லேவியராகமம் 9
9
9 அதிகாரம்
1எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து,
2ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.
3மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
4சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான்.
5மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.
6அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.
7மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.
8அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.
9ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,
10பாவநிவாரணபலியின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் தகனித்து,
11மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
12பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.
13சர்வாங்கதகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,
14குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.
15பின்பு அவன் ஜனங்களின் பலியைக்கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக்கொன்று, முந்தினதைப் பலியிட்டது போல, அதைப் பாவநிவாரணபலியாக்கி,
16சர்வாங்கதகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி அதைப் பலியிட்டு,
17போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
18பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
19காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,
20கொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான்.
21மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.
22பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.
23பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.
24அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
லேவியராகமம் 9: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.