நீதிமொழிகள் 23:1-18

நீதிமொழிகள் 23:1-18 TAOVBSI

நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை. அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே. ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோகும். வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே. அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது. நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய். மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான். பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. பிள்ளையைத் தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும். உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.