தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.
அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான்.
எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.
அனுப்பாவிட்டால். நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான் என்றான்.
அதற்கு இஸ்ரவேல்: உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள் என்றான்.
அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்கள் வம்சத்தையும் குறித்து விபரமாய் விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள்.
பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப் போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும்.
அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக.
நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த் திரும்பி வந்திருப்போமே என்றான்.
அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்த தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைப்பிசகாய் வந்திருக்கும்.
உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்துக்கு மறுபடியும் போங்கள்.
அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்.
அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்.
பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான்.
அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதரை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான்.
தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக்கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி,
யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரனண்டையிலே சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி:
ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்துபோனோமே;
நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம்.
மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டு வந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள்.