லூக்கா 2:21-33

லூக்கா 2:21-33 TAOVBSI

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது, முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள். அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில், அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின, உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்