எபிரெயர் 12:18-29

எபிரெயர் 12:18-29 TAOVBSI

அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும், எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள். மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது. நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம்பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள். பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார். இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்