சங்கீதம் 78:40-72

சங்கீதம் 78:40-72 TAOVBSI

எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தர வெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள். அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள். அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள். அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக்கூடாதபடி செய்தார். அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக் கொடுத்தார். தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக்காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து; தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப் போல் கூட்டிக்கொண்டுபோய்; அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது. அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலது கரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக் கொண்டுவந்து, அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார். ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய், தங்கள் பிதாக்களைப்போல வழி விலகி, துரோகம்பண்ணி, மோசம் போக்கும் வில்லைப்போல் துவண்டு, தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து, தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி, தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார். அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள். அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை. அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப் போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப் போலவும் விழித்து, தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார். அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்து கொள்ளாமல், யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்து கொண்டார். தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப் போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத் தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும், தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டு வந்தார். இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.

சங்கீதம் 78:40-72 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்