நீதிமொழிகள் 23:1-18
நீதிமொழிகள் 23:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒரு ஆளுநருடன் உணவு சாப்பிட உட்காரும்போது, உனக்குமுன் இருப்பவற்றை நன்றாகக் கவனித்துப்பார். நீ உணவுப் பிரியனாயிருந்தால், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள். அவனுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே; அது உன்னை ஏமாற்றக்கூடும். நீ செல்வந்தனாகும்படி உன்னை வருத்தாதே; உன் புத்திசாலித்தனத்தை நம்பாதே. கண் இமைக்கும் நேரத்தில் செல்வம் மறைந்துவிடும், அவை இறக்கைகள் முளைத்து, கழுகுபோல் ஆகாயத்தில் பறந்துவிடும். கஞ்சத்தனமுள்ளவர்களுடைய உணவைச் சாப்பிடாதே, அவர்களுடைய சுவைமிக்க உணவுகளில் ஆசைப்படாதே; ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் எவ்வளவு செலவு செய்கிறார்களென்று சிந்திக்கிறார்கள். “சாப்பிடுங்கள், குடியுங்கள்” என்று அவர்கள் உனக்குச் சொல்வார்கள்; ஆனால் அவர்கள் அதை மனதாரச் சொல்லவில்லை. நீ சாப்பிட்ட கொஞ்சத்தையும் வாந்தியெடுக்க நேரிடும், நீ அவர்களைப் பாராட்டிய வார்த்தைகளும் வீணாய்ப் போகும். நீ மூடர்களுடன் பேசாதே, ஏனெனில் அவர்கள் உன் ஞானமான வார்த்தைகளை ஏளனம் செய்வார்கள். பூர்வகால எல்லைக் கல்லை நகர்த்தாதே; தந்தையற்றவர்களின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களை பாதுகாக்கிறவர் வல்லவர்; அவர் உனக்கெதிராக அவர்கள் சார்பாக வழக்காடுவார். நீ அறிவுறுத்தலுக்கு உன் இருதயத்தைச் சாய்; அறிவுள்ள வார்த்தைகளுக்கு செவிகொடு. பிள்ளையைத் தண்டித்துத் திருத்தாமல் விடாதே; அவர்களைப் பிரம்பினால் தண்டித்தால், அவர்கள் சாகமாட்டார்கள். நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று. என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், உண்மையில் என் இருதயம் மகிழ்ச்சியடையும்; உனது உதடுகள் நீதியானவற்றைப் பேசும்போது, என் உள்ளம் மகிழும். நீ உன் இருதயத்தைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே, எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடக்க வைராக்கியமாயிரு. அப்பொழுது உனக்கு எதிர்கால நம்பிக்கை நிச்சயமாகவே உண்டு, உனது எதிர்பார்ப்பும் வீண்போகாது.
நீதிமொழிகள் 23:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீ ஒரு அதிபதியோடு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாகக் கவனித்துப்பார். நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை. அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே; அவைகள் வஞ்சக உணவாக இருக்கலாம். செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு, வானில் பறந்துபோகும். பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே; அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே. அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவனும் இருக்கிறான்; சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும், அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது. நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய். மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே; அவன் உன்னுடைய வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை செய்வான். பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என்னுடைய உள்மனம் மகிழும். உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒரு முக்கியமான மனிதனோடு அமர்ந்து உண்ணும்போது நீ யாருடன் இருக்கிறாய் என்பதை எண்ணிப்பார். எவ்வளவுதான் பசியோடு இருந்தாலும் அளவுக்கு மீறி உண்ணாதே. அவன் கொடுக்கும் உயர்ந்த உணவை அதிகமாக உண்ணாதே. இது ஒரு தந்திரமாக இருக்கலாம். செல்வந்தனாக முயன்று உனது உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்ளாதே. நீ அறிவுள்ளவனாக இருந்தால் பொறுமையாக இரு. ஒரு பறவை சிறகு முளைத்துப் பறந்துசென்றுவிடுவதைப்போல செல்வம் மிக வேகமாகக் கரைந்துவிடும். கருமியோடு அமர்ந்து உணவு உண்ணாதே. அவன் விரும்பும் சிறப்பு உணவிலிருந்து தூர விலகியிரு. எப்பொழுதும் அவன் அதன் விலையையே நினைத்துக்கொண்டிருக்கும் தன்மையுடையவன். அவன் உன்னிடம், “உண்ணு, பருகு” என்று கூறலாம். ஆனால் அவனது விருப்பம் உண்மையானது அல்ல. அவனது உணவை உண்டால், நீ நோயாளி ஆவாய். உனது வார்த்தைகளின் புகழுரையும், நன்றிகளும் வீணாகப் போய்விடும். முட்டாளுக்குக் கற்றுக்கொடுக்க முயலாதே. அவன் உனது புத்திமதி வார்த்தைகளைக் கேலிச் செய்வான். பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார். உனது போதகரைக் கவனி, உன்னால் முடிந்தவரை கற்றுக்கொள். தேவைப்படும்பொழுது குழந்தைக்குத் தண்டனை கொடு. அவனைப் பிரம்பால் அடித்தால் அது அவனை அழிக்காது. அவனைப் பிரம்பால் அடிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையைக் காப்பாற்றிவிடுகிறாய். என் மகனே! நீ அறிவாளியானால், நான் மிகவும் மகிழ்வேன். நீ சரியானவற்றைப் பேசுவதை நான் கேட்டால் என் மனதில் மிகவும் மகிழ்வேன். தீயவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே. ஆனால் எப்பொழுதும் உறுதியாக கர்த்தருக்கு மரியாதை செலுத்து. எப்பொழுதும் நம்பிக்கைக்கு இடம் உண்டு. உனது நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை. அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே. ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோகும். வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே. அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது. நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய். மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான். பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. பிள்ளையைத் தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும். உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.