நியாயாதிபதிகள் 16:1-17

நியாயாதிபதிகள் 16:1-17 TAOVBSI

பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான். அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுவதும் பேசாதிருந்தார்கள். சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பெயர்த்து, தன் தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்து கொண்டுபோனான். அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது. உன்னைச் சிறுமைப்படுத்த, உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள். பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை. அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக்கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்: பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என் தலைமயிரின் ஏழுஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னிவிட்டால் ஆகும் என்றான். அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும் கூடப் பிடுங்கிக்கொண்டு போனான். அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்று விசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி, இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போகும்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

நியாயாதிபதிகள் 16:1-17 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்