சங்கீதம் 52
52
52 சங்கீதம்
(தாவீது அபிமெலேக்கின் வீட்டுக்கு வந்தானென்று ஏதோமியனாகிய தோவேக்கு வந்து சவுலுக்கு அறிவித்தபின்பு தாவீதினால் பாடப்பட்டு இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்)
1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
2நீ கேடுகளைச் செய்ய எத்தனம் பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
3நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப் பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
4கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.
5தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா)
6நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து:
7இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.
8நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப்போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
9நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங்கீதம் 52: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.