நியாயாதிபதிகள் 6:12-24

நியாயாதிபதிகள் 6:12-24 TAOVBSI

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும். நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார். உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆணத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலி மரத்தின்கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான். அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால். அவன் கண்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான். அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.