1 நாளாகமம் 12:23-40
1 நாளாகமம் 12:23-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா சொன்னபடி சவுலின் அரசாட்சியை தாவீதுக்கு கொடுப்பதற்காக, எப்ரோனில் இருந்த தாவீதிடம் வந்த இராணுவவீரர்களின் எண்ணிக்கைகள்: யூதாவின் மனிதரில் கேடயமும் ஈட்டியும் பிடித்து, போருக்கு வந்தவர்கள் 6,800 பேர்; சிமியோனின் மனிதரில் போருக்கு ஆயத்தமாக வந்த வீரர்கள் 7,100 பேர். லேவியரின் மனிதரில் 4,600 பேர். இவர்களுடன் ஆரோன் குடும்பத்தின் தலைவனான யோய்தாவோடு சேர்த்து 3,700 மனிதர்கள் ஆவர். அதோடு சாதோக் என்னும் வலிமைமிக்க வாலிபனான வீரனும், அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த இருபத்திரண்டு அதிகாரிகளும் ஆவர். பென்யமீனியரில் சவுலின் குடும்பத்தில் 3,000 மனிதர்கள். அவர்களில் பலர் அதுவரை சவுலின் குடும்பத்திற்கே உண்மையாயிருந்தனர். எப்பிராயீமின் மனிதரில் வலிமைமிக்க வீரர்களும், தங்கள் சொந்த வம்சத்தில் புகழ் பெற்றவர்களும் 20,800 பேர். மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் தாவீதை அரசனாக்குவதற்கு வரும்படி பெயர் குறிக்கப்பட்டவர்கள் 18,000 பேர். இசக்காரின் மனிதரிலிருந்து வந்த தலைவர்கள் 200 பேர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த உறவினருடன் வந்தார்கள். அவர்கள் காலத்தை விளங்கி இஸ்ரயேல் மக்கள் எதைச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர். செபுலோன் மனிதர்களில் போருக்கு ஆயத்தமாக எல்லாவித ஆயுதங்களையும் உபயோகித்து, அணிவகுத்து நிற்க அனுபவம் பெற்றிருந்தவர்களும், அரசன் தாவீதுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தவர்களும் 50,000 பேர். நப்தலியின் மனிதரில் 1,000 அதிகாரிகளும், அவர்களுடன் கேடயமும் ஈட்டியும் வைத்திருக்கும் 37,000 பேரும், தாண் மனிதரில் போருக்கு ஆயத்தமாய் இருந்தவர்கள் 28,600 பேர், ஆசேரின் மனிதர்களில் அனுபவம் வாய்ந்த போர்வீரர்களும், போருக்கு ஆயத்தமாக இருந்தவர்களும் 40,000 பேர். யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் எல்லாவித ஆயுதங்களையும் தாங்கியவர்கள் 1,20,000 பேர். இவர்கள் எல்லோரும் தாவீதின் படையில் பணிசெய்ய தாமாகவே முன்வந்த இராணுவவீரர்கள். இவர்கள் தாவீதை முழு இஸ்ரயேலரின் அரசனாக்குவதற்காக முழுமனதுடன் எப்ரோனுக்கு வந்தவர்கள். மற்ற இஸ்ரயேல் மக்களும் தாவீதை அரசனாக்குவதற்கு ஒரே மனதுடையவர்களாயிருந்தனர். அந்த மனிதர்கள் தாவீதுடன் தங்கி மூன்று நாட்களுக்கு சாப்பிட்டுக் குடித்தனர். அவர்களின் குடும்பத்தினர்களே தேவையான பொருட்களை ஆயத்தம் செய்திருந்தனர். அதோடு தூரத்திலிருந்து இசக்கார், செபுலோன், நப்தலி மக்களும் கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள்மேல் உணவு வகைகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு வந்தனர். மாவு, அத்திப்பழ அடைகள், கொடிமுந்திரிகை வற்றல்கள், திராட்சை இரசம், எண்ணெய் போன்ற உணவு வகைகளுடன் ஆடுமாடுகள், செம்மறியாடுகளும் அதிகமாகக் கொண்டுவரப்பட்டன. அதனால் இஸ்ரயேலில் மகிழ்ச்சியுண்டாயிற்று.
1 நாளாகமம் 12:23-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுடைய வார்த்தையின்படியே, சவுலின் ராஜ்ஜியபாரத்தைத் தாவீதிடம் திருப்ப, எப்ரோனில் இருக்கிற அவனிடம் வந்த போர்வீரர்களான தலைவர்களின் எண்ணிக்கை: யூதா கோத்திரத்தில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, யுத்த போர்வீரர்களானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர். சிமியோன் கோத்திரத்தில் பலசாலிகளாகிய யுத்தவீரர்கள் ஏழாயிரத்து நூறுபேர். லேவி கோத்திரத்தில் நான்காயிரத்து அறுநூறுபேர். ஆரோன் சந்ததியார்களின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடு இருந்த மூவாயிரத்து எழுநூறுபேர்களும், பலசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களான இருபத்திரண்டு தலைவர்களுமே. பென்யமீன் கோத்திரத்தார்களான சவுலின் சகோதரர்களில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள். எப்பிராயீம் கோத்திரத்தில் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெயர் பெற்ற மனிதர்களான பலசாலிகள் இருபதாயிரத்து எண்ணூறுபேர். மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்க வரும்படி, பெயர்பெயராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெட்டாயிரம்பேர். இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே. செபுலோன் கோத்திரத்தில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்வதற்கும், தங்களுடைய அணியைக் காத்து நிற்பதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதாயிரம்பேர். நப்தலி கோத்திரத்தில் ஆயிரம் தலைவர்கள் கேடகமும் ஈட்டியும் பிடித்த அவர்களோடு இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர். தாண் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எட்டாயிரத்து அறுநூறுபேர். ஆசேர் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்களாக போர்செய்யப்போகத்தக்கவர்கள் நாற்பதாயிரம்பேர். யோர்தானுக்கு அக்கரையான ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும், யுத்தம்செய்ய எல்லாவித ஆயுதங்களையும் அணிந்தவர்கள் நூற்றிருபதாயிரம்பேர். தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்க, இந்த யுத்தமனிதர்கள் எல்லோரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இதயத்தோடு எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற அனைவரும் தாவீதை ராஜாவாக்க ஒருமனப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே தாவீதோடு மூன்று நாட்கள் இருந்து, சாப்பிட்டுக் குடித்தார்கள்; அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம்செய்திருந்தார்கள். இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைவரை அவர்களுக்கு அருகில் இருந்தவர்களும், கழுதைகள்மேலும், ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும், மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், உலர்ந்த திராட்சைப்பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளைத் தேவையான அளவு ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டானது.
1 நாளாகமம் 12:23-40 பரிசுத்த பைபிள் (TAERV)
எப்ரோன் நகரத்தில் கீழ்க்கண்ட ஆட்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டனர். அவர்கள் போர் செய்ய தயாராக இருந்தனர். சவுலின் அரசைத் தாவீதிற்கு அளிப்பதற்காக அவர்கள் வந்தனர். அது கர்த்தர் சொன்னபடி நிகழ்ந்தது. இது அவர்களின் எண்ணிக்கையாகும். யூதா கோத்திரத்தில் இருந்து 6,800 பேர் போர் செய்ய தயாராயிருந்தனர். அவர்கள் ஈட்டிகளையும் கேடயங்களையும் கொண்டுவந்தனர். சிமியோனின் கோத்திரத்தில் இருந்து 7,100 பேர் வந்தனர். அவர்கள் தைரியமுள்ளவர்களாக போர் செய்யத் தயாராக இருந்தனர். லேவியின் கோத்திரத்தில் இருந்து 4,600 பேர் வந்தனர். யோய்தாவும் அந்த குழுவில் உள்ளவன். இவன் ஆரோனின் கோத்திரத்தில் உள்ளவன். இவனும் தலைவன். யோய்தாவுடன் 3,700 பேர் இருந்தனர். சாதோக்கும் அந்த குழுவில் இருந்தான். இவன் வீரமிக்க இளைஞன். இவன் தன் குடும்பத்தில் உள்ள 22 வீரர்களோடு வந்தான். பென்யமீனின் கோத்திரத்திலிருந்து 3,000 பேர் வந்தனர். இவர்கள் சவுலின் உறவினர்கள். இதுவரை இவர்கள் சவுலின் குடும்பத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர். எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து 20,800 பேர் வந்தனர். இவர்கள் பலமிக்க வீரர்கள். இவர்கள் தம்தம் குடும்பங்களில் பிரபலமானவர்கள். மனாசே கோத்திரத்தின் பாதிப்பிரிவில் இருந்து 18,000 பேர் வந்தனர். தாவீதை ராஜாவாக்குவதற்காக அவர்கள் ஒவ்வொருவராகப் பேர் சொல்லி அழைக்கப்பட்டனர். இசக்காரின் கோத்திரத்திலிருந்து 200 அறிஞர்கள் வந்தனர். இவர்கள் சரியான காலத்தில் சரியானவற்றை இஸ்ரவேலர்களுக்குச் செய்யத் தெரிந்தவர்கள். இவர்களின் உறவினர்கள் இவர்களுக்குக் கீழாக இவர்களின் கட்டளைப்படி இருந்தனர். செபுலோனின் கோத்திரத்திலிருந்து 50,000 பயிற்சிப் பெற்ற வீரர்கள் வந்தனர். இவர்கள் எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்த பயிற்சிப் பெற்றிருந்தனர். இவர்கள் தாவீதிற்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர். நப்தலி கோத்திரத்திலிருந்து 1,000 அதிகாரிகள் வந்தனர். இவர்களோடு 37,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் ஈட்டியையும் கேடயத்தையும் கொண்டு வந்தனர். தாணின் கோத்திரத்திலிருந்து 28,600 பேர் போர் செய்ய தயாராக இருந்தனர். ஆசேரின் கோத்திரத்திலிருந்து 40,000 பயிற்சிப் பெற்ற போர் வீரர்கள் போர் செய்ய தயாராய் இருந்தார்கள். யோர்தான் ஆற்றுக்குக் கீழ்ப்பகுயில் இருந்து 1,20,000 பேர் வந்தனர். இவர்கள் ரூபன், காத் மற்றும் பாதி மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் எல்லா வகையான ஆயுதங்களும் இருந்தன. இவர்கள் அனைவரும் பலமிக்க போர் வீரர்கள். இவர்கள் தாவீதை ராஜாவாக்குவதற்கு சம்மதம் தெரிவித்தே எப்ரோன் நகருக்கு வந்தனர். இஸ்ரவேலில் உள்ள மற்ற ஜனங்களும் தாவீது ராஜாவாக வேண்டும் என எண்ணினார்கள். இவர்கள் எப்ரோனில் தாவீதோடு 3 நாட்களைக் கழித்தனர். இவர்களின் உறவினர்கள் உணவு தயாரித்துக் கொடுத்ததால் இவர்கள் உண்ணுவதும், குடிப்பதுமாய் இருந்தனர். இசக்கார், செபுலோன், நப்தலி ஆகிய கோத்திரங்கள் வசிக்கிற இடத்தின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கழுதைகள், ஒட்டகம், கோவேறு கழுதை, மாடுகள் மீது உணவைக் கொண்டு வந்தனர். இவர்கள் மாவு, அத்திப்பழ அடைகள், காய்ந்த திராட்சைப் பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.
1 நாளாகமம் 12:23-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்தசன்னத்தரான தலைவரின் இலக்கமாவன: யூதா புத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்த சன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர். சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர். லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர். ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடிருந்த மூவாயிரத்து எழுநூறுபேரும், பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே. பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள். எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர்பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர். மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெண்ணாயிரம்பேர். இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே. செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்து நிற்கிறதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர். நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர். தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர். ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர். யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர். தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணிஅணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே தாவீதோடேகூட மூன்று நாள் இருந்து, போஜனபானம்பண்ணினார்கள்; அவர்கள் சகோதரர் அவர்களுக்காகச் சகலத்தையும் ஆயத்தம்பண்ணியிருந்தார்கள். இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும், மாடுகள் மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.