ஏசாயா 21
21
21 அதிகாரம்
1கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல் காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்து வருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.
2கொடிய தரிசனம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்பண்ணி, பாழாக்குகிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றிக்கைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியப்பண்ணினேன்.
3ஆகையால், என் இடுப்பு மகாவேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன்.
4என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.
5பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள், குடியுங்கள், பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள்.
6ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
7அவன் ஒரு இரதத்தையும், ஜோடுஜோடான குதிரைவீரனையும், ஜோடுஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து:
8ஆண்டவரே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்.
9இதோ, ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான்.
10என் போரடிப்பின் தானியமே, என் களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன்.
11தூமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக்கேட்க;
12அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான்.
13அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள்.
14தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.
15அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும், நாணேற்றின வில்லுக்கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
16ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போகும்.
17கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
ஏசாயா 21: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.