ஏசாயா 1:19-31
ஏசாயா 1:19-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் இணங்கிக் கீழ்ப்படிந்தால், நாட்டின் சிறந்த பலனைச் சாப்பிடுவீர்கள். ஆனால் எதிர்த்துக் கலகம் பண்ணுவீர்களாயின், நீங்கள் பட்டயத்துக்கு இரையாவீர்கள்.” யெகோவாவின் வாயே இவற்றை சொல்லியிருக்கிறது. பாருங்கள், எவ்வளவு உண்மையாய் இருந்த பட்டணம் இப்படி வேசியாயிற்று! முன்பு அது நியாயத்தால் நிரம்பியிருந்தது; நீதி அதில் குடியிருந்ததே, இப்பொழுதோ அது கொலைகாரரின் வசிப்பிடமாயிருக்கிறது. உன் வெள்ளி களிம்பாகிவிட்டது, உன் சிறந்த திராட்சை இரசம் தண்ணீர் கலப்பாயிற்று. உனது ஆளுநர்கள் கலகக்காரர், திருடரின் தோழர்; ஒவ்வொருவரும் இலஞ்சத்தை விரும்பி, வெகுமதியை நாடி விரைகிறார்கள். அநாதைகளுக்கு நியாயம் செய்யாதிருக்கிறார்கள்; விதவையின் வழக்கை எடுத்துப் பேசாதிருக்கிறார்கள். ஆகவே, யெகோவா, எல்லாம் வல்ல யெகோவாவாகிய இஸ்ரயேலின் வல்லவர் அறிவிக்கிறார்: “ஓ! நான் என் எதிரிகளிடமிருந்து விடுதலையடைந்து என் பகைவர்களைப் பழிவாங்குவேன். நான் என் கரத்தை உனக்கு எதிராகத் திருப்புவேன்; நான் உனது களிம்பு முற்றிலும் நீங்க உன்னை உருக்கி, உன் அசுத்தங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துவேன். முந்தைய நாட்களில் இருந்ததுபோல், நான் உன்னுடைய நியாயதிபதிகளைத் திரும்பவும் அமர்த்துவேன். ஆரம்பத்தில் இருந்ததுபோலவே உன் ஆலோசகர்களையும் மீண்டும் தருவேன். அதன்பின் நீ நீதியின் நகரம் என்றும், உண்மையுள்ள நகரம் என்றும் அழைக்கப்படுவாய்.” சீயோன் நியாயத்தினாலும், அங்கு மனந்திரும்புவோர் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். ஆனால் கலகக்காரரும் பாவிகளும் ஒருமித்து நொறுக்கப்படுவார்கள்; யெகோவாவைவிட்டு விலகுகிறவர்களோ அழிந்துபோவார்கள். “நீங்கள் விருப்பத்துடன் வணங்கிய புனித கர்வாலி மரங்களின் நிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் வழிபாட்டுக்கெனத் தெரிந்துகொண்ட தோட்டங்களினிமித்தம் அவமானப்படுவீர்கள். நீங்கள் இலையுதிர்ந்த கர்வாலி மரம் போலவும், தண்ணீரில்லாத தோட்டம்போலவும் இருப்பீர்கள். வலிமையுள்ளவன் காய்ந்த கூளம் போலவும் அவனுடைய செயல் ஒரு நெருப்புப்பொறியும் போலாகி, இரண்டும் அணைப்பாரின்றி ஏகமாய் எரிந்துபோகும்.”
ஏசாயா 1:19-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீங்கள் மனப்பூர்வமாகச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைச் சாப்பிடுவீர்கள். மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களானால் பட்டயத்திற்கு இரையாவீர்கள்; யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று. உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போனது! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிமக்கள் கொலைபாதகர்கள். உன் வெள்ளி களிம்பானது; உன் திராட்சைரசம் தண்ணீர்க்கலப்பானது. உன் பிரபுக்கள் முரடர்களாகவும், திருடர்களின் நண்பர்களுமாக இருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் லஞ்சத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரிப்பதில்லை; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை. ஆகையால் சேனைகளின் யெகோவாவும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்கிறதாவது; ஓகோ, நான் என் எதிரிகளில் கோபம் தணிந்து, என் பகைவர்களை பழிவாங்குவேன். நான் என் கையை உன் பக்கமாகத் திருப்பி, உன் கலப்படம் நீங்க உன்னைச் சுத்தமாகப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரர்களை முதலில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய். சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாக நொறுங்குண்டுபோவார்கள்; யெகோவாவை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள். நீங்கள் விரும்பி தெரிந்துக்கொண்ட கர்வாலிமரங்களுடைய தோப்புகளுக்காக வெட்கப்படுவீர்கள்; இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப்போலவும் இருப்பீர்கள். பராக்கிரமசாலி சணல்குவியலும், அவன் செயல் அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அணைப்பாரில்லாமல் அனைத்தும் வெந்துபோகும் என்று சொல்கிறார்.
ஏசாயா 1:19-31 பரிசுத்த பைபிள் (TAERV)
“நான் சொல்கிறவற்றை நீங்கள் கவனிப்பீர்களேயானால், இந்நாட்டிலிருந்து நன்மைகளைப் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் கவனிக்க மறுத்தால் எனக்கு எதிராவீர்கள். உங்கள் பகைவர்கள் உங்களை அழிப்பார்கள்” என்றார். கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார். “தேவன் கூறுகிறார். எருசலேமைப் பாருங்கள். அது என்னை நம்பி என்னைப் பின்பற்றிய நகரமாக இருந்தது. அது இன்று ஒரு வேசியைப்போன்று மாறக் காரணம் என்ன? இப்போது அவள் என்னைப் பின்பற்றவில்லை. எருசலேம் முழுவதும் நீதி குடியிருந்தது. எருசலேமில் வாழ்கின்ற ஜனங்கள் தேவனுடைய விருப்பம்போல வாழவேண்டும். ஆனால் இப்போது, அதில் கொலைக்காரர்கள் வாழ்கிறார்கள்.” நன்மை என்பது வெள்ளியைப்போன்றது. ஆனால் உங்கள் வெள்ளி இப்போது பயனற்றதாகிவிட்டது. தண்ணீருடன் கலந்த திராட்சைரசத்தைப்போல உங்களுடைய நன்மை இப்போது பலன் குறைந்து போயிற்று. உங்கள் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் கலகக்காரர்களாகவும் கள்ளர்களின் நண்பர்களாகவும் இருக்கின்றனர். உங்கள் அதிபதிகளும், நியாயாதிபதிகளும் இலஞ்சத்தை எதிர்ப்பார்க்கின்றனர். தீமை செய்வதற்குப் பணம் பெறுகிறார்கள். உங்கள் அதிபதிகளும், நியாயாதிபதிகளும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி செய்வதில்லை. உங்கள் அதிபதிகளும் நியாயாதிபதிகளும் கணவனை இழந்த விதவைகளின் தேவைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. இத்தனையும் செய்ததால் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர், இஸ்ரவேலின் வல்லமை மிக்க தேவன் கூறுகிறதாவது: “என் பகைவர்களே, உங்களைத் தண்டிப்பேன். உங்களால் எனக்குத் தொல்லை கொடுக்கமுடியாது. ஜனங்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்த புடமிடுவதுபோல உங்கள் தீமைகளை உங்களிடமிருந்து விலக்குவேன். உங்களிடமிருந்து பயனற்றவற்றை நீக்குவேன். ஆரம்ப நாட்களில் உங்களிடமிருந்த நீதிபதிகளைப்போன்றவர்களை மீண்டும் கொண்டு வருவேன். உங்களது ஆலோசகர்கள் முன்பிருந்த ஆலோசகர்களைப்போல இருப்பார்கள். அப்போது நீங்கள் இதனை ‘நல்ல நம்பிக்கைக்குரிய நகரம்’ என்று அழைப்பீர்கள்” என்றார். தேவன் நல்லவர். அவர் நீதியானவற்றை மட்டுமே செய்வார். அவர் சீயோனையும் அதற்குத் திரும்பி வருகிறவர்களையும் மீட்பார். ஆனால் அனைத்து குற்றவாளிகளும் பாவிகளும் அழிக்கப்படுவார்கள். (அவர்கள் கர்த்தரைப் பின்பற்றாதவர்கள்.) நீங்கள் தொழுதுகொள்வதற்கு தேர்ந்தெடுத்த கருவாலி மரங்களையும் தோப்புகளையும் கண்டு வருங்காலத்தவர்கள் அவமானப்படுவார்கள். இது நிறைவேறும். ஏனென்றால் நீங்கள் காய்ந்துபோன கருவாலி மரங்களைப்போன்றும் தண்ணீரில்லாத சோலையைபோன்றும் அழிக்கப்படுவீர்கள். வலிமையான ஜனங்கள் காய்ந்து சிறு மரத்துண்டுகளைப்போலாவார்கள். வல்லமையுள்ள ஜனங்களும் அவர்களின் தீய செயல்களும் எரிந்துபோகும். அவர்களுடைய தீய செயல்கள் தீப்பொறிகள் போன்று இருக்கும். அதை எவரும் அணைக்க முடியாது.
ஏசாயா 1:19-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர். உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது. உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை. ஆகையால் சேனைகளின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது; ஓகோ, நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன். நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய். சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டுபோவார்கள்; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள். நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள். இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள். பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோகும் என்று சொல்லுகிறார்.