எபிரெயர் 8
8
8 அதிகாரம்
1மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,
2பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
3ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது.
4பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;
5இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
6இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.
7அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.
8அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது.
9அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
11அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை.
12ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
எபிரெயர் 8: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.