எரேமியா 22
22
22 அதிகாரம்
1 கர்த்தர் சொன்னது: நீ யூதா ராஜாவின் அரமனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்:
2தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இந்த வாசல்களுக்குள் பிரவேசிக்கிற உம்முடைய ஜனமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
3நீங்கள் நியாயமும் நீதியும் செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்.
4இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போகும் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6யூதா ராஜாவின் அரமனையைக் குறித்துக் கர்த்தர்: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்தரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன்.
7சங்காரக்காரரை அவரவர் ஆயுதங்களோடுங்கூட நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் உச்சிதமான கேதுருக்களை அவர்கள் வெட்டி, அக்கினியிலே போடுவார்கள்.
8அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன்தன் அயலானை நோக்கி: இந்தப் பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.
9அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனை செய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்கள் என்று சொல்லுகிறார்.
10மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் ஜனன பூமியைக் காண்பதுமில்லை.
11தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக் குறித்து: அவன் இனி இங்கே திரும்பவராமல்,
12தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான்; இந்த தேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
13தனக்கு விஸ்தாரமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,
14அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!
15நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?
16அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான், அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.
18ஆகையால் கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக் குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.
19ஒரு கழுதை புதைக்கப்படுகிற வண்ணமாய் அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார்.
20லீபனோனின்மேலேறிப் புலம்பு, பாசானில் உரத்த சத்தமிடு, ஆபரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு; உன் நேசர் அனைவரும் முறிந்தார்கள்.
21நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.
22உன் மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நீ வெட்கப்பட்டு இலச்சையடைவாய்.
23லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப்பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில், நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்!
24யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.
26உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜனனபூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.
27திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.
28கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்தசிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?
29தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.
30இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எரேமியா 22: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.