யெகோவாவுடைய வார்த்தையின்படியே, சவுலின் ராஜ்ஜியபாரத்தைத் தாவீதிடம் திருப்ப, எப்ரோனில் இருக்கிற அவனிடம் வந்த போர்வீரர்களான தலைவர்களின் எண்ணிக்கை: யூதா கோத்திரத்தில் கேடகமும் ஈட்டியும் பிடித்து, யுத்த போர்வீரர்களானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர். சிமியோன் கோத்திரத்தில் பலசாலிகளாகிய யுத்தவீரர்கள் ஏழாயிரத்து நூறுபேர். லேவி கோத்திரத்தில் நான்காயிரத்து அறுநூறுபேர். ஆரோன் சந்ததியார்களின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடு இருந்த மூவாயிரத்து எழுநூறுபேர்களும், பலசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களான இருபத்திரண்டு தலைவர்களுமே. பென்யமீன் கோத்திரத்தார்களான சவுலின் சகோதரர்களில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள். எப்பிராயீம் கோத்திரத்தில் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெயர் பெற்ற மனிதர்களான பலசாலிகள் இருபதாயிரத்து எண்ணூறுபேர். மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்க வரும்படி, பெயர்பெயராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெட்டாயிரம்பேர். இசக்கார் கோத்திரத்தில், இஸ்ரவேலர்கள் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லா சகோதரர்களுமே. செபுலோன் கோத்திரத்தில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்வதற்கும், தங்களுடைய அணியைக் காத்து நிற்பதற்கும் பழகி, வஞ்சனை செய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதாயிரம்பேர். நப்தலி கோத்திரத்தில் ஆயிரம் தலைவர்கள் கேடகமும் ஈட்டியும் பிடித்த அவர்களோடு இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர். தாண் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எட்டாயிரத்து அறுநூறுபேர். ஆசேர் கோத்திரத்தில் யுத்தத்திற்குத் தேறினவர்களாக போர்செய்யப்போகத்தக்கவர்கள் நாற்பதாயிரம்பேர். யோர்தானுக்கு அக்கரையான ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும், யுத்தம்செய்ய எல்லாவித ஆயுதங்களையும் அணிந்தவர்கள் நூற்றிருபதாயிரம்பேர். தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்க, இந்த யுத்தமனிதர்கள் எல்லோரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இதயத்தோடு எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற அனைவரும் தாவீதை ராஜாவாக்க ஒருமனப்பட்டிருந்தார்கள். அவர்கள் அங்கே தாவீதோடு மூன்று நாட்கள் இருந்து, சாப்பிட்டுக் குடித்தார்கள்; அவர்கள் சகோதரர்கள் அவர்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம்செய்திருந்தார்கள். இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைவரை அவர்களுக்கு அருகில் இருந்தவர்களும், கழுதைகள்மேலும், ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும், மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், உலர்ந்த திராட்சைப்பழங்கள், திராட்சைரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளைத் தேவையான அளவு ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டானது.