எண்ணாகமம் 28

28
28 அதிகாரம்
1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு.
3மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்கதகனபலியாக நாடோறும் ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும்.
4காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு,
5போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக்கடவீர்கள்.
6இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்கதகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான தகனபலி.
7காற்படி திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது.
8காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.
9ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒருவயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
10நித்தமும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.
11உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள்.
12போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,
13போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.
14அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷமுழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்கதகனபலி.
15நித்தமும் இடப்படும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரணபலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.
16முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
17அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகை நாள்; ஏழு நாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.
18முதலாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
19அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
20அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
21ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
22உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
23காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.
24இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும்.
25ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
26அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
27அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
28அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
29ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
30உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
31நித்திய சர்வாங்கதகனபலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எண்ணாகமம் 28: TAOVBSI

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்