ஏசாயா 1:19-31

ஏசாயா 1:19-31 TAOVBSI

நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர். உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது. உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை. ஆகையால் சேனைகளின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது; ஓகோ, நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன். நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய். சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டுபோவார்கள்; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள். நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள். இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள். பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோகும் என்று சொல்லுகிறார்.