தாவீது முதியவன் ஆனான். எனவே இஸ்ரவேலின் புதிய ராஜாவாகத் தன் குமாரன் சாலொமோனை ஆக்கினான். அனைத்து இஸ்ரவேல் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் தாவீது ஒன்றுக்கூட்டினான். அவன் லேவியர்களில் 30 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களை எண்ணினான். ஆக மொத்தம் 38,000 பேர் இருந்தனர். தாவீது அவர்களிடம், “24,000 லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை மேற்பார்வை பார்க்க வேண்டும். 6,000 லேவியர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கவேண்டும். 54,000 லேவியர்கள் வாசல் காவலர்களாக இருக்கட்டும். 4,000 லேவியர்கள் இசைக் கலைஞர்களாக இருக்கட்டும். அவர்களுக்காக சிறப்பான இசைக் கருவிகளை தயாரித்து வைத்துள்ளேன். கர்த்தரை துதித்துப்பாட அவர்கள் அக்கருவிகளைப் பயன்படுத்துவார்கள்” என்றான்.
தாவீது லேவியர்களை 3 குழுவாகப் பிரித்தான். அவர்கள் லேவியின் மூன்று குமாரர்களான கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோரின் கோத்திரத்தினராக இருந்தனர்.
லாதானும், சிமேயும், கெர்சோன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். லாதானுக்கு மூன்று குமாரர்கள் இருந்தார்கள். மூத்த குமாரனின் பெயர் யெகியேல் ஆகும். அவனது மற்ற குமாரர்கள் சேத்தாம், யோவேல். சிமேயின் குமாரர்கள் செலோமித், ஆசியேல், ஆரான் எனும் மூன்று பேர்கள். இவர்கள் லாதானின் குடும்பத் தலைவர்களாக இருந்தனர்.
சிமேயிற்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்பவை அவர்களின் பெயர்கள் ஆகும். யாகாத் மூத்த குமாரன். சீனா அடுத்த குமாரன். ஆனால் எயூஷீக்கும் பெரீயாவுக்கும் அதிகப் பிள்ளைகள் இல்லை. எனவே இருவரும் ஒரே குடும்பமாக எண்ணப்பட்டனர்.
கோகாத்திற்கு 4 பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர். அம்ராமிற்கு ஆரோன், மோசே என இரு பிள்ளைகள் இருந்தார்கள். ஆரோன் சிறப்புக் குரியவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஆரோனும் அவனது சந்ததியினரும் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் சிறப்பானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்த்தருடைய சேவைக்குப் பரிசுத்தப் பொருட்களைத் தயார் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரோனும், அவனது சந்ததியினரும் நறுமணப் பொருட்களை கர்த்தருக்கு முன்பு எரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆசாரியர்களாகப் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எல்லாக் காலத்திலும் ஜனங்களுக்கு ஆசீர்வாதம் அளித்தனர்.
மோசே தேவனுடைய மனிதன். லேவி கோத்திரத்தினரின் ஒரு பகுதியினர், மோசேயின் பிள்ளைகள் ஆவார்கள். கெர்சோமும், எலியேசரும் மோசேயின் குமாரர்கள். செபுவேல், கெர்சோமின் மூத்த குமாரன். ரெகபியா, எலியேசரின் மூத்த குமாரன். எலியேசருக்கு வேறு பிள்ளைகள் இல்லை. ஆனால் ரெகபியாவிற்கு ஏராளமான குமாரர்கள் இருந்தனர்.
செலோமித், இத்சாரின் மூத்தகுமாரன்.
எரியா எப்ரோனின் மூத்த குமாரன். அமரியா இரண்டாவது குமாரன். யாகாசியேல் மூன்றாவது குமாரன். எக்காமியாம் நான்காவது குமாரன்.
ஊசியேல் மீகாவின் மூத்த குமாரன், இஷியா இரண்டாவது குமாரன்.
மகேலியும், மூசியும் மெராரியின் குமாரர்கள் ஆவார்கள். மகேலிக்கு எலெயாசார், கீஸ் எனும் குமாரர்கள் இருந்தனர். எலெயாசார் ஆண் பிள்ளைகள் இல்லாமலேயே மரித்துப்போனான். அவனுக்குப் பெண் பிள்ளைகள் மட்டுமே இருந்தனர். எலெயாசாரின் குமாரத்திகள் உறவினரையே மணந்துகொண்டனர். அவர்களின் உறவினர்கள் கீஸின் குமாரர்கள். மூசியின் குமாரர்களாக மகலி, ஏதேர், ஏரோமோத் எனும் மூன்று பேர் இருந்தனர்.
இவர்கள் லேவியரின் சந்ததியினர். அவர்கள் குடும்ப வாரியாகக் கணக்கிடப்பட்டனர். அவர்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். ஒவ்வொருவரின் பெயரும் பட்டியலிடப்பட்டது. இருபதும், அதற்கு மேலும் உள்ள வயதினர் பட்டியலிடப்பட்டனர். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் பணி செய்தனர்.
தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தனது ஜனங்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்திருந்தார். கர்த்தர், எருசலேமிற்கு எல்லாக் காலத்திலும் வாழ்வதற்கு வந்திருந்தார். எனவே பரிசுத்தக் கூடாரத்தை இனி தூக்கிக்கொண்டு செல்லும் வேலை லேவியர்களுக்கு இல்லை. ஆலயப்பணியில் பயன்படுத்தப்பட்ட வேறு பொருட்களைத் தூக்குகிற வேலையும் இல்லை” என்றான்.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு, லேவியர் கோத்திரத்தை எண்ணிக் கணக்கிடும்படி தாவீது கடைசியாக அறிவுறுத்தினான். அவர்கள் இருபதும் அதற்கும் மேலும் வயது கொண்டவர்களை எண்ணினார்கள்.
ஆரோனின் சந்ததியினர் கர்த்தருடைய ஆலயத்தில் சேவை செய்யும்போது லேவியர்கள் உதவுவதை வேலையாகக் கொண்டனர். அவர்கள் ஆலயத்தின் பிரகாரங்களையும் பக்கத்து அறைகளையும் கவனித்துக்கொண்டனர். எல்லாப் பரிசுத்தமானப் பொருட்களையும் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்தனர். தேவனுடைய ஆலயத்திற்குள் பணி செய்வதில் இது அவர்களின் வேலையாய் இருந்தது.