொருட்களில் எதையாவது சுமக்கத் தேவையில்லை என்றும், தாவீது அவர்களைக்குறித்துச் சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி மகன்களில் எண்ணிக்கைக்கு உட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஆரோனுடைய மகன்களின் கீழ் யெகோவாவுடைய ஆலயத்தின் ஊழியமாக நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், எல்லா பரிசுத்த பணிபொருட்களின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனையின் வேலையையும் விசாரிப்பதும்
1 நாளாகமம் 23:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)
தாவீது முதியவன் ஆனான். எனவே இஸ்ரவேலின் புதிய ராஜாவாகத் தன் குமாரன் சாலொமோனை ஆக்கினான். அனைத்து இஸ்ரவேல் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் தாவீது ஒன்றுக்கூட்டினான். அவன் லேவியர்களில் 30 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களை எண்ணினான். ஆக மொத்தம் 38,000 பேர் இருந்தனர். தாவீது அவர்களிடம், “24,000 லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை மேற்பார்வை பார்க்க வேண்டும். 6,000 லேவியர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கவேண்டும். 54,000 லேவியர்கள் வாசல் காவலர்களாக இருக்கட்டும். 4,000 லேவியர்கள் இசைக் கலைஞர்களாக இருக்கட்டும். அவர்களுக்காக சிறப்பான இசைக் கருவிகளை தயாரித்து வைத்துள்ளேன். கர்த்தரை துதித்துப்பாட அவர்கள் அக்கருவிகளைப் பயன்படுத்துவார்கள்” என்றான். தாவீது லேவியர்களை 3 குழுவாகப் பிரித்தான். அவர்கள் லேவியின் மூன்று குமாரர்களான கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோரின் கோத்திரத்தினராக இருந்தனர். லாதானும், சிமேயும், கெர்சோன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். லாதானுக்கு மூன்று குமாரர்கள் இருந்தார்கள். மூத்த குமாரனின் பெயர் யெகியேல் ஆகும். அவனது மற்ற குமாரர்கள் சேத்தாம், யோவேல். சிமேயின் குமாரர்கள் செலோமித், ஆசியேல், ஆரான் எனும் மூன்று பேர்கள். இவர்கள் லாதானின் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். சிமேயிற்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்பவை அவர்களின் பெயர்கள் ஆகும். யாகாத் மூத்த குமாரன். சீனா அடுத்த குமாரன். ஆனால் எயூஷீக்கும் பெரீயாவுக்கும் அதிகப் பிள்ளைகள் இல்லை. எனவே இருவரும் ஒரே குடும்பமாக எண்ணப்பட்டனர். கோகாத்திற்கு 4 பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர். அம்ராமிற்கு ஆரோன், மோசே என இரு பிள்ளைகள் இருந்தார்கள். ஆரோன் சிறப்புக் குரியவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆரோனும் அவனது சந்ததியினரும் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் சிறப்பானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்த்தருடைய சேவைக்குப் பரிசுத்தப் பொருட்களைத் தயார் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரோனும், அவனது சந்ததியினரும் நறுமணப் பொருட்களை கர்த்தருக்கு முன்பு எரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆசாரியர்களாகப் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எல்லாக் காலத்திலும் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் அளித்தனர். மோசே தேவனுடைய மனிதன். லேவி கோத்திரத்தினரின் ஒரு பகுதியினர், மோசேயின் பிள்ளைகள் ஆவார்கள். கெர்சோமும், எலியேசரும் மோசேயின் குமாரர்கள். செபுவேல், கெர்சோமின் மூத்த குமாரன். ரெகபியா, எலியேசரின் மூத்த குமாரன். எலியேசருக்கு வேறு பிள்ளைகள் இல்லை. ஆனால் ரெகபியாவிற்கு ஏராளமான குமாரர்கள் இருந்தனர். செலோமித், இத்சாரின் மூத்தகுமாரன். எரியா எப்ரோனின் மூத்த குமாரன். அமரியா இரண்டாவது குமாரன். யாகாசியேல் மூன்றாவது குமாரன். எக்காமியாம் நான்காவது குமாரன். ஊசியேல் மீகாவின் மூத்த குமாரன், இஷியா இரண்டாவது குமாரன். மகேலியும், மூசியும் மெராரியின் குமாரர்கள் ஆவார்கள். மகேலிக்கு எலெயாசார், கீஸ் எனும் குமாரர்கள் இருந்தனர். எலெயாசார் ஆண் பிள்ளைகள் இல்லாமலேயே மரித்துப்போனான். அவனுக்குப் பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். எலெயாசாரின் குமாரத்திகள் உறவினரையே மணந்துகொண்டனர். அவர்களின் உறவினர்கள் கீஸின் குமாரர்கள். மூசியின் குமாரர்களாக மகலி, ஏதேர், ஏரோமோத் எனும் மூன்று பேர் இருந்தனர். இவர்கள் லேவியரின் சந்ததியினர். அவர்கள் குடும்ப வாரியாகக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். ஒவ்வொருவரின் பெயரும் பட்டியலிடப்பட்டது. இருபதும், அதற்கு மேலும் உள்ள வயதினர் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் பணி செய்தனர். தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தனது ஜனங்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்திருந்தார். கர்த்தர், எருசலேமிற்கு எல்லாக் காலத்திலும் வாழ்வதற்கு வந்திருந்தார். எனவே பரிசுத்தக் கூடாரத்தை இனி தூக்கிக்கொண்டு செல்லும் வேலை லேவியர்களுக்கு இல்லை. ஆலயப்பணியில் பயன்படுத்தப்பட்ட வேறு பொருட்களைத் தூக்குகிற வேலையும் இல்லை” என்றான். இஸ்ரவேல் ஜனங்களுக்கு, லேவியர் கோத்திரத்தை எண்ணிக் கணக்கிடும்படி தாவீது கடைசியாக அறிவுறுத்தினான். அவர்கள் இருபதும் அதற்கும் மேலும் வயது கொண்டவர்களை எண்ணினார்கள். ஆரோனின் சந்ததியினர் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது லேவியர்கள் உதவுவதை வேலையாகக் கொண்டனர். அவர்கள் ஆலயத்தின் பிரகாரங்களையும் பக்கத்து அறைகளையும் கவனித்துக்கொண்டனர். எல்லாப் பரிசுத்தமானப் பொருட்களையும் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்தனர். தேவனுடைய ஆலயத்திற்குள் பணி செய்வதில் இது அவர்களின் வேலையாய் இருந்தது.