நியாயாதிபதிகள் 6:12-24
நியாயாதிபதிகள் 6:12-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் கிதியோனின் முன்தோன்றி, “வலிமைமிக்க வீரனே! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றார். அதற்குக் கிதியோன், “ஐயா, யெகோவா எங்களோடிருந்தால் ஏன் எங்களுக்கு இவையெல்லாம் சம்பவிக்கின்றன? எகிப்தியரின் கையினின்று யெகோவா எங்களை விடுவிக்கவில்லையா! என்று எங்கள் முற்பிதாக்கள் கூறிய அந்த அதிசயங்கள் எங்கே? இப்பொழுதோ யெகோவா எங்களைக் கைவிட்டு மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்து விட்டாரே!” என்றான். யெகோவா கிதியோனைத் திரும்பிப்பார்த்து, “உனக்கிருக்கும் பெலத்துடன் நீ போய் இஸ்ரயேல் மக்களை மீதியானியர் கையினின்று காப்பாற்று. உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா!” என்றார். அதற்கு கிதியோன், “யெகோவாவே! மனாசே கோத்திரத்தில் எனது வம்சம் வலுக்குறைந்தது; என் குடும்பத்திலும் நானே சிறியவனாயிருக்கிறேன். இஸ்ரயேலரைக் காப்பாற்ற எப்படி என்னால் முடியும்?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “நான் உன்னுடனே இருப்பேன்; மீதியானியர் எல்லோரையும் ஒரு மனிதனை முறியடிப்பதுபோலவே நீ முறியடிப்பாய்” என்றார். அதற்கு கிதியோன், “இப்பொழுது உமது பார்வையில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடம் பேசுபவர் உண்மையாகவே நீர் என்றால் அதற்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும். நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உமக்கு முன்பாக வைக்கும்வரையும், தயவுசெய்து இவ்விடம் விட்டு நீர் போகவேண்டாம்” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “நீ திரும்பி வரும்வரையும் நான் காத்திருப்பேன்” என்றார். உடனே கிதியோன் போய் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை பிடித்து சமைத்து, ஒரு எப்பா அளவு மாவில் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டான். இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு பானையிலும் ஊற்றி கர்வாலி மரத்தடியில் இருந்தவரிடம் கொண்டுவந்து கொடுத்தான். யெகோவாவின் தூதனானவர் அவனிடம், “இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும் எடுத்து இந்த கற்பாறையின்மேல் வைத்து குழம்பை அதன்மேல் ஊற்று” என்றார். கிதியோனும் அப்படியே செய்தான். யெகோவாவின் தூதனானவர் தன் கையிலிருந்த கோலின் நுனியால் இறைச்சியையும், அப்பத்தையும் தொட்டார். அப்பொழுது கற்பாறையிலிருந்து நெருப்பு திடீரென எழுந்து இறைச்சியையும், அப்பத்தையும் சுட்டெரித்தது. யெகோவாவின் தூதனானவரும் மறைந்தார். கிதியோன் தான் கண்டது யெகோவாவின் தூதனானவர் என அறிந்தான்; அப்போது அவன் சத்தமிட்டு, “யெகோவாவாகிய ஆண்டவரே! யெகோவாவின் தூதனானவரை நான் முகமுகமாய்க் கண்டேனே!” என்று வியப்புடன் கூறினான். ஆனால் யெகோவா அவனிடம், “சமாதானமாய் இரு; பயப்படாதே! நீ சாகமாட்டாய்” என்றார். எனவே கிதியோன் அந்த இடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அவ்விடத்திற்கு யெகோவா ஷாலோம் யெகோவாவே சமாதானம் என்று பெயரிட்டான். அவ்விடம் இந்நாள்வரை அபியேஸ்ரியரின் ஒப்ராவில் இருக்கிறது.
நியாயாதிபதிகள் 6:12-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே யெகோவா உன்னோடு இருக்கிறார் என்றார். அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, யெகோவா எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? யெகோவா எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது யெகோவா எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். அப்பொழுது யெகோவா அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். அதற்கு அவன்: ஆ என்னுடைய ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே காப்பாற்றுவேன்; இதோ, மனாசேயில் என்னுடைய குடும்பம் மிகவும் எளியது; என்னுடைய தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்றான். அதற்குக் யெகோவா: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார். அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும். நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார். உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான். அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து குழம்பை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். அப்பொழுது யெகோவாவுடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் தூதனோ. அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது கிதியோன், அவர் யெகோவாவுடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, யெகோவாவாகிய ஆண்டவரே, நான் யெகோவாவுடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான். அதற்குக் யெகோவா: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். அங்கே கிதியோன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
நியாயாதிபதிகள் 6:12-24 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தருடைய தூதன் கிதியோனுக்குக் காட்சி தந்து, அவனிடம், “பெரும் வீரனே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்!” என்றான். அப்போது கிதியோன், “கர்த்தர் எங்களோடிருந்தால் எங்களுக்கு ஏன் இத்தனைத் துன்பங்கள் நேருகின்றன? எங்கள் முற்பிதாக்களுக்கு அவர் அற்புதமானக் காரியங்களைச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். கர்த்தர், தங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்ததாக எங்கள் முற்பிதாக்கள் கூறினார்கள். ஆனால் கர்த்தர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மீதியானியர் எங்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார்” என்றான். கர்த்தர் கிதியோனைப் பார்த்து, “உனது வல்லமையைப் பயன்படுத்து, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற நான் உன்னை அனுப்புகிறேன்!” என்றார். ஆனால் கிதியோன் அவருக்குப் பதிலாக, “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, நான் எவ்வாறு இஸ்ரவேலரை காப்பாற்றுவேன். மனாசே கோத்திரத்தில் எங்கள் குடும்பமே மிகவும் எளியது. எங்கள் குடும்பத்தில் நான் இளையவன்” என்றான். கர்த்தர் கிதியோனிடம், “நான் உன்னோடிருக்கிறேன்! எனவே மீதியானியரை நீ தோற்கடிக்க முடியும்! ஒரே மனிதனை எதிர்த்துப் போரிடுவது போலவே உனக்குத் தோன்றும்” என்றார். கிதியோன் கர்த்தரிடம், “உமக்கு என் மேல் கருணை இருந்தால் என்னிடம் பேசுகிறவர் நீர்தான் என்பதற்கு ஏதேனும் சான்று காட்டும். இங்கேயே தயவுசெய்து காத்திரும். நான் திரும்பி வரும்வரை எங்கும் போகாதிரும். நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உம்முன் வைக்க அனுமதியும்” என்றான். கர்த்தர், “நீ வரும்வரைக் காத்திருப்பேன்” என்றார். கிதியோன் உள்ளே சென்று, ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சமைத்தான். 20 பவுண்டு மாவை எடுத்துப் புளிப்பின்றி அப்பம் செய்தான். இறைச்சியை ஒரு கூடையிலும், அது வேகப் பயன்படுத்திய தண்ணீரை ஒரு பானையிலும் எடுத்துக் கொண்டான். இறைச்சியையும், இறைச்சியை வேகவைத்த தண்ணீரையும், புளிப்பற்ற அப்பத்தையும் கிதியோன் கொண்டு வந்தான். கர்வாலி மரத்தின் கீழே அமர்ந்திருந்த கர்த்தருக்கு அந்த உணவைக் கிதியோன் கொடுத்தான். தேவனுடைய தூதன் கிதியோனை நோக்கி, “இறைச்சியையும், புளிப்பற்ற அப்பத்தையும் அங்கேயிருக்கும் பாறையில் வைத்து அதன் மீது தண்ணீரை ஊற்று” என்றார். கிதியோனும் அவ்வாறே செய்தான். கர்த்தருடைய தூதன் இறைச்சியையும் அப்பத்தையும் தன் கையில் வைத்திருந்த கைத்தடியின் முனையால் தொட்டான். பாறையிலிருந்து நெருப்பு தோன்றி இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிட்டது! பின் கர்த்தருடைய தூதனும் மறைந்து போனான். அப்போது கிதியோன் தான் கர்த்தருடைய தூதனோடு பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். எனவே கிதியோன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நான் கர்த்தருடைய தூதனை நேருக்கு நேராகச் சந்தித்தேன்!” என்று சத்தமிட்டான். ஆனால் கர்த்தர் கிதியோனிடம், “அமைதியாயிரு! பயப்படாதே! நீ மரிக்கமாட்டாய்!” என்றார். ஆகையால் கிதியோன் அங்கு தேவனை ஆராதிப்பதற்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். கிதியோன் அப்பலிபீடத்திற்கு “கர்த்தரே சமாதானம்” என்று பெயரிட்டான். ஓப்ரா நகரில் அப்பலிபீடம் இன்றும் உள்ளது. அபியேசர் குடும்பம் வாழும் இடம் ஓப்ரா ஆகும்.
நியாயாதிபதிகள் 6:12-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும். நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார். உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆணத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலி மரத்தின்கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான். அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால். அவன் கண்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான். அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.